ஞாயிறு, 13 மே, 2012

மௌனமாய் பேசும் மனம்...!

நதியைத் தேடி கடலலை
எட்டி எட்டிப் பார்க்குதோ..?
மயிலிறகை அள்ளிச் செல்ல
மேகம் மழையை அனுப்புதோ..?
மோக மொழிகள் தீர்க்கவே
மலரும் மணத்தைப்.. பரப்புதோ..?

ஊமை மனங்கள் மழையில்
நனைந்து உல்லாசம் தேடுதோ..?
உணர்வுக்கு வடிகாலாய்...!
நனைந்த குயிலின் இன்னிசையோ..?
இருட்டு வானில் வெண்ணிலவை...
நட்சத்திரங்கள் தேடுதோ..?

கதவுகள் திறந்து...ஜன்னல் திறந்து..
கூரையும் திறக்குமோ...!!
சுதந்திரம் தேடுமோ..
உயிர் கூட்டில் ...பதுங்கும் புறா..!

தந்திரமாய்....யந்திரமாய்...
பத்திரமாய்..பழக்கி வைத்தோம்...!
இறுக்கிப் பிடித்தால் இறந்து விடும்..!
அகன்று பிடித்தால் பறந்து விடும்..

நமக்குள்  நாமே  காவலென ஆனோம்...
கடலும்..நதியும்..மலரும்...மனமும்..
தேடி..தேடி..தேடி...தேடி....
ஓடிக் களைத்த.. வேளை...

நதியின் நளினம் காணாக் கடல்...
கடலின் ஆழம் அறியா நதி..
மணம் நுகரா... மலர் கூட்டம்...
காற்று  அறியாது மணம்  போகும்  தூரம்..?

மனம் அறியுமோ தான் பறக்கும்  வேகம்..?
களைந்த பிறவிகள் எண்ணாத சட்டையாய்..
ஏதோத் தேடலில் இயற்கை சுழல....
மௌனமாய் பேசும் மனம்...!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக