பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதியின் மீசை முறுக்கிய
இந்தியா....
'பாருக்குள்ளே' அடங்கிக்
கிடக்கும் அவலங்கள்....!
அராஜக பூமியில்
அத்தனையும் விஸ்வரூபம்..
நாட்டில் நடப்பதெல்லாம்
ஊழல்களின் ராஜ்ஜியம்..!
லஞ்சம் ஒழிப்பு
என்று சொல்லியே
அதற்கும் ஒரு
கணக்குச் சொல்லி
கைகள் நீட்டும்
பிச்சைக்காரக் கூட்டம்...!
அரசாங்க சுங்கமும்
சுரண்டிச் சுரண்டி
அதிகாரிகள்
இல்லம் மட்டும்
சுரங்கமாகும் அதிசயம்..!
ஊழலுக்கு முகவரியாய்
கல்வி தரும் பள்ளிகள்
ஆலயங்கள் பக்திக்கல்ல
பாதாளம் வரை பாயும்
பச்சை நோட்டுக்கு ..!
ஆயுளைக் காப்பதற்கா
இங்கு பன்னாட்டு
பன்னாட்டு மருத்துவமனை
அங்கும் ஆயுள் காப்பீட்டின்
பேரில் உயிரைச்
சிறைப் பிடிக்கத்தானே?
வலை மருத்துவமனைகள் ..!
எது நகல்? எது போலி?
என்றறியாத வண்ணம்
எதிலும் கலப்படம்
உணவிலிருந்து மருந்து
வரை விஷங்களின்
உறைவிடம்...!
மருந்தைத் தின்றாலும்
உயிர் பிரியும்
அதிசயம்..!
திருட்டும் ஏமாற்றும்
வித்தை கற்ற
மனிதனாக நடமாடும்
நவீனம்..!
இருப்பவனுக்கு மட்டுமே
இங்கு இந்தியா
என்றாகிப் போன சட்டம்...!
ஆயிரம் உண்டிங்கு
ஜாதி என்றார்..அன்று..!
ஒரே ஜாதிப் பெயரில்
ஊரெல்லாம்
கலவரம் ஆரவாரம்
இன்று...!
நாற்காலியில்
காலில்லையோ?
கைகள் நீளாத
துறையில்லையோ?
வருங்காலத்துக்கு
வழி இல்லையோ?
இளைஞர் எவர்க்கும்
துணிவில்லையோ ?
ஆண்டாண்டு காலங்கள்
சிறையிருந்து செக்கிழுத்து
சித்திரவதை அனுபவித்து
பெற்றுத் தந்த சுதந்திரம்
நலங்கெட புழுதியில்
எறிதல் நியாயமா?
கப்பலுள் துளை
நீர் புகுமுன்
காப்பதே முறை....!
விழித்திடுங்கள் நண்பர்களே...
தோள் கொடுங்கள் தோழர்களே...
சுதந்திரச் சீமாட்டி
கலப்படத்தில் களையிழந்த
தள்ளாடும் மூதாட்டி..!
தாங்கியவளை கவனியுங்கள்
விரல் நுனியில்
அவள் தலையெழுத்து
அழித்தே எழுதிட
எழுந்திருங்கள் சிங்கங்களே..!
உழைக்கும் கரங்கள்
கடமை வீரர்
காலடி பட்ட புண்ணியபூமியிது
புதியதோர் உலகு செய்ய
களைகளை அழித்து
கதிர்செழிக்க கடமையென
'கைநாட்டில்' நம்
நம்பிக்கை நாட்டைத்
திருத்தி நிமிர்த்தி
நிகர் படுத்துவோம்....!
கூடுங்கள் நண்பர்களே.!
சுதந்திர வாகையைச்
சூட்டுங்கள் நண்பர்களே..!
தள்ளாடும் அன்னைக்கு
கைத்தடியாய் நமது
பங்கென்ன அதனைப்
பாங்குடனே உடனே
செய்திடுவோம்....காத்திடுவோம்..!
அருமை...
பதிலளிநீக்கு