"அழுவதைகேட்க
ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க
யாருமே இல்லை
ஏழைகள் வாழ
இடமே இல்லை
ஆலயம் எதிலும்
ஆண்டவன் இல்லை
காகித ஓடம்
கடலலை மீது
போவது போலே
மூவரும் போவோம்
தாயின் மடியும்
நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும்
காத்திடவில்லை"
கோமதி. மெல்லிய குரலில் பாடிக் கொண்டே அவளது பிஞ்சுப் பாதங்கள் கல்லையும் முள்ளையும் கடந்து செல்ல,தலையில் நிறைந்த கருவேலம் முள்ளு விறகுச் சுள்ளியைச் சுமந்தபடி....தனக்கு முன்னால் நடக்கும் அக்கா அன்னபூரணியைப் பின் தொடர்ந்து செல்கிறாள். தன் தலையில் அழுந்திக் கொண்டிருக்கும் காய்ந்த கருவேலம் முள்ளுச்சுள்ளிக் கட்டையைச் யை சரி செய்யும்போது...காலில் காக்கா முள்ளு கட்டை விரலைக் குத்திப் பதம் பார்க்க...பாடல் அங்கேயே அறுந்து தொங்கியது. " ஆ...அம்மா...என்று தலையில் ஒழுங்காக அடுக்கி இருந்த சுள்ளிகள் அனைத்தும் அப்படியே சரிய...தடுமாறியவளாக அவளும் முள் மேல் சரிந்து உட்கார்ந்ததும் மேலும் முட்கள் தொடையைப் பதம் பார்த்துக் கிழிக்க...வழிந்த ரத்தக் கோடுகள் "பாவம் நீ " என்றது.
என்னாச்சுடி கோமதி.....? திரும்பிய அன்னபூரணி...இவள் உட்கார்ந்திருந்த லட்சணத்தைப் பார்த்ததும்.... நெனைச்சேன்.... நீ பாடிண்டு ஆடீண்டு நடந்து வர அழகை ....! எங்கியாவது இப்படி எஞ்சின் ஆக்ஸிடெண்ட் ஆகி அந்தலை சிந்தலையா விழுந்து வைக்கப் போறேன்னு அப்பவே நேக்குத் தெரியும்...எல்லாம் என் தலையெழுத்து...ஏற்கனவே நேரமாச்சு....ன்னு நான் பதறிண்டு வரேன். இதுல நீ வேற,,நாம இருக்கறது என்ன நம்ம சொந்த அரண்மனை'ன்னு நினைச்சியா? ஆசிரமம்டி இது. அனாதைக் குழந்தைகளை ஆதரிக்கும் ஆசிரமம்...அந்த நினைப்பு எப்பவும் மனசோட இருக்கணும்.அம்மா நம்மளை இங்க விட்டுட்டுப் போகும்போது சொல்லிட்டுப் போனாளே ...ஞாபகம் இல்லையா ? உனக்குத் தெரியுமா ? தெரியாதா ? அன்னபூரணி கத்திக் கத்தி சொல்லிக் கொண்டிருந்தாள்.
என் கால் வலியில் எனக்கு அவள் பேசும் எதுவுமே காதில் விழவில்லை. என் கண் வழிந்து கொண்டிருந்த ரத்தக் கோட்டின் மீதும்...வாயை உஸ் ..உஸ் உஸ் ன்னு ஊதி கொஞ்சமா விரலில் எச்சிலைத் துப்பி அடிபட்ட இடத்தில் வைத்து தேய்த்துக் கொண்டேன்.ஒன்பது வயதுப் பெண்ணுக்கு வேறென்ன வைத்தியம் தெரியும்...? இதைத் தவிர...! ஏதோ ஒரு வாசனை வந்து மூக்கில் அடித்தது. ஹூம்......என்று முகம் சுழித்துக் கொண்டே.... அக்கா...காக்காமுள்ளு குத்திடுத்துடீ....இங்க பாரு ஒரே ரத்தம்......! என் முகம் பாவமாக அவளைப் பார்த்து அவளது கருணை கிடைக்காதா என்று ஏங்கியது.அவள் அம்மாவை வேற எனக்கு நினைவு படுத்தி விட்டுட்டாள் ...கண்களில் குளம் கட்டி ததும்பியது. "அம்மா" நீ எங்கே போயிட்டே..?..மனம் ஓலமிட்டது.இனி உன்னைப் பார்க்கவே முடியாதாம்மா..? காலில் வெள்ளி முலாம் பூசியது போல கூர்மையாய் ஈட்டி போல வரிசையா இருந்த முள்ளுக் கம்பு விரலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தது..அதைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருந்தது.
நாம இப்ப சீக்கிரமாப் போகலைன்னு வெய்யி...ராத்திரி அவா தர ரவா கஞ்சி கூட இன்னிக்கு இல்லைன்னு சொல்லிடுவா. அப்பறம் ரெண்டு பேரும் சேர்ந்து பட்டினி கிடக்க வேண்டியது தான். நேக்கு இப்பவே பசிக்குது. இப்ப நாம கொண்டு போற சுள்ளி அங்க போனதுக்கு அப்பறமாத் தான் அவா அடுப்பையே மூட்டுவா...தெரியாதா இது உனக்கு? இப்படி விழுந்து என் பிராணனை வாங்கறே நீ கோமதி. இப்ப எனக்கு மட்டும் என்ன ரெண்டு கையா இருக்கு...உன்னைத் தூக்கி விட..நீயே எப்படியாச்சும் பாலன்ஸ் பண்ணிட்டு எந்திரிச்சு வந்து சேரு..நான் போறேன்.என் பாரத்தை நான் அங்க போயி தான் இறக்கி வைக்கணும்..புரிஞ்சுதா? சொல்லிக் கொண்டு பதிலுக்குக் காத்திராமல் அன்னபூரணி ஓட ஆரம்பித்தாள் .
என்னை இப்படித் தனியா விட்டுட்டு ஒடாதேடீ அக்கா...! கொஞ்சம் நில்லுடி நானும் வந்துடறேன்...!
என் குரல் அவளைத் துரத்தி மூச்சு வாங்கித் தேய்ந்தது. அன்னபூரணி அந்தக் குரலுக்குக் காது கொடுக்காமல் ஓடிக் கொண்டிருந்தாள்.ஒரு பெரிய மாட்டு வண்டி சுமக்க வேண்டிய சுள்ளியை இந்தச் சின்னஞ்சிறு தலைகள் சுமந்து சுமந்து சீத்தலைச் சாத்தனார் மாதிரி அங்கங்கே முள்ளுக் குத்திக் கிழித்து புண்கள். தலையில் சீப்பை வைக்கும் போது தான் அந்த வலிபிராணன் போகும்.
அக்கா.... கொக்கா ன்னு இனிமேல் இவளோட நான் பேசினேன்னாப் பாரு....! மனசுக்குள் சொல்லிக் கொண்டே நான் ஒரு கையால் ஒரு காக்காய் முள்ளை ஒடித்து கால் கட்டை விரலில் வைத்து ஒரு நெம்பு நெம்பி எடுக்க காலைப் பதம் பார்த்த அந்த முள்ளுக் கம்பு தெறித்து வெளியே போய் விழுந்தது. அம்மாடி...ஒரு வழியா முள்ளை எடுத்தாச்சு...என்றபடி கீழே சிதறிக் கிடந்த சுள்ளிகளை ஒன்றாக சேர்த்து வாரி எடுத்து எம்பி என் தலையில் வைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் எம்பி மேலே தூக்கி விறகுச் சுள்ளியை இறுகப் பற்றியபடி காலை ஒரு உதறு உதறி விட்டு நானும் பூரணி ஓடிய திக்கைப் பார்த்து விரைந்தேன். இல்லையில்லை...பின்னால் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் துரத்த ஓடினேன், ஓடினேன், மூச்சு மூட்ட ஓடினேன்.
திக்...திக்...திக்...திக்....என்று இதயக் கடிகாரம் அடித்துக் கொண்டது. பசி வயிற்றைப் பிராண்டியது.தாகம் தொண்டையை அடைத்தது. கண்கள் இருட்டைத் துழாவியது.
பூரணி தலையிலிருந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டு தனியே கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தாள் .அவளை ஹாஸ்டல் வார்டன் திட்டிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.
என்னாச்சுடி அக்காளுக்கும் தங்கச்சிக்கும்..., பல்லாங்குழி விளையாடி விட்டு வந்தீங்களா ? இம்புட்டு நேரமா இந்தச் சுள்ளியக் கொண்டார...? லேட் ஆனா ராத்திரி கெடைக்குற கஞ்சித் தண்ணீல கைய வெச்சுருவோமுன்னுட்டு தெரியும்ல...பெறவு எதுக்கு இப்படி வருவ..? எங்கடி உன் தங்கச்சி...? விறகு இல்லைன்னா விடுதில சோறே பொங்காது எல்லாரும் பட்டினி கிடக்கணுமா ? ம்ம்ம்ம்ம்ம்..வாயில என்ன கொளுக்கட்டையா வெச்சிருக்கே..? சொல்லுடி .
அவ கால்ல முள்ளு குத்திடுத்து...அக்கா. எடுத்துப் போட்டுட்டு வருவா....! அன்ன பூரணி மெல்லிய குரலில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் பயத்துடன்.
அதற்குள் நான் அங்கு வந்து நின்றவுடன்.....அன்னபூரணியின் பார்வை என்னை கோபத்தில் எரித்து விடுவது போல இருந்தது. இத்தனைக்கும் நீ தான் காரணம்...என்பது போல.
ஏய்...பாப்பாத்தி..நீ எங்கிட்டு கோலத்துல புகுரவ...இங்கன வா புள்ள.....முள்ளுக் குத்திருச்சு...கல்லு குத்திருச்சுன்னு காதுல கம்மல் மாட்டுறியாக்கும் நீங்க ரெண்டு பேருமே இன்னிக்குப் பார்த்து ஒரு மணி நேரம் லேட். அதுக்கு என்ன பனிஸ்மெண்டு தெரியுமாடி பாப்பாத்தி ?
தெரியாது..நாங்க இந்த ஆசிரமத்துக்குப் புதுசா வந்திருக்கோம். .வந்து ரெண்டு வாரம் தான் ஆறது .ரெண்டு பேரும் கோரஸாகச் சொன்னோம்.
அதான் தெரியுமே.....!இன்னிக்கு ராவுல ரெண்டு பேத்துக்கும் கஞ்சி கிடையாது...ஸ்டடி பீரியர்டில் ...ரெண்டு பேரும் முழங்கால்படி போட்டுத் தான் படிக்கணும்......அதுவரைக்கும் இங்கனேயே நில்லுங்க எங்கிட்டும் போகக் கூடாது. அசைந்தீங்கன்னா அம்பது பைசா அபராதம். சொல்லிவிட்டுப் போனவள்...வார்டனோட அசிஸ்டென்ட். என்பதைப் புரிந்து கொண்டோம்.
அசிஸ்டன்ட்டே இப்படின்னா....மெயின் எப்படி ஷாக் அடிக்கும்.? நினைத்தேன் வந்தாய் நூறு வயதுன்னு....கையோட கூடவே பிரம்பையும் ஏந்திக் கொண்டு மதுரைவீரன் மாதிரி வந்தாள் அவள்.
வார்டன்.!
வரும்போதே.....எவடீ அவ? குரல் மலையிலிருந்து உருண்டு வரும் பாறாங்கல்லின் ஓசையைப் போல பயம்மா இருந்தது எங்களுக்கு. இருவரும் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு நின்றோம். என் பிஞ்சுக் கைகளை என் அக்கா கெட்டியாக இறுக்கிப் பிடித்தபோது...ஏனோ ஒவ்வொரு விரலும் வலியாய் வலித்தது. ஸ்ஸ்ஸ்ஸ் ....என்று என்னையறியாமல் முனகினேன். பிடி தளர்ந்தது. மெல்லக் குனித்து கைவிரல்களைப் பார்த்தேன்...சின்னச் சின்னக் குருக்கள் விரலெங்கும் என்னவாயிருக்கும்...? ரெண்டு கையாலும் ஒன்றை ஒன்று தேய்த்துப் பார்க்கிறேன்.
அப்போதே..நச்சென்று ஓங்கி விளாரி வீசிய பிரம்பின் நுனி என் விரல்களை வேகத்தோடு மோதிச் சென்றது...இரண்டு கைகளும் தனியாகப் பிரிந்து துடி துடித்து உதறிக் கொண்டது.. இன்னொரு முறை ஓங்கிய போது ......."அவளை அடிக்காதீங்க...என்னை அடிங்க என்று என் அக்கா குறுக்கே கையை நீட்டியதால் அடுத்த சுளீர் அவளைத் தாக்கி அமைதியானது. இருவர் கண்களிலும் வலியின் மொழி அலறியது.
பிரம்பைப் பிடித்த மதுரை சூரி......கர்ண கடூரமாகச் சிரித்துக் கொண்டே நடந்தாள் . .நாங்கள் நடு நடுங்கினோம்.எங்கள் பசி எங்களை விட்டுப் பறந்தது. மறந்து போனால் தேவலாம் என்று நாங்கள் நினைத்தோம்...அவர்கள் கொஞ்சமும் மறக்காமல் இரண்டு மணி நேரம் முழங்கால் படி போட வைத்து முட்டிச் சிப்பியை தட்டையாக்கி விட்டிருந்தார்கள். இதென்ன.... படிக்க வைக்கும் ஆசிரமமா இல்லை அடிமைகள் ஆசிரமமா...? என்று நினைத்தவளாக , எங்களை இப்படி ஒரு பூதத்திடம் பிடிச்சுக் கொடுத்த அம்மாவை நினைத்து நான் இரவெல்லாம் அழுதேன். பயத்தில் படுத்த பாயெல்லாம் ஈரமானது. எழுந்து உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன்...அக்கா.....இங்க பாரேன்....
ஈரமாயிடுச்சு......எனது சிணுங்கல் .
அப்படியே பாயை காலால் ஒரே தள்ளு தள்ளி, என்னை அவளது பக்கத்தில் சேர்த்து இழுத்துக் கொண்டாள் ...."வாயைத் திறக்காதே...வார்டன் முழிசுண்டா...பிரம்பால சாத்துவா.."என்று சொல்லி என் வாயை அவளது கையால் இறுக்கப் பொத்தினாள் . அழுகையை உள்ளே முழுங்கியபடியே எப்போது விடியும்..? என்று நினைத்துக் கொண்டே கண் மயங்கினேன். மஞ்சள் காட்டின் குருத்து மஞ்சள் வாசனை காற்றோடு வந்து மோதி இதமளித்தது. குளிர் பனிக் காற்றுக்கு கைகள் தானாக நெஞ்சை இறுக்கிச் சுருண்டது.
காலைச் சூரியன் கண் விழிக்குமுன்னே ..."கொக்கரக்கோ".....என்ற சேவலில் குரல் பூபாளமாக ஒலித்தது. தூரத்து மலையிலிருந்து வந்த தென்றல் காற்று சிலீரென்று முகத்தில் முத்தமிட்டது. லேசாகக் கண் விழித்துப் பார்த்தவள், நல்லவேளை இன்னும் விடியலை.என்று இறுக்கிக் கண்களை மூடிக் கொண்டேன்.
டீ ...எழுந்திரு...! எல்லாரும் எழுந்துண்டு குளிக்கப் போயாச்சு...நாம ரெண்டு பேரும் தான் லேட்டு.வா..எழுந்து ஓடிடலாம்.என்னை உலுக்கும் அக்காவை அரைக் கண் திறந்து ஓரக் கண்ணால் ஒரு பார்வை பார்த்து விட்டு "ஒரே குளிரா இருக்கு..போர்வை போத்தி விடேன்.." என்று முனகும்போது.
"மூத்திரப் பாயைத் தான் போட்டு போத்தணும்" கடங்காரி...எழுந்துருடி....உன்னால நேக்கு....! நேத்து ராத்திரி 'கஞ்சி' போச்சு...!.இன்னைக்கு கார்த்தால 'களியும்' போகப் போறது..
இதைக் கேட்டதும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து அக்காளின் பின்னாடியே ஓடினேன் இன்னும் புலராத காலை வேளை .மார்கழி மாச பனிக் காலம். மதுரையில் 'இருந்திருந்தால் இந்த நேரம் தெய்வ நெறிக் கழகத்தில்' 'விசாலி மாமி'
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
என்று திருப்பாவை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்திருப்பார். முதல் ஒரு வாரம் முழுதும் சமத்தா போயிண்டு தான் இருந்தோம். திடீர்னு என்ன ஆச்சோ வீட்டில் ஒரே சண்டை தகராறு...அம்மா மாமாவையும் பாட்டியையும் கோவிச்சுண்டு எங்க ரெண்டு பேரையும் மட்டும் இங்க கொண்டு வந்து விட்டுட்டு "சமத்தா இருக்கணும்...நான் அப்பறமா வந்து பார்த்துப்பேன் " என்று சொல்லும்போது தான் எனக்குள் ஒரு உணர்வு...உந்தித் தள்ள..."நான் இங்க இருக்க மாட்டேன்...என்னையும் கூட்டிண்டு போ ..நானும் வருவேன்.உன்கூட "என்ற கதறலால்.....வார்டன் அப்படியே என்னை கட்டாகத் தூக்கி கொடிக் கம்பத்தில் கட்டி வைத்து.."இந்தாம்மா நீ போ " என்று என் அம்மாவிடம் சொல்லவும், என் கதறல் எனக்கு மட்டுமே சொந்தமாக்கிவிட்டு அம்மா தன் நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு அங்கிருந்து என்னைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு என் பார்வையிலிருந்து அந்தப் பெரிய கேட்டைத் தாண்டி மறைந்தே போனாள் .வெறிச்சென்ற கேட்டைத் தாண்டி தூரத்தில் பெரிய பெரிய மலைகள் பயமுறுத்தியது.
அம்மாவின் நீளப் பின்னலும், வெளிர் நீலப் புடவையும் மட்டும் மங்கலாகக் கண்ணுக்குள் நிழலாடி நினைவில் அழுத்தமாக பதிந்து போனது. அம்மா திரும்பி என்னைப் பார்த்த போது நிச்சயம் எனது விரித்த இரண்டு கைகளும் அவளது கண்களில் பட்டிருக்கும். இருந்தும் வந்த காரியம் வெற்றி கரமாக முடித்து விட்டதாக நினைத்துக் கொண்டு நிம்மதியோடு போயிருப்பாள் என்று எண்ணத் தோன்றியது.
கோமதி...நான் இருக்கேன் துணைக்கு. அழாதே இது ஸ்கூல்..நாம இங்க படிக்கத் தான் வந்திருக்கோம்..என்று என் அக்கா பொறுப்பாக எனக்குச் சொன்ன எந்த சமாதானமும் என்னிடம் தோற்றுப் போனது.
" பட்டுப்பூச்சியக்கா..." இந்த ரெண்டும் தான் இப்பவும் லேட்டு...என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல் தலையில் ணங் கென்று ஒரு குட்டு கொட்டி விட்டுத் தான் நகர்ந்தாள் அந்த அசிஸ்டன்ட்..அந்த வார்டனுக்குப் பேரு பட்டுப்பூச்சியக்காவாம்...!அந்த சோகத்திலும் நேக்குச் சிரிப்பு தான் வந்தது. அந்த கர்ண கடூரிக்கு இப்படி ஒரு சாதுவான பேரை வெச்சவர் யாராயிருக்கும்? என் கண்ணுக்கு அவள் பூதகியாகத் தெரிந்தாள். சின்ன பூதகி கொட்டியதில் வலித்து என் கண்களில் கண்ணீர் ... !
சின்ன நீரோடை சல சல வென்ற சத்தத்துடன்....பல கிளைகள் விட்டு ஓடிக் கொண்டிருந்தது.
ஜில்லென்ற தண்ணீர் மனசுக்குள் புத்துணர்வைத் தர அக்காவும் நானும் ஆனந்தமாகக் குளித்தோம் அந்தப் புது அனுபவத்தில் லைஃப் பாய் சோப்பின் வித்தியாசமான மருந்து மணமும் "ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது லை ஃ ப் பாய்...லை ஃ ப் பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம்...
லைஃப்பாய்..." என்று கடைசியாப் பார்த்த சினிமா விளம்பரம் மனதில் ஓடவிட்டேன்.....மனசுக்கு ஏதோ ஒரு ரம்யத்தைத் தந்தது. 'இது நல்லாருக்குல்ல' என்று முதல் முறையாக சிரித்தேன்.பக்கத்தில் இருந்த பெண் உடம்பெல்லாம் மணலைப் பூசிக் கொண்டு குளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் "என்னதிது...மண்ணைப் பூசிட்டு குளிக்கிறீங்க?" என்று அப்பாவியாகக் கேட்கும் போது ..."நாங்களும் சோப்புப் போட்டுத் தான் குளிப்போம்....சோப்பு கரைஞ்சு போற வரைக்கும்..அதுக்குப் பெறவு மண்ணு தான் சோப்பு...உனக்கும் சோப்பு கரையிர வரைக்கும் தானே ...?" அவள் வெள்ளந்தியாகச் சொல்லிவிட்டு அந்த ஓடையில் குதித்து மறைந்தாள் .
ஓ ...இதெல்லாம் கூட இருக்கா..? என்ன செய்யப் போறோம்...அம்மா இப்படியெல்லாம் இருக்க வேண்டியிருக்கும்னு சொல்லவே இல்லையே...என் சிறிது நேரத்துக்கு முன்பு இருந்த சந்தோஷம் போன இடம் தெரியவில்லை.
மெல்ல வெளுத்த வானமும். ஈரம் சொட்ட சொட்ட குளிரில் நடுங்கிய படியே துவைத்த துணிகளை தோளில் போட்டபடி மணலில் ஈரப் பாதம் பதிய நடந்து போகையில் வீட்டை விட இந்த இடம் பிடித்திருந்தது எனக்கு. இப்போ அம்மா என்ன செஞ்சுண்டு இருப்பாளோ ..?
நாங்கள் இருக்கும் அறையை நெருங்கியதும் தான் மனசுக்குப் புரிந்தது...அம்மா கொடுத்து விட்டுப் போன கொழும்புத் தேங்காய் எண்ணெய் பெரிய ஹார்லிக்ஸ் பாட்டில் நிறைய வழிய வழிய இருந்தத எண்ணெய் குளிருக்கு நெய்யாக உறைஞ்சு இருந்ததை எப்படியோ ஹாஸ்டல் வார்டன் எங்கள் பெட்டியில் இருந்து எடுத்து தனது தலைக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்க....மொத்த குழந்தைகளும் "அக்கா...எனக்குக்கா...அக்கா...எண்ணெய் .எனக்குக்கா...என்று ஒத்தைக் கையை நீட்டியபடியே அவர்களைச் சுற்றி சப்தமிட்ட படி தலைக்கு எண்ணெய் கேட்க...ஒரே வேளையில் அந்த 'பாட்டில் எண்ணெய்' முழுதும் காலியாகிப் போனது
அக்கா...அந்த பாட்டில் எண்ணெய் நமக்கு அம்மா கொடுத்து விட்டது ..இப்போ காலியாயிடுத்தே..அப்போ நமக்கு எண்ணைய் வேணும்னா என்ன பண்றது? நான் அக்காவிடம் கேட்கிறேன்.
எண்ணையாவது ....புண்ணாக்காவது......வாயைத் திறக்காதே.இங்கல்லாம் இப்படித் தான் போல.. நம்ம அம்மாவுக்குத் தான் இதெல்லாம் தெரியலை..என் அக்கா அன்னபூரணி என்னைவிட ஐந்து வயது பெரியவள். அவள் எது சொன்னாலும் சரியா இருக்கும்.அதனால் நான் வாயை மூடிக் கொண்டேன்.இல்லாவிட்டால் நான் வீட்டில் கேட்கும் கேள்விக்கு யாரும் பதில் சொல்லத் திண்டாடுவார். தோற்றுப் போவதைத் தாங்காமல் "வாயாடி வாயை மூடுடி " என்று அதட்டி என்னைத் தட்டி வைப்பார்.
எங்கள் தலை நாளடைவில் பரட்டையானது....எண்ணையில்லாமல் செம்பட்டையானது. முதுகை மொத்தமாக மறைத்த கூந்தல்....இற்று அறுந்து மெலிந்து ஈர்குச்சியானது. அம்மா இப்போ வந்து எங்களைப் பார்த்தால் அடையாளம் தெரியாமல் திரும்பிப் போவாள்...போகட்டும்....அம்மா இனி வரவே வேண்டாம். எங்களை வேண்டாம்னு உதறிட்டு போனவளுக்கு இங்கே யார் இருக்கான்னு வருவா? இனிமேல். எனக்கு அம்மாவும் இல்லை...அப்பாவும் இல்லை....அவா என்ன சொல்றது...நானே சொல்றேன்...நீங்க யாரும் எனக்குத் தேவையில்லை..என் மனசுக்குள் ஒரு வைராக்கியம் வேல் பிடித்தது எழுந்து நின்றது. எங்கிருந்தோ தூரத்தில் மெல்லிய பாடல் ஒலித்தது...காதை மிகத் துல்லியமாக தீட்டிக் கொண்டு கேட்கிறேன்.
"எனக்கும் இடம் உண்டு....அருள் மணக்கும்
முருகன் மலரடி நிழலில்...எனக்கும் இடம் உண்டு...
நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சில் கொடுத்து நிகழ்காலம்
வரும் காற்றில் அணையா சுடர் போலும்
இனி கந்தன் தருவான் எதிர்காலம்..."
ஆஹா.....அன்று முதல் முருகன் எனக்கு மானசீகத் தந்தையாக ஆகிப் போனான். முருகா...என்னை எப்படியாவது இந்த சிறையிலிருந்து சுதந்திரமாப் பறக்க விடேன்...அதோ.. அந்தக் கிளியைப் போல என்று மானசீகமாக வேண்டிக் கொண்டேன் .
ஒரு இருபது குழந்தைகள் கைகளில் விளக்குமாரோடு நின்று கொண்டு அந்தப் பெரிய மைதானந்தை அங்கு உதிர்ந்து கிடந்த புளிய மர ,வேப்ப மர காய்ந்த இலைகளைப் பெருக்கி அள்ளிக் கொண்டிருந்தனர்.. காலையில் வேறு இரண்டு பெண்கள் தலையில் சுள்ளி விறகோடு ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.நேற்று நாங்கள் அனுப்பப் பட்டிருந்தோம்...இன்று இவர்கள்.
ஏதோ புரிந்தது போலிருந்தது எனக்கு. இங்கு பிரித்துப் பிரித்து வேலைகள் செய்ய வேண்டும். அந்த இடம் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் பகுதி மைதானம் ..அங்கங்கே பெரிய பெரிய புளிய மரங்கள், வேப்ப மரங்கள்..தூரத்தில் பெரிய அரை வட்ட வடிவ "ஸ்டேஜ்.." அதன் கீழே வளைவாக நிறைய ரோஜா செடிகள் . அடர்த்தியாக பட்டு ரோஜாக்கள் பூத்துக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் அருகே யாரும் போக முடியாது.செடி பக்கத்துல போனா அடி கிடைக்கும்...என் மனமே சொல்லிக் கொண்டது.
அவசர அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு ஓடி வந்து கியூவில் காலை உணவுக்கு எனது அலுமினியத் தட்டை நீட்டுகிறேன். "சொத்" தென்று ஒரு கரண்டி கேப்பைக் களியை போட்டு ,,,,ம்ம்ம்...நகரு...என்று உறுமுகிறாள் பூதகி.
காலை உணவாகக் களியைக் கஷ்டப் பட்டு வாய்க்குள் அடைத்துக் கொள்வதற்குள் "மணி" அடித்தது. அவசர அவசரமாக ஓடி வந்து 'அசெம்ப்ளி' என்ற ஒரு டீச்சரின் குரலுக்குக் கட்டுப்பட்டு ஓடி சென்று வரிசையில் நிற்கிறேன். வெய்யில் சுளீரென்று நட்ட நடு தலைக்குள் இறங்குகிறது.
எனக்கு முன்னால்...என் அக்கா பூரணி நின்று கொண்டிருந்தவள்..திடீரென்று தட்டாமாலையாகச் சுற்றிச சுருண்டு விழப் போகிறாள் என்று நான் அறிவதற்குள் எனக்கும்..கால் பூமியில் நிற்காமல்....பூமியே தலைக்கு மேலே சென்று விட்டது போல..கைகள் காற்றைத் துழாவ..நானும் சுருண்டு விழுந்தேன்.
கண் விழித்துப் பார்த்ததும்....ஒரு ரூமில் இருவரும் "நீயும் மயக்கமடிச்சு " விழுந்துட்டியா...என்று பூரணி கேட்டது காதில் எங்கோ கிணற்றில் குனிந்து பேசியது போலிருந்தது. ஒரு டீச்சர் கையில் காப்பியை கொடுத்து " என்னாங்கடி ரெண்டு பேரும் சொல்லி வெச்சுக்கிட்டு மயக்கம் போட்டீங்களாடீ .." என்று கேட்டார்.
எங்களுக்குள் இருந்த ஆச்சரியம் அகலாமல்..இல்ல டீச்சர்...என்று சொல்லி அந்தக் காப்பியைக் குடிக்கும் போது .."அம்மா....என்று அழைக்க வேண்டும் போலிருந்தது.." நாக்கில் சுவை அரும்புகள் காப்பியின் சுவையோடு அம்மாவிடமும் அழைத்துச் சென்றது . அது ஆஃபீஸ் ரூம் என்று அப்போது தான் நான் உணர்ந்து கொண்டேன். "கொஞ்ச நேரம் இங்கன இருந்துட்டு பெறவு கிளாசுக்குப் போங்க..." என்று ஒருவர் சொல்லிவிட்டுப் போனார்.
அந்த நேரத்தில் ஒரு கார் வந்து வாசலில் நின்றது. அதிலிருந்து இறங்கி வந்தவர்கள் நேரே அறைக்குள் வந்து...அங்கிருந்த ஒரு அம்மாவிடம் ஏதோ பேசிவிட்டு..கடைசியாக..." ஜனவரி 26" அன்று இரவு வைத்துக் கொள்ளலாம். பத்தாயிரம் ரூபாய் தருவோம். போதுமல்லவா? என்று கேட்கவும் செய்தார்கள். அடுத்த சிறிது நேரத்தில் வந்தவர்கள் மெல்ல படி இறங்கிச் செல்லும் முன்பு...அங்கு அமர்ந்திருந்த என்னைப் பார்த்து புன்னகைத்தபடியே...
"உன் பேரென்ன?
கோமதி .
என்ன படிக்கிறே.?
நாலாவது..
எந்த ஊர் ?
மதுரை.
அப்பா அம்மா..? அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே....அங்கிருந்தவர் அவசரமாக வந்து...
"இவங்க ரெண்டு பேரும் அக்கா தங்கை தான்..."அனாதைங்க .." இவங்களுக்கு யாருமில்லை என்று சொன்னார்.
அந்தம்மா முகத்தில் ஏக வருத்தத்துடன்.."த்திச் .த்திச் த்திச் " என்று சொல்லிவிட்டு என் கன்னத்தைத் தடவி விட்டுட்டு நடந்தார். கூடவே, இந்தப் பெண்ணை நாங்க தத்தெடுத்துக்கறோம்..என்றார்.
"ரொம்ப சந்தோசம் " என்கிறார் தலைவர் சிரித்தபடியே....அப்படியே என்னைப் பார்த்து அம்மாவுக்கு வணக்கம் சொல்லு என்கிறார்.
நான் மட்டும் பிரமை பிடித்தவள் மாதிரி. "வணக்கம்" என்று முனகினாலும் ..."அனாதைங்க .." இவங்களுக்கு யாருமில்லை" என்ற எதிரொலியில் உடைந்து போனேன்.
என்னை மீறி என்னென்னவோ நடப்பதை உணர முடியாதவளாக கண்களைத் துடைத்துக் கொண்டு விடுதி அறைக்குள் சென்று என்னை அடைத்துக் கொண்டேன் . அன்று பள்ளிக்கூடம் செல்லவில்லை.
மாலை நேரத்தில் யாரோ இரண்டு பேர்கள் "இங்க இருட்டுக்குள்ளே இருந்துகிட்டு என்னா செய்யுற நீ?" என்று முடியைப் பிடித்து ஒரே இழு..தர தர வென்று இழுத்துக் கொண்டு போய் விருட்டென்று ஒரே தள்ளு..நேரே நான் வழுக்கிக் கொண்டு போய் "பட்டுப்பூச்சியக்கா" வின் காலடியில் கிடந்தேன்.
"இன்னிக்கு இதும் கிளாசுக்குப் போகாமல் டிமிக்கி கொடுத்துருச்சு" ...நிமிர்ந்து பார்க்கிறேன்..அங்கே ஏற்கனவே அன்னபூரணி பின்னால் கைகளைக் கட்டியபடி பயத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
ஏய்...உன் பேரென்ன சொன்னே...? வார்டனம்மா எனது தலை முடியைக் கொத்தாகப் பிடித்து பின்னுக்கு இழுக்க, என் முகம் அவளை நோக்கி அண்ணாந்து நிமிர என் கண்களில் பயமும் அவளது கண்களில் வெறியும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டது.
அடுத்தது அவள் என்னை என்ன செய்யப் போறாளோ..? என்று மனசு திக்.... திக்... என்று அடித்துக் கொண்டது.
கோமதி...!
எவ வெச்ச பேரு இது....?
அம்மாப்பா....!
அது என்னடி புதுசா அம்மாப்பாப்பா....?
என் அம்மா...அப்பா..!
அப்போ அனாதையின்னா யாரு சொல்லு.?
இல்ல..நான் அனாதையில்லை நேக்கு அம்மா..அப்பா இருக்கா..பூரணியும் அனாதை இல்ல ..!
எங்கடி இருக்காங்க ? இந்தப் புளிய மரத்துல பேயா... இருக்காங்களா? அந்த வேப்ப மரத்துல ஆவியா தொங்குறாங்களா ?
என் மிரட்சியான பார்வை அவர்களுக்கு அதிக ஊக்கமும், உற்சாகமும் கொடுத்திருக்க வேண்டும்.
இப்பச் சொல்லுடி உன் பேரை ...கேட்டுக் கொண்டே என் தலைப் பின்னலை தன் பலம் கொண்ட மட்டும் பின்னுக்கு இழுக்கிறாள் பூதகி. என் முகம் முழுவதுமாக பின்னாடி தலை சாய்ந்து வலியில் துடித்தது.
தூரத்தில் "ஒரு குடம் தண்ணி விட்டு ஒரு பூ பூத்ததாம்..." என்று மகிழ்வோடு சிலரின் குரலும் விளையாட்டும் கண்ணுக்குள் தெரிந்தது ...
அருகில்....கரடி மலை மேல் ஏறி..கரடி மலை மேல் ஏறி...கரடி மலை மேல் ஏறி .....என்ன செய்தது..? என்று யாரோ ஒருத்தி கேட்டுக் கொண்டிருந்தாள்.
இன்னும் சற்று தூரத்தில்.....பூப் பறிக்க வருகிறோம்...பூப் பறிக்க வருகிறோம்....என்று யாரோ சிலர் 'பாப்பா நொண்டி' விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
நாங்க மட்டும் பூதகியின் பிடியில் விளையாட்டு பொம்மைகளாய் மாட்டிக் கொண்டோம்..நினைக்கும் போதே...இன்னும் கொஞ்சம் வேகமாக ஒரு இழு இழுத்து....ம்ம்ம்..சொல்லு என்றாள் .
அந்தக் கத்தலில் விளையாடிக் கொண்டிருந்த அனைவரும் ஒன்று கூடி வேகமாக எங்களை வேடிக்கை பார்க்க கொண்டாட்டமாக வட்டம் போட்டு சுற்றி நின்றனர்.
க் ....கோ....ம்....ம....த் ...தி.....! தொண்டையை விட்டு வெளியேறத் துடித்த வார்த்தைகள் நாராசமாக வெளியேறியது. சொல்லுடி....நீ இன்னிலேர்ந்து கோமதி இல்லை.....பாப்பாத்தி....எங்கே...சொல்லு...!
பாப்பாத்தி...! பயத்தில் நடுங்கியது எனது குரல்.
ம்ம்...என்றவள் என் பின்னலை ஒருவழியாக விட்டு விட்டு...! ஏய்.. பாப்பாத்தி...தீனி திங்கிறியா...பசிக்குதா? தீனி திங்கக் கேக்குதா? என்று ஏளனமாகக் கேட்கிறாள் அவள். மற்றவர்களுக்கும் முகத்தில் ஏக சந்தோஷம் . நானும் அக்காவும் அவமானத்தில் கூனிக் குறுகிப் போனோம். ஒரு நாள் ஸ்கூலுக்குப் போகலை என்பதாலா இவ்வளவு பெரிய தண்டனை? முருகா...! என்று உள்ளுக்குள் குமுறுகிறேன்.
ம்ம்..பசிக்குது..என்று சொன்ன என் ஆவலில் மண்ணைக் கொட்டினாள் அவள்.
அத்த இங்க கொண்டு வந்து கொட்டுங்கடி பாவம் இந்தப் பாப்பாரப் பிள்ளைங்க சாப்பிடட்டும்...அவளின் ஆணைக்கு இரண்டு பேர் ஓடி வந்தார்கள்.
என்னவாயிருக்கும்? என் ஆவல் என் கண்களின் வழியே எட்டிப் பார்த்தது.
கூடையிலிருந்த குப்பையை ஒருத்தி "டப் டப்" பென்று கொட்டி விட்டுப் போனாள் .
காய்ந்து போன எலுமிச்சம் பழத் தோல்கள், ஆரஞ்சுப் பழத் தோல்கள், கருத்துப் போன வாழைப் பழத் தோல்கள்..சுருண்டு கிடந்தது...கிழிந்த காகிதத் துண்டுகள், எரிந்த தீக்குச்சிகள், சுருண்ட கேசச் சுருள்கள் என்று வேண்டாத குப்பைகள்.அத்தனையும் குப்பை..மணலில் கொட்டியதைக் காட்டினாள் .
எடுத்துச் சாப்பிடுங்கடி..! அதிகாரக் குரலில் ஆணையிட்டாள் பூதகி.
வேண்டாம்...மாட்டேன்...! அழுத்தமாகச் சொன்னேன் .அன்னபூரணி அக்கா பின்னுக்கு ரெண்டடி பயந்து ஒதுங்கி தள்ளினாள் .
இத்தத் திங்கலையின்னா இன்னிக்கும் சோத்துல மண்ணு தான்..என்றாள் .
எனக்கு அழுகை அழுகையாக வந்தது...! அப்படியே எங்கியாவது ஓடிப் போய்டலாமா என்றிருந்தது...சுற்று முற்றும் பார்த்தேன்....எல்லாரும் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு...பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.
நீங்க தான் பாப்பாத்தியா? இங்கன எதுக்கு வந்தீங்க ரெண்டு பேரும்? அன்னிக்கு வந்தது உன் அம்மாக்காரியா? என்று என் அம்மாவை ரொம்ப அசிங்கமான ஒரு வார்த்தை சொல்லித் திட்டினாள் ..அவள்.
எங்கள் இருவரின் ரத்தமும் கொதித்தது. இந்தப் பாப்பாத்தின்னா யாரு? எனக்குத் தெரியாதே? இங்க இவங்க இதைத் தானே சொல்லிச் சொல்லி திட்டறா...என் கேள்வி மனதை விட்டு வேறு மாதிரியாக வெளியே வந்தது.
நாங்க பாப்பாத்தி இல்லை.....நாங்க ஐயர் வடமா. (மதுரையில்,தெய்வ நெறிக் கழகத்தில் எங்களைச் சேர்க்கும் போது அவர்கள் கேட்ட கேள்விக்கு அம்மா இந்த பதிலைத் தான் சொன்னா..)
அதென்னாடி....வடமாவு ...தோசைமாவு ...அடைமாவு...இடியாப்ப மாவு .என்று சொல்லி பெரிய ஜோக்கைச் சொன்னவள் மாதிரி இடியெனச் சிரித்தாள். அவளுக்கு பக்க வாத்தியமாக நிறைய பேர்கள் கைதட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
என் சின்ன மனசுக்குள் ஒவ்வொருவரும் அரக்க குல பிரதிநிதிகளாகத் தெரிந்தார்கள். வார்த்தைச் சாட்டையால் அடித்துத் துடிக்க வைத்துக் கொண்டிருக்க..என் மனசு கழண்டு எங்கோ போனது.
அம்மா என்றால் அன்பு...
அப்பா என்றால் அறிவு...
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்..!
போன வருடம் மதுரை பள்ளிக் கூடத்தில் நான் பாடிய பாடலுக்கு வைதேகி டீச்சர் கைதட்டி கட்டிக் கொண்டது நினைவுக்கு வந்து அழுகையாக வந்தது.
இதற்கெல்லாம் இப்போ இங்கு ஏதாவது பொருள் இருக்கா?
என் அழிச்சாட்டிய வைராக்கியத்தில் கோபம் கொண்ட பட்டுப்பூச்சியக்கா...எழுந்து நின்று "அப்போ... நீ இதைத் திங்க மாட்டே" என்று கேலியாகக் கேட்டாள் .
"மாட்டோம்" என்று தலையசைத்தபடியே அழுத்தமாகச் சொன்னோம்.
இதுங்க பெரிய புலிகள் ....... பசிச்சாலும் புல்லைத் தின்னாதாம் என்று கிண்டலாகப் பேசியவள்...இன்னிக்கு ராத்திரி ஒண்ணும் திங்கக் கொடுக்கலையின்னு வெய்யி.....அப்போக் கீழே கிடக்கிறதைத் தானே எடுத்து வாயில் வைக்கும்... வைக்குதா இல்லியான்னு நானும் பாக்கறேன்.
பள்ளிக்கூடத்துக்கு டிமிக்கி கொடுத்ததும் இல்லாமல் என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லாமல் இருந்தால் இது தான் தண்டனை...தெரிஞ்சுக்கங்க எல்லாரும்...என்றபடி முதுகில் அவள் கையிலிருந்த பிரம்பால் ஒரு அடி சுளீர் என்று கொடுத்து விட்டு, எதுவுமே நடக்காதது போல "எல்லாரும் நகருங்கடி" என்று கூட்டத்தைக் கலைத்தபடி அங்கிருந்து நகர்ந்தாள் .
மூர்க்கமான அவளது குரலுக்குக் கட்டுப்பட்டு கூட்டமும் கலைந்தது. எனக்கோ நிம்மதி பெருமூச்சு.
எங்களுக்கு இரவு உணவு இல்லை என்று யாரோ சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டு போனார்கள் .
அன்னபூரணி அக்கா என்னைப் பார்க்கிறாள்.
நான் உடனே."பசிக்குதுக்கா" என்கிறேன்
அவள் குனிந்து குப்பையிலிருந்த ஆரஞ்சுப் பழத்தோலையும் ,, வாழைப்பழத்தோலையும் எடுத்து தனது பாவாடையில் துடைத்துத் தட்டி "இந்தாச் சாப்பிடு" என்று என்னிடம் நீட்டினாள் .
தட்டி விடக் கையை ஓங்குகிறேன் ...பசி...பசி..பசி...
கடைசியில் 'பசி' தான் ஜெயித்தது.
அவளது கையிலிருந்த பழத்தோல்களை அப்படியே வாங்கி வாயில் அடக்கிக் கொள்கிறேன். வெறும் கஞ்சிக்கும் களிக்கும் பழகிப்போன நாக்குக்கு "காய்ந்த பழத் தோல்கள் " கூட அமிர்தமாக இருந்தது. சுவை அரும்புகள் குதித்து எழுந்தது.
நீயும் சாப்பிடுக்கா...என்று கேட்டுவிட்டு...ஆமா... பாப்பாத்தின்னா யாருடி? என்று அவளிடம் கேள்வி கேட்கிறேன்.
"பிராமணப் பெண்."..என்று மெள்ளமாகச் சொல்கிறாள் ...இவாளுக்கெல்லாம் நம்மளப் பிடிக்காதுன்னு நினைக்கறேன்..நம்ம அம்மா தெரியாமல் நம்மளைக் கொண்டு வந்து இங்க விட்டுட்டா....சொன்னவள் கதறியபடியே என்னை இறுக்கிக் கட்டிக் கொள்கிறாள்.
இதுநாள் வரையில் என் அக்கா அப்படி அழுது நான் பார்த்ததே இல்லை....அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவளாக "அம்மா" என்று என்னையறியாமல் அவளைக் கட்டிக் கொண்டு கதறினேன்.
எங்கள் மனம் போல இருண்டது இரவு. கண்ணுக்குள் வாழ்க்கையின் வண்ணங்கள் கலைந்து கண்ணீராகக் கரைந்தது. வாழும் விருப்பம், வாழ்வின் எதிர்பார்ப்பு அனைத்தும் காணாமல் போனது. விடியலுக்காக மனம் வலியுடன் காத்துக் கிடந்தது பாயில்.
பொழுதும் விடிந்தது.
கைவிரல் இடுக்குகளில் சிரங்குப் புண்கள், தலைபூரா ஈறும் பேனும் கடித்துத் தின்ன...கண்கள் இரண்டும் "கண்வலியால் " சிவந்து ஒட்டிக் கொண்டு உள்ளுக்குள்ளிருந்து கண்களைப் பிடுங்கிக் எடுத்துக் கொண்டிருந்தது. இனியும் இப்படி வாழத் தான் வேண்டுமா? சின்ன மனசில் உலகத்தையே இப்போ தானே பார்க்கிறேன்...இருந்தாலும் இந்த உலகம் வேண்டாம் என்று தூக்கி எறியத் தோன்றிய அளவுக்கு மனசுக்குள் வெறுப்பு. வாழ விருப்பம் இல்லாத சமயத்தில் சாவதைப் பற்றி யோசிப்பது கூட சுகமாகவும் , சுலபமாகவும் தெரிந்தது.இனியும் இங்கு இப்படி வாழத் தான் வேண்டுமா?
எப்படி செத்துப் போவது....?
மாமா அப்படிச் சொன்னதால் தானே அம்மா இங்கே அழைச்சுண்டு வந்து விட்டாள் . இப்போ இங்கேர்ந்து எங்கே போவது? எப்படிப் போவது? தொடர்ந்த எண்ணங்கள்...அப்படியே நட.! .என்று சொன்னது.
எப்பவும் போல எழுந்தவள், யாருக்கும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தேன், சுள்ளி எடுக்க போன இடம் வழியாக நடக்க ஆரம்பித்தேன்..தூரம்..தூரம்...தூரம்... எல்லாரையும் விட்டு ரொம்ப தூரமாக எந்த பின் விளைவுகளையும் அறியாமல் அக்காவுக்கும் சொல்லாமல் பூதகியிடம் இருந்து தப்பித்ததாக நினைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன்.
தட்டுத் தடுமாறி கல்லும் முள்ளும் காலுக்குச் செருப்பாக , மஞ்சள் காடுகள் கடந்து , பருத்திக் காட்டைத் தாண்டி , கம்புக் காட்டை கடந்தும். கரும்புத் தோட்டம் புகுந்தும், வாழைத் தோட்டம் புகுந்து, தென்னந்தோப்பை விட்டு விலகி, ஊற்றைக் கடந்து, ஆற்றைக் கடந்து எங்கும் ஒரே மணற்பரப்பு..கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எங்கும் மேடும் பள்ளமுமாக ஒரே மணல்வெளி. மெல்ல மெல்ல மணலின் சூடு காலைப் பதம் பார்க்கத் தொடங்கியது.
மனதிற்குள் ஒரு வெறி. பசியைத் தாகத்தைத் தாண்டி...வேகத்தோடு தனியாக ஓடுகிறேன்...திரும்பிய திக்கெல்லாம் ஒரே மணல் பயமுறுத்தியது. காலடியில் கால் புதையும் மணலில் மெல்ல நடக்கிறேன்....அண்ணாந்து மேலே வானத்தைப் பார்க்கிறேன்....பஞ்சு மேகங்கள் என்னோடு கூட துணைக்கு வருவது போல இருந்தது.
மனிதர்களே இல்லாத பூமியைக் கண்ட உத்வேகம் எனக்குள் "தப்பித்து விட்டேன்.." அத்தனை பேரையும் விட்டுவிட்டு தப்பித்து விட்டேன்...இந்த நினைவே சுகமான நிம்மதியாக இருந்தது. சிரங்குக் கைகளால் சுடு மணலை அள்ளி அள்ளி அழுத்தமாகத் தேய்த்துக் கொள்கிறேன். "எரிச்சலில் வலி" உச்சகட்ட வலி..இருந்தும் மெளனமாக நான் அனுபவித்துக் கொண்டிருந்த பிஞ்சு இதயத்தின் வலியை விட இது ஒண்ணும் பெரிதாகப் படவில்லை எனக்கு. இன்னும் எத்தனை தூரம்? மனம் கேட்டது..
அத்தனை பிரம்மாணடமான பள்ளத்தாக்கு போன்ற அமைப்பில் இருந்த மணல்வெளியில் நான் சின்னஞ்சிறியவளாக, கால் பிரள..பிரள நடந்து அப்படியே சுருண்டு விழுந்தேன். எங்கும் பேரமைதி. காற்றின் சத்தத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. பயம் வந்து பற்றிக் கொண்டது. கண்கள் இருண்டு சுழல ஆரம்பித்தது. மனதின் ஓரத்தில் ஒரு குரல்....எனை மறந்த வேளையிலும் "என்னைக் காப்பாத்துங்க" ன்னு கெஞ்சியது என் காதுக்குள்ளிருந்து வெளியே காற்றோடு வேகமாகக் கலந்தது. நான் மண்ணோடு சேர்ந்து பெருங்காற்று வீச அது அள்ளித் தெளித்த மண்ணுக்குள் மூடியவளாக்ப் புதைந்து கொண்டிருந்தேன்.
எப்போது கண் விழித்தேன்...தெரியவில்லை. ஒரு மண் குடிசை வீடு. பழைய எலி செத்த வாடை. ஈரச்சாக்கில் படுத்துக் கொண்டிருந்தது மனதை உறுத்தியது. கண்கள் ஏதாவது காட்சியைத் தேடியது.தெரிந்த முகத்தை எதிர்பார்த்தது. விழிகள் அங்கும் இங்கும்....அலைந்தது.
தலையில் சுமந்து வந்த மண் பானையை தண்ணீரோடு மெதுவாக இறக்கி வைத்தவள், "பாப்பா.....முளிச்சுக்கினியா....எங்கிட்ருந்து வார...?படிக்கிறியா? எங்கூட்டு அண்ணன் தான் உன்னத் தூக்கியாந்துச்சு. எங்கிட்டுப் போவ நீ அங்கிட்டுப் போனவ...? குரலில் கருணை பொங்கக் கேட்டவள் , இந்தா தண்ணி..குடி.என்றாள் .
...அக்கா.நா..நா....
மொதல்ல இந்தத் தண்ணிய குடி. பெறவு சொல்லு.
நா இப்ப எங்க இருக்கேன்? குரலில் ஏகக் குழப்பம். அப்ப நான் சாகலையா? கையில் வாங்கிய தண்ணீரை ஒரே மடக்கில் குடித்து விட்டு மேலும் தம்ப்ளரை நீட்டினேன்...உதடுகள் உலர்ந்து போய் இன்னும் கொஞ்சம் ..தா...என்றது.
ம்கும்.....சாவ எடம் தேடினியாக்கும்? நல்ல புள்ளப் போ. சின்னப் புள்ள நீ...இன்னாத்துக்கு சாவணும்? அம்மா அடிச்சிச்சா?
இல்ல..அம்மா எங்கள அனாதையின்னு சொல்லி விடுதியில கொண்டு வந்து விட்டுட்டு போச்சு. அங்க இருக்குற யாருக்கும் எங்களப் பிடிக்கலை.அங்க தான் பூரணி இருக்கா . நா மட்டும் தப்பிச்சி ஓடி வந்துட்டேன். செத்துரலாம்னு.
அடிப் பாவி மவளே...நேத்து நீ மஞ்சம்பட்டி கிட்ட கெடந்ததா அண்ணேன் தன் தூக்கிட்டு வந்திச்சி. நீ என்ன பாப்பார ஊட்டு மவளா?
இல்ல...பாப்பாத்தி ஊட்டு பொண்ணு. தயங்கிய குரலில் சொல்லிவிட்டு தலையைக் குனிந்து கொண்டேன். இவ்வளவு கேவலமான குலத்திலா வந்து பொறந்திருக்கேன்..எல்லாரும் மொத்தல்ல அதைத் தான கேக்கறா?
மென்மையாகச் சிரித்துக் கொண்டவள். உன் ஊடு எங்கிட்ருக்கு தெரியுமாக்கும்? கொண்டு விடுறோம்.என்றாள் .
வேண்டாம்...எனக்கு தெரியாது...பூரணியோட போறேன். அம்மா தெரிஞ்சா அடிப்பா.என்றேன்.
சரி..இப்ப இங்கன இரு. பெறவு பார்க்கலாம். என்றவள்..கம்புக் கஞ்சி குடி என்று ஒரு மண் சட்டியை எடுத்து அதிலிருந்த கஞ்சியை ஒரு மண் தம்ப்ளரில் விட்டு நீட்டினாள் .
அந்தப் பானைச் சட்டியைத் திறந்ததும் புளிச்ச வாடை வீசியது. உள்ளிருந்து ஒரு குமட்டல்...இருந்தாலும் நேற்று தின்ன அந்த காய்ந்து போன பழத்தோலுக்கு இது பரவாயில்லை...வாங்கிக் கொண்டேன். மடக் மடக்கென கஞ்சி தொண்டைக்குள்ளே வழுக்கிக் கொண்டு இறங்கியது. நான் ஏன் சாகலை?...என் மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. விரல்களின் இடையில் இருந்த சிரங்குகளிளிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கூடவே எங்கிருந்தோ இரண்டு ஈக்கள் அந்தப் புண்ணையே வட்டமடித்துச் சுற்றிச் சுற்றி வந்து உட்கார்ந்தது. விரட்ட விரட்ட மீண்டும் மீண்டும்...வட்டமடித்து வந்து கையிடுக்கில் முட்டி விட்டுச் சென்றது.
போ...வெளிய போய் களுவு ...என்று சொன்னவள்....எனக்கு பிள்ளையில்ல, நீயாச்சும் என்கூட இங்கனயே இருக்கியா பாப்பா? என்று கேட்டுவிட்டு என் முகத்தைப் பார்த்தாள் அவள்.
இல்லங்கா, நான் போகணும்...எனக்கு இங்க பிடிக்கல. அம்மாவே பார்க்கணும்.என்னை மதுர பஸ்ல ஏத்தி விட்டுடுங்கோ. நானே போய்க்கிறேன் என்றேன்.
பெறவு பார்க்கலாம். அண்ணேன் வரோணும்.என்று சொல்லிவிட்டு தனது நீண்ட தலைமுடியை அள்ளிச் செருகி கோடாலிக் கொண்டை போட்டுக் கொண்டு , ரவிக்கை போடாத உடம்பிலிருந்த மாராப்பை எடுத்து ஒரு உதறு உதறி இறுக்கி சுற்றிக் கொண்டு இடுப்பில் இடுக்கிச் செருகிக் கொண்டாள் .
இதை விநோதமாகப் பார்த்த நான் ,அக்கா...உங்க பேரு என்னது? நீங்க ரொம்ப ஏழையா? என்று கேட்டேன்.
ஏன் கேக்குறே? என்றவள் என்ற பேரு 'பாக்கியம்'..என்றாள் .
இல்ல...நீங்க ரவிக்கை போடலையே..அதான் கேட்டேன். எங்கம்மா ரவிக்கை போடுவா. என்றேன்.
எங்க வம்சம் அப்பிடி...நீ சின்னப் புள்ள..இதெல்லாம் எங்கன புரியும்.என்றவள்..நாளிக்கி உன்னிய நீ சேர்ந்த விடுதியில கொண்டுட்டு போயி சேர்த்துப்புடறேன் என்றாள் அவள்.
இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்து நாலு வெத்தலையை எடுத்து துடைத்துக் காம்பைக் கிள்ளி , பாக்கும், சுண்ணாம்பும் சேர்த்து கூடவே கருப்பாக எதையோ எடுத்து சேர்த்து வாயில் அடைத்துக் கொண்டாள். பிறகு தான் உட்கார்ந்த இடத்திலிருந்தே வாசலை நோக்கி 'புளீச் 'என்று எச்சிலைத் துப்பவும் அது நேராக கொடு போட்டுக் கொண்டு தூரத்தில் விழுந்து சிதறியது.
அட......என்று ஆச்சரியமாகப் பார்த்தவள்...எங்க ஆத்துல இப்படி உட்கார்ந்த இடத்தில் யாரும் துப்ப மாட்டா...இப்படிலாம் பண்ணினா எங்க பாட்டி தோலை உரிச்சுடுவா. என்கிறேன்.
நீ...பாப்பாத்தி...அந்த ஊட்ல அப்பிடித்தான்.என்கிறாள்.
ஓ ..அப்போ, மனசுக்குள் ஒரு சமாதானம் வந்து எட்டிப் பார்த்தது.
****************** * * * * * * * * **********************
எங்கடி உன் தங்கச்சி..?
தெரியலை...காலேலேர்ந்து காணோம். எங்க போனாள்னு கண்டு பிடிக்கவே முடியலை பூரணி சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஒளிச்சி வெச்சிட்டு விளையாட்டுக் காட்றியா? கண்ணு முளியத் தோண்டிப்புடுவேன் ...பட்டுப்பூச்சி அக்காவின் அதட்டல்.
நிஜம்மா தெரியாதுக்கா...என்று அழ ஆரம்பித்தவள், எனக்கு என் தங்கச்சி கோமதி வேணும்....என்கிறாள்.
நல்லாத் தானடி இருந்தீங்க...ரெண்டு பேரும். எங்கடீ போனா அவ..? இன்னும் அரை மணி நேரத்தில் அவ இங்க வரலையின்னா,உன்னிய...சும்மா விடமாட்டேன் ஆமா...என்று எச்சரித்தவள், தப்பிச்சி போயிருச்சாடி? என்றாள் .
இல்லக்கா, கோமதிக்கு இந்த ஊரு ஒண்ணும் தெரியாதுக்கா, அவகிட்ட ஒத்தப் பைசா கூட கையில இல்லை. அவ எங்கேயும் போக மாட்டாள் என்னை விட்டுட்டு. இப்ப எங்கே இருக்காளோ என்னவோ..? எனக்கு ரொம்ப பயம்மா இருந்குங்கக்கா,,,கோமதி.....கோமதி.......பூரணி கேவிக் கேவி அழுது கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு ஒரு மாட்டு வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய வண்டிக் காரன், வண்டியிலிருந்த இரண்டு 'கம்பு மூட்டை' களை முதுகில் ஒவ்வொன்றாக ஏற்றிக் கொண்டு வந்து உள்ளே வைத்து விட்டு, பட்டுப் பூச்சி அக்காவிடம் வந்து ஒரு தாளை நீட்டினான்.
என்னடா....இறக்கினே இன்னிக்கி...? அதிகாரத் தோரணையில் பட்டுப்பூச்சி அக்கா அவனைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே அவன் தந்த தாளை கையில் பிடித்து உதறிக் கொண்டிருந்தாள்.
ரெண்டு மூடை கம்பு..ம்மா..! என் தோட்டம் தான். என்றான்.
சரி..பற்று வெச்சுக்கிடறேன்.என்றவள், 'நாப்பது ரூபா..' என்கிறாள்.
ஒரு அம்பதாக் கொடுத்தீங்கன்னா...
முதுகுல கேளு...குடுக்குறேன்...தாரத வாங்கிட்டு போவியா....பேரம் பேசறான்...என்றவள் வேகமாகக் காரித் துப்பினாள் .
அம்மா...ஒரு விசயம் ...நேத்து ஒரு பாப்பா....மஞ்சம்பட்டி கிட்ட மண்ணுக்குள்ற கெடந்துச்சி. அதும் பேரு தெரில. ஊரும் தெரில..உங்க பள்ளியோடத்துப் பாப்பாவா இருக்குமோ?
பூரணியின் முகம் பிரகாசமானது. நாடித் துடிப்பு ஏறியது. கோமதி கிடைச்சுட்டாள் . உள்மனசு சொன்னது.
யார்ரா...? நீ அந்தப் புள்ளைய என்னா செஞ்சே?
நேரா எங்கூட்டுக்கு கொண்டுட்டுப் போனேன்மா.. எங்கூட்டுக் காரம்மா பார்த்துக்கிடுவாகண்டு.
சரி...சரி....நீ போயி அவள கையோட கூட்டியா...போ. இங்க ஒரு பிள்ளைக் காணோம். அதான் பேசிக்கிட்டு நிக்கிறேன்.
அந்தப் பாப்பா முகசாயல் கூட இதோ, இங்க நிக்கிதே அதே மாதிரிதேன் இருக்குதும்மா..என்று அவன் பூரணியின் முகத்தைப் பார்க்கிறான்.
அதே சிறுக்கி தான். போ...வெரசா இட்டாந்து விட்டுப்போட்டு போ. அதிகாரத்துடன் சொன்னவள், பூரணியின் காதைப் பிடித்து பலம் கொண்ட மட்டும் திருகி, தங்கச்சியை தப்ப வெச்சிப்புட்டு இல்லேன்னு புளுகுறியாப்ள . தோலை உரிச்சி உப்புக் கண்டம் போட்ருவேன், என்றவள் கடைசியாக பலமாகக் காதை ஒரு ஆட்டு ஆட்டி விட்டு கையை எடுக்கிறாள்.
பூரணி காதைப் பிடித்துக் கொண்டு வலியால் துடித்தவள், கண்கள் நிறைந்த நீரோடு தலையைக் குனிந்து கொள்கிறாள்.
இவுக என்னாது, இப்புடிப் பச்சப் புள்ளைங்களப் போட்டு அடிக்கிறது. இப்புடி அடிச்சா எந்தப் புள்ள இருக்கும். அததுங்க அத்துக்கிட்டு ஓடாது....என்று தனக்கு மட்டும் கேட்கும் தொனியில் சொல்லிக் கொண்டே வண்டியை நோக்கி நடக்கிறான் அவன்.
ஏ...பாப்பா...இங்கனயே இரு. நான் கம்புக் காட்டுக்கொல்லைக்கு போயிட்டு இப்ப வந்துர்றேன்,,என்றபடி பாக்கியமக்கா குடிசையிலிருந்து வெளியேறினாள் .
அக்கா...நானும் உன்கூடவே வரேனே. தனியா இருக்க பயம்மா இருக்கு..சொல்லிக் கொண்டிருக்கும் போதே தூரத்தில் மாட்டு வண்டியின் மணிச் சத்தம் கேட்கிறது.
அதோ.....மாமன் வந்துருச்சி. நாமளும் வண்டிலயே போவலாம் என்று தயங்கி நின்றாள். அருகில் நான் . மனதுக்குள் ஆஹா....மாட்டு வண்டில என்னையும் ஏறச் சொல்றாளே. எப்படி இருக்குமோ? என்று நினைத்துக் கொள்கிறேன்..
மூக்கணாங்கயிற்றைப் பிடித்திழுத்து வண்டியை நிறுத்திவிட்டு மேலிருந்து லாவகமாகக் குதித்து இறங்கியவன்,அடியே...இந்தப் புள்ளைய அங்கிட்டுத் தேடிகிட்டு நிக்கிறாங்க. நான் சொல்லிப்புட்டேன். இப்பமே கையோட கூட்டிட்டு வான்னு சொல்லி அனுப்பிச்சுச்சு அந்தம்மா. அதான் வண்டிய வெரட்டிட்டு ஓடியாறேன். ஏ ..பாப்பா , இந்த, கெளம்பு..அங்கன உன்ன மாதிரியே ஒரு மவ இருக்குறா. அது அளுவுது ,பாவம்.அந்தம்மா வேற அந்தப் பச்சப் புள்ளைய போட்டு வாய்க்கு வந்தத ஏசி அடிக்கிது.
அண்ணே...நான் அங்க போகமாட்டேன். என்னைய அங்க கொண்டு விடாதீங்க. அக்கா சொல்லுங்கக்கா., எனது வார்த்தைகள் அவர்கள் காதில் ஏறவில்லை என்பது அவர்களது நடவடிக்கையில் தெரிந்தது.
அப்போ, இவன்கிட்ட இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? சின்ன மனசுக்குள் திட்டங்கள் தயாராகியது. வாயை மூடிக்கொண்டு வண்டியில் அவர்கள் ஏற்றி விட நான் ஏறியதும் அப்படியே படுத்துக் கொண்டேன்.
மாட்டு வண்டி அவனது ஒரு 'டிர்ர்ர்,,,' இல் அசைந்தாடி நகர்ந்தது. மணல் மேட்டில் ஏறி , பள்ளத்தில் தட தடவென்று இறங்கி மணிச் சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. பாக்கியமக்கா அவனது பக்கமாகத் திரும்பி உட்கார்ந்து வந்தது ஒரு விதத்தில் நல்லதாகப் பட்டது எனக்கு. இங்கேர்ந்து இப்படியே குதிச்சுட்டா என்ன?
யோசித்ததும், லேசாக நகர்ந்து நகர்ந்து அந்த வண்டியில் விளிம்புக்கு வந்து விட்டேன்...இப்போது ஒரே உருளல் தான்....கீழே விழுந்து விடுவேன். அதன் பின்பு என்னை விட்டுவிட்டு அந்த மாட்டு வண்டி மட்டும் அங்கு போய் நிற்கும். அப்போ, நான் என்ன செய்வேன்..? இவர்கள் கண்ணில் படாமல் ஓடவேண்டியது தான்.நினைக்கும்போதே வண்டி ஒரு மேட்டில் ஏறியது...இது தான் சமயம் என்று அங்கிருந்து அப்படியே கீழே பார்த்து உருண்டேன். என்னை உருட்டி விட்டு வண்டி இறக்கத்தில் நகர ஆரம்பித்தது. நான் எழுந்தேன், கை கால்களை உதறிவிட்டுக் கொண்டு வந்தவழி நோக்கி ஓடினேன். பின்பு அங்கிருந்த அடர்ந்த பருத்திக் காட்டுக்குள் நுழைந்து செடிக்குள் செடியாக பதுங்கி கொண்டு மூச்சு விட்டேன். கை கால்களின் சிராய்ப்புகள், ரத்தம் சிந்த ஆரம்பித்தது,பருத்திச் செடியிலிருந்து வெடித்து வெளி வந்து கொண்டிருந்த பஞ்சை எடுத்து சிராய்ப்பில் ஒற்றினேன். அதன் மென்மை இதமாயிருந்தது. என் காதுகள் மாட்டு வண்டியில் சத்தம் மீண்டும் கேட்கிறதா என்று உற்றுக் கேட்டது.இல்லை என்று தெரிந்ததும், பயத்தை மீறி நிம்மதியாக மூச்சு விட்டேன். மெல்ல செடிக்கு ஊடே குனிந்தபடி கைகளால் செடிகளின் கிளைகளை நகர்த்திக் கொண்டே நடந்தவள், அங்கங்கு பாதை ஓரமாக பாத்தியில் விளைந்திருந்த தக்காளிச் செடியிலிருந்து பழுத்த தக்காளிப் பழங்களைப் பறித்து பாவாடையில் சுமந்து கொண்டே வந்தேன்.
ஓரிடத்தில், தட தடவென்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து அதிலிருந்து நீரோடை போல பாத்திக்குள் புகுந்து ஓடிக் கொண்டிருந்தது. ஆஹா...என்றவள் மனம் கொண்ட மட்டும் அந்தத் தண்ணீரை இரண்டு கைகளால் குமித்துப் பிடித்துக் குடித்தவள், தக்காளிப் பழங்களை அலம்பி அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டேன். அதன் ருசிக்கு அப்போது எதுவுமே ஈடில்லை. பல நாட்களாக களியைத் தவிர எதையும் அறிந்திறாத எனது நாக்குக்கு தக்காளியின் புளிப்பு அமிர்தமாய் இருந்தது.
இப்பப் பூரணியும் கூட இருந்திருந்தால் எப்படி இருக்கும்? அவளும் தக்காளி சாப்பிட்டிருப்பாள் . எண்ணியவள், ஏதோ சத்தம் கேட்பது போலிருக்கிறதே என்று திரும்பிப் பார்க்கிறேன்....சரக்க்க்..சரக்க்க்..என்று நகரும் சத்தம் மிகவும் துல்லியமாகக் கேட்கவும், சத்தம் வந்த திக்கை நோக்கிப் பார்க்கும் போது , நீளமான கருநாகம் ஒன்று நெளிந்து நெளிந்து சென்று கொண்டிருந்ததைக் கண்டதும் உயிர் குதித்து வெளியே விழுந்தது போலிருந்தது. பயத்தில் உறைந்து போனவள், முருகா...இந்தப் பாம்பை என்னைப் பார்க்கவிடாதே. அப்படியே திரும்பப் போகச் சொல்லிடேன்..பயத்தோடும் பக்தியோடும் நடுங்கிய நான் கும்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, பாம்பு பாதை மாறிச் சென்றது. அதைப் பார்த்ததும் பாம்பு இல்லை என்ற நிம்மதியுடன், அங்கிருந்து எழுந்திருக்கக் கூட தயங்கி நிற்க, அருகிலிருந்த பெரிய மாமரத்தில் மாங்காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தததைப் பார்த்ததும், கண்களில் ஒரு ஆசை, அதன் ருசி எப்படி இருக்கும் என்று பார்க்க நாவில் நீர் ஊறி வந்தது. மெல்லக் கீழிருந்து ஒரு கல்லைத் தேடி எடுத்து முதலில் பாம்பு போய் விட்டதா? என்று மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டேன்.. அதன் சுவடு கூட இல்லை என்று உர்ஜிதப் படுத்திக் கொண்டேன். எடுத்த கல்லை மாமரத்தை நோக்கி பலம் கொண்ட மட்டும் கைகளைப் பின்னுக்கு இழுத்து வீசினேன்.
மாங்காய் வந்து விழப் போகிறது என்ற என் ஆவலில் கண்கள் தேடியது. ஆனால் நடந்தது வேறு....எதிர்பார்க்காமல் மாமரத்திலிருந்து ஒரு பெரிய ஊஊஊஊ ய் ய் ய் ய் ய் ய் ங்....என்ற சத்தத்துடன் ஒரு கூட்டம்....ஐயோ......செய்த காரியத்தின் விளைவு கண்முன்னே தேனீக்களாக வேகத்தோடு பறந்து என்னை நோக்கி படையெடுத்து பறந்து வர, எனக்குள் ஒரு அபாயத்தை உணர்ந்தவளாக கால்கள் எடுத்த ஓட்டம் என் உயிரைக் காப்பாற்றக் கை கொடுத்தது. கண் மண் தெரியாமல் ஓடினேன். கற்கள், முட்கள், எதையும் பொருட்படுத்தாது, கழுத்தில் கொட்டிய தேனீயின் அழுத்தமான வலியை என்று எதையுமே மனம் உள்வாங்காமல் கண்மண் தெரியாமல் ஓடினேன்...ஓடினேன்....ஓடினேன்...தூரத்தில் ஒரு தெனங்கீற்றுக்களால் வேயப்பட்ட ஒரு சிறு இடம்...அதைச் சுற்றிலும் மக்கள் கூட்டம்.சில வண்டிகள்.சிலர் நான்கு கல்கள் வைத்து மண் பானையில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
நான் உள்ளே நெருங்க நெருங்க, அது ஒரு கோயில் என்று கண்டு கொண்டேன். தேனீக்கள் என்னைத் துரத்தி என்னைக் கொண்டு வந்து நிறுத்திய இடம் ' பன்னாரி மாரியம்மன்' கோவில்.வேறென்ன சொல்ல? அங்கிருந்த அத்தனை முகத்திலும் என் அம்மா இருந்தாள் .எனக்கோ அழுகை. குரலெடுத்து யார் மடியிலாவது படுத்து கதறி அழவேண்டும் போலிருந்தது. அங்கிருந்த ஒரு கார் மீது சாய்ந்து நின்று கொண்டேன். அந்தக் காரின் கண்ணாடியில் எனது முகத்தைப் பார்த்து நானே அதிர்ந்து போயிருந்தேன்.
அழுகையில் அழுக்கும் சேர்ந்து கொண்டு என்னை என்னிடமிருந்து மறைத்தது. உடலின் நாற்றம், தேனீ கொட்டிய வலி, உடல் முழுதும் வலி....தண்ணீர் தாகம்..அடுத்த அடி எடுத்து வைக்க கால் மறுத்தது. அங்கேயே அந்த காரின் நிழலில் என்னை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டேன்.
(தொடரும் )
02.08.2015 அன்று எழுதப்பட்ட இந்தத்தொடரும் அப்படியே தொடராமல் இன்னும் நிற்கிறது என்பதைத் தங்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். இந்த முதல் பகுதிக்கு நான் என் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பியது எனக்கு நினைவில் உள்ளது. மீதிக் கதையை பதிவில் வெளியிடாவிட்டாலும் எனக்கு மின்னஞ்சல் மூலமாவது அனுப்பி வையுங்கோ, ப்ளீஸ்.
பதிலளிநீக்குபிரியமுள்ள கோபு