Friday, August 31, 2012, 4:53
மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின் நடைக்கு ஜதிபோட, தலையில் சூட்டிய பிச்சிப்பூவின் மணம் அவள் கடந்து சென்ற பாதை முழுதும் மலரின் புகழைப் பரப்பியது. “பார்கவி இன்னும் கொஞ்சம் மெல்ல நடவேன்” என்று காதில் அசைந்தாடிய ஜிமிக்கிகள் ரகசியமாய் எச்சரிக்க, மனதைப் பிடுங்கித் தின்ற வெட்கத்தையும் பயத்தையும் ஒதுக்கிவிட்டு பிரார்த்தனையோடு மேடையில் அமர்கிறாள். விரித்திருந்த ஜமுக்காளத்தில் காத்திருந்து, அமர்ந்தவளின் மடியில் தலை வைத்தது அவளது அருமை தெரிந்த சரஸ்வதி வீணை.
அரங்கம் நிறைந்து வீணை பார்கவியின் வரவிற்காகவே காத்திருந்த ரசிகர்கள் கூட்டம் உற்சாகமாக, இதயக் கதவைத் திறந்து வைத்தபடி இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு இசையை ரசிக்கும் ஆவலோடு தயாரானார்கள். முன் வரிசையில் அம்மாவும் அப்பாவும், அவர்கள் அருகில் வழக்கமாக இவளது வீணைக் கச்சேரிக்கு முதல் வரிசையில் எங்கு நடந்தாலும் வந்து ஆஜராகும் பரம ரசிகை அகிலா மாமியும் பெருமிதத்துடன் தலையசைக்க, சந்தோஷ மயக்கத்தில் “வாதாபி கணபதிம்…” என்று விநாயகரை வீணைக்குள் இழுத்தாள் பார்கவி.
அருகில் தன் தங்கை பிரணதியும் தம்பூராவை மீட்டியபடி அமர்ந்திருக்க.. அவளது மிருதங்க வித்வான் கணேசனும், கடம் வாசிக்கும் ராஜனும்….துள்ளியபடி பார்கவி மீட்டிய ஸ்வர ராகத்திற்குள் ஐக்கியமாகி தாளக்கட்டு வாசிக்க அவர்களைப் பார்த்துத் தலையசைத்து புன்சிரிப்போடு பார்கவி ஆமோதிக்க..
அதன் அர்த்தத்தை அழகாகப் புரிந்து கொண்டு மகிழ்வோடு கணேசனும் தலையை ஆட்டியபடியே நன்றி சொல்லி உதடுகளை உள்ளுக்கு மடித்தபடியே….தத் ததிங்கினத்..தத்…..தத்திங்கின…தோம்…தத்..தத்…என்று நாதத்தோடு தாளமாகச் சேர…. அரங்கமே இசை ஆலாபனையில் நனைய கேட்டுக்கொண்டிருந்த ஒவ்வொருவரின் தூங்கும் இதய வீணையை எழுப்பி ஜதி போட்டுக் கிறங்க வைத்தது பார்கவியின் வீணைநாதக் கச்சேரி.
மூன்று மணி நேரம் போனதே தெரியாமல் அத்தனை இதயங்களும் வீணைக்குள் ஒளிந்து கொள்ள, இறுதியாக “தில்லானா” வை மீட்டிவிட்டு நிமிர்ந்தவளின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்…எத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்ட பயிற்சி வீணாக்காமல், ஏமாற்றாமல் தனது கனவை நனவாக்கிக் கொண்டிருந்தது அவளின் ஆத்மீக வீணை. தனது வீணை கச்சேரிக்கு உயிர் ஊட்டிய பக்க வாத்திய கலைஞர்களுக்கும், அவையோருக்கும் எழுந்து நின்று கைகூப்பி நன்றி சொன்னாள். அதைத் தொடர்ந்து அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது, இசைக்குக் கிடைத்த வெற்றி அது.
இந்த முறையும் காதைப் பிளக்கும் கைதட்டல் அவளைப் புகழ் மயக்கத்தில் தள்ளி விட்டு வேடிக்கை பார்த்தது. பாராட்டில் இதயம் ஜிவ்வென்று பறந்தது வானில். அதீதப் பிரகாச விளக்கொளியில் அங்கங்கே கிளிக் கிளிக் என்று காமெராக்கள், வீடியோக் கவரேஜ், உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பு… என்று அவளோடு கூடவே நகர்ந்து அவளின் அசைவுகளைக் கூடச் சிறைப் பிடித்துக் கொண்டு நினைவுச் சுவடுகளில் சேமித்துக் கொண்டிருந்தது. அந்த நிமிஷத்தில் சந்தோஷ கோபுரத்தின் உச்சியைக் கட்டித் தழுவியது போல் உணர்ந்தாள் பார்கவி. புகழ் இவ்வளவு மயக்கம் தருமா என்ன? மனசுக்குள் வியந்தவள் தன்னையே லேசாகக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
அருகில் வந்த அகிலா மாமி…”பார்கவி…நீயும் உன் வீணையும் என்னை இந்த முறையும் இழுத்துக் கொண்டு வந்து இங்கு விட்டது…ரொம்ப ரம்மியமா இருந்தது…பொழுது போனதே தெரிவில்லை ! உன் வீணா கானம் தேவ கானமாய்ப் பொழியுது. மறக்கவே மாட்டேன்…மருகேலரா…இன்னொரு தடவைக் கேட்கணும் போலிருந்தது..அப்போ நான் கிளம்பறேன்..என்று அத்தனைக் கூட்டத்திலும் தன் மகிழ்வை பெருமிதத்தோடு கண்களில் ஒரு மின்னலோடு சொல்லி கைகுலுக்கிவிட்டு விடைபெற்றுப் போகும் போது பார்கவிக்கு சந்தோஷத்துடன் வெட்கம் கலந்த புன்னகையை பரஸ்பரமாக உதிர்த்தாள் .ஏதோ ஒரு பந்தம் இருவருக்குள்ளும் இழைந்தோடுவதை மனம் உணர்த்தும்.
இந்தப் பொண்ணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு..”வீணை காயத்ரி, வீணை ஜெயந்தி குமரேஷ் மாதிரி பெரிய பெரிய வீணை கலைஞர்கள் வரிசையில் இவங்களும் இன்னும் பல விருதுகள் வாங்குவார் பாரேன்..” என்று கூட்டம் வாழ்த்தும், வாக்கும் சொல்லிய படியே கலைந்தது.
வீடு வந்து சேர்ந்ததும் வழக்கம் போல அம்மாக் கட்டிப் பிடிச்சு ஆரத்தி எடுத்து “ரொம்ப நன்னா வாசிச்சே” ன்னு உச்சி முகர்ந்து திருஷ்டி சுற்றிப் போட்டு இவள் மனதில் பெரிய கற்பனையை மாளிகை அளவுக்கு கட்ட வைத்து, அந்தப் பிரம்மிப்பில் இருந்து இவளை விலகாமல் பார்த்துக் கொண்டனர். பிரணதி தான் கொஞ்சம் மனசு வேதனைப் பட்டுக் கொண்டு…ம்ம்ம்….எல்லாப் புகழும் உனக்குத் தான்…நான் வெறும் தம்பூரா..முகத்தை சாய்த்து அலுத்துக் கொண்டாள்….அன்று பூரா அவளைச் சமாதானப்.படுத்தத் தோற்றுப் போவாள் பார்கவி.
இரண்டு பெண்களும் வளர்ந்து விட்ட நிலையில் ..தங்களது கடமையாக மூத்தவள் பார்கவிக்கு வரன் பார்க்க இரண்டு வருஷமாகவே வரன் தேட ஆரம்பித்தனர் பார்கவியின் பெற்றோர்கள்.இப்போ இருபத்தைந்து வயசாச்சு பார்கவிக்கு….அவளுக்கேத்த வரன் அமையணுமே என்ற கவலை நாளுக்கு நாள் ஜாஸ்தியாக ‘பெண் வீணைக் கச்சேரி பண்ணுவாள்” என்ற சிறப்பு செய்தியைக் கேட்டதுமே… “இந்த வரன் முடிந்தால் தேவலை” என்ற நினைப்பில் இருக்கும் பார்கவியின் பெற்றோர்களை ஏமாற்றிவிட்டு நழுவி விடுவார்கள். என்ன தான் பேரும் புகழும் ஒரு புறம் வளர்ந்தாலும் இன்னும் கல்யாணம் ஆகணமே.. என்ற கவலை ஒரு புறமுமாக பார்கவிக்காகப் பிறந்த ஆத்ம நாயகன் எங்கிருக்கிறான் என்ற ஆவலில் இணைய வலையில் கூட வலை வீசிக் காத்திருந்தனர்.
இதெல்லாம் போன மாதம் வரை நடந்த கதை…அதன் பின்பு தான் ஒரே மாதத்தில் கதை வேறு மாதிரியாக உருமாறியது…அவளது வீணைக் கச்சேரியை விடாமல் கேட்க வந்து முதல் வரிசையில் பார்கவியின் பெற்றோர் அருகில் அமர்ந்து இவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்த அகிலா மாமி, தன் மகன் ஆகாஷுக்கு பார்கவியைத் தான் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று தீவிரமாக மனசுக்குள் முடிவு கட்டினாள். பார்கவியின் பெற்றோர்களிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்து தன் மனதுக்குள் போட்ட கணக்கை ஒரு நாள் மனம் திறந்து சொன்னாள். தனது ஒரே மகன் ஆகாஷுக்குப் பார்கவியைத் தயங்கிய படியே பெண் கேட்டு மகனின் புகைப்படம் ஜாதகம் இரண்டையும் அவர்களுடன் தர பார்கவியின் வாழ்க்கை அழகாகத் திசை திரும்பியது..
நாங்களும் ஆகாஷுக்கு ஏத்த மாதிரி பெண் தேடிண்டு இருக்கோம் , பெங்களூர்ல இருக்கான்…எங்களுக்கு இரண்டு குழந்தைகள். ஆகாஷின் தங்கை சௌமியாவை அமெரிக்காவில் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு.இப்போப் பிள்ளயாண்டிருக்கா. அடுத்த மாசமே அவரும் நானுமா சௌமியாவோட பிரசவத்துக்காக அமெரிக்கா போறோம்.. டெலிவரி முடிச்சுட்டுத் தான் வருவோம்.அதற்குள் இங்கே ஆகாஷுக்கும் கல்யாணம் ஆச்சுன்னாத் தேவலை…என்று தனது ஆதங்கத்தைச் சொல்லி முடித்தாள் அகிலா மாமி.கூடவே…ஆகாஷ் அருமையான பையன் என்றெல்லாம் அம்மாவிடம் உயர்த்திச் சொன்னதில் இருந்தே அம்மாவுக்கு ஆகாஷைப் பார்க்காமலேயே அந்த வரனைப் பிடித்துப் போனது.ஃபோட்டோவைப் பார்த்த அனைவரையும் ஆகாஷ் கவர்ந்து விட்டான் பார்கவி உள்பட!
பார்கவியின் அப்பா அம்மாவுக்கோ இன்ப அதிர்ச்சி ! “இத..இத..இதத் தான் எதிர்பார்த்தோம்….” என்று சங்கீத குடும்பத்தில்வந்த வரனை வரமாய் நினைக்க நிறைய விஷயங்கள் இருந்தது. ஆகாஷுக்கு பன்னாட்டு கம்பெனியில் சாஃப்ட்வேர் இஞ்சினியராக வேலை, சம வயது வேறு, பெங்களுர் வாசம், கை நிறைய சம்பாத்தியம், காரும், பங்களாவும், இவளுக்காகவே பிறந்தவன் போன்ற தோற்றமும்…எந்தப் பிக்கலும்,பிடுங்கலும் இல்லாத குடும்பம் .இன்னும் என்ன வேண்டும்..பெற்றோருக்கு? இதை விட்டால் உனக்கு இவ்வளவு நல்ல வரன் அமையவே அமையாது…என்று அவர்கள் போட்ட தூபத்தில் இவளும் மயங்கிப் போய் கச்சேரிக் கனவில் இருந்து சிறிது விடுபட்டு கல்யாணக் கனவில் மூழ்கிப் போனாள்.
நல்ல வரன் கண்ணில் பட்டதும் காலம் தாழ்த்தாமல் உடனே நிச்சயதார்த்தம் வரை எளிதாக முடித்து விட்டார்கள் பார்கவியின் பெற்றோர்கள்.
பார்கவியின் அழகின் மேல் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்த ஆகாஷ்…நிச்சயமான நிமிஷம் முதல்..அவளைத் தாங்கித் தாங்கி பரிசுப் பொருட்களை வாங்கித தந்து திக்கு முக்காட வைத்து கொண்டிருந்தான்…வித விதமாகச் சுடிதார்கள், ஷிஃபான் புடவைகள், டெம்பிள் ஜுவெல்லரி,என்று நிச்சயதார்த்த நினைவுப் பரிசுகளாக வாங்கித் தந்து பார்கவியைத் திணர வைத்து விட்டுத் தான் ஊருக்குக் கிளம்பினான் ஆகாஷ்.
இதையெல்லாம் பார்த்த தங்கை பிரணதி கூட .”.பார்கவி…உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையா இருக்கு…இப்போ தான் நீ நிஜமான அதிர்ஷ்டக்காரி” என்றாள். பார்கவிக்குத் தலைகால் புரியவில்லை.
அன்று இரவே பார்கவி தான் அம்மாவிடம் எல்லாருக்கும் இந்த சம்மந்தத்தில் சந்தோஷம் தான்..எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான் ஆனால் அம்மா நீ கேட்டியா..? நான் கல்யாணத்துக்கு பிறகும் வீணைக் கச்சேரிக்கெல்லாம் போவேன்னு …சொல்லிட்டியோன்னோ…நானே சொல்லிருப்பேன்..ஆனா…அவர் தப்பா நினைச்சுண்டா என்ன பண்றதுன்னு தான் என் ஆசை பத்தி எதுவும் சொல்லலை..அவரும் எதுவுமே கேட்கலைம்மா…என்றாள்.
நான் சொல்லியாச்சு என்று அம்மா ஒரே வார்த்தையில் பதில் சொன்னதும்..பார்கவிக்கு சந்தேகம் எழ…மீண்டும்,
அம்மா இந்தக் கல்யாணத்தை ஒரு ஆறு மாதம் தள்ளிப் போட முடியுமா? அப்பாவியாகக் கேட்டாள் பார்கவி.
என்னத்துக்கு தள்ளிப் போடணும் பார்கவி.?
புதுசா சேர்ந்திருக்கும் குழந்தைகளைப் பரீட்சைக்கு அனுப்பணம்.அதுக்கு நிறைய எக்ஸ்ட்ரா கிளாசஸ் எடுக்க வேண்டி வரும்.ரவிசங்கர் ஜியோடஆயிரத்தி நூறு வீணை கான்செர்ட்டில் ரெஜிஸ்டர் பண்ணியிருக்கேன். அது கின்னஸ் புக்கில் இடம் பெரும் நிகழ்ச்சி. அதோட இல்லாம ஆர்.எம்.கே.வி ல சாமுத்ரிகா பட்டு ஷோரூம் திறப்பு விழாவுக்கு வாசிக்க ஏத்துண்டு இருக்கேன்.அட்வான்ஸ் கூட வாங்கியாச்சு. இது ரொம்ப முக்கியம்மா..
ஒ…அந்தப் பணம் தான் பட்டுப் புடவையாய் பீரோவில் தூங்கறதே. அதுவா…?
ம்ம்..ம்ம்..இந்த இரண்டு கச்சேரியையும் முடிச்சால் நேக்கு நிம்மதியா இருக்கும்மா….இது ஒரு வளர்த்து விட்ட யாகம் மாதிரி. உங்களுக்குப் புரியுமா என் மனநிலைமைன்னு நேக்குத் தெரியலை. இதெல்லாம் தடையில்லாமல் நடக்குமா?
விவரம் தெரிஞ்ச நாள் முதலா வீணை மேல உயிரை வெச்சுண்டு நேரங்காலம் தெரியாமல் வீணையோட வீணையாப் போராடி மாஞ்சு மாஞ்சு கத்துண்ட கலை. எந்த சந்தர்ப்பத்திலும் வாசிப்பதை விட மாட்டாள்னு அதனாலயே வந்த வரன் நிறைய தட்டிப் போச்சுன்னு அழுத்தம் திருத்தமாச் சொன்னியா…? நிச்சயம் ஆனா பிறகு இவாளும் கடைசீல வேண்டாம்னு நழுவக் கூடாது பாரு..என்று கேட்டாள்.
அவள் அம்மா இவளைப் பார்த்துத் திரும்பிப் படுத்தபடியே, நீ இவாளையும் மத்தவா மாதிரியே எடை போட்டுட்டியே…உனக்கே புரிஞ்சிருக்குமே…அகிலாமாமி எத்தனை வருஷமா…உன் கச்சேரிக்குத் தொடர்ந்து வந்து எங்க பக்கத்துல உட்கார்ந்து ரசிச்சுட்டு போயிருக்கா..இத்தனை வருஷம் கேட்காதவா…ஏனோ..மனசு தாங்காமல்..நீ தான் அவாத்துக்கு மாட்டுப் பொண்ணா வரணும்னு தங்களோட அந்தஸ்து, கெளரவம் எதையும் பார்க்காமல் தானே வந்து நம்மகிட்ட பொண் கேட்டு வந்திருக்கா. இது நமக்குன்னாப் பெருமை.
எத்தனை வரன் பார்த்திருப்போம்…எல்லாம் ஏப்பையும்… சோப்பையுமா..ஒண்ணும் தேறலை.. ஒண்ணு இருந்தால் இன்னொண்ணு இருக்காது…காம்ப்ரமைஸ் பண்ண முடியாத வரன்கள் வந்தபோது கூட போனால் போகட்டும்னு ஒத்துக் கொண்டோமே….நல்ல வேளையா அவாளே ரொம்பப் பிரபலமாயிண்டு இருக்கா..இந்த வரன் வேண்டாம்னு உன்னை விட்டா..இல்லாட்டா நாம் இப்போ இந்த நல்ல இடத்தை மிஸ் பண்ணியிருப்போம்..புரிஞ்சுதா..? ஒரு காரியம் ஒரு காரணம் இல்லாம நடக்கறதே இல்லை.அகிலா மாமிக்கு உன்னையும் உன்னோட கச்சேரி மேலயும் கூட கொள்ளைப் பிரியம். நாளைப் பின்ன உன்னோட கச்சேரியை எங்களை மாதிரியே உனக்குப் பக்க பலமா இருந்து எடுத்துக் கட்டி செய்வா. பார் பார்கவி.!
உன்னோடத் திறமையை, அங்கங்கே தொலைகாட்சி, கோயில்னு நீ பண்றது தெரியாமலா நம்ம கிட்ட பெண் கேட்பார். நாம இப்போப் போய் இதை விலாவாரியாச் சொன்னாத்தான் அவாளுக்கு நாம ஏதோ பெரீசா..தற்பெருமை பேசறா மாதிரி தெரியும்.எல்லாம் அந்த மாமியே பார்த்துப்பா…நீ எதையும் சொல்லிக் கெடுத்துக்காதே..அருமையான வரன். சங்கீத குடும்பம்..விட்டாக் கிடைக்காது. உன்னோட அதிர்ஷ்டம்.
அவாளோட பொண்ணு கூட அமெரிக்காவில் தான் இருக்கா…உனக்கு அயல்நாட்டு வாய்ப்பெல்லாம் கூடக் கிடைக்கும், பாரேன் . ஒருவேளை நீ அப்படி உயர்ந்த நிலைக்கு வரணும்னு தான் பெருமாள் இப்படி ஒரு வரனை அமைச்சுக் கொடுத்திருக்கார்னு அப்பாவும் நானும் நினைச்சுண்டு இருக்கோம்.
படுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்த பார்கவி எழுந்து உட்கார்ந்து கொண்டாள்…ம்மா…என்னோட வாழ்க்கைல வீணை தான் பிரதானம்…உனக்கு நினைவிருக்கா…நீ சொல்லுவியே…நாட்டியப் பேரொளி பத்மினியோட அண்ணன் மகள் நடிகை ஷோபனா கூட பரதநாட்டியத்துக்காக கல்யாணமே செய்துக்காம தனது வாழ்கையை கலைக்கு அர்ப்பணம் செய்தாள். இப்போ நிறைய குழந்தைகளுக்கு நாட்டியம் சொல்லித் தராள்ன்னு..அப்படி நாம ஆரம்பித்தது தானே இந்த வாணி ஹயக்ரீவா..தி ஸ்கூல் ஆஃப் வீணா…ஆரம்பிச்சதுமே பத்து ஸ்டூடெண்ட்ஸ் வந்து சேர்ந்தாச்சு. இப்போ தான் என்னோட புரோஃபஷனல் குரோத் ஆரம்பிச்சிருக்கு. எத்தனை குழந்தைகள், என் மேல் நம்பிக்கையோட, கனவுகளோட பெருமையாய் வீணைக் கிளாஸில் சேர்ந்திருக்கா. அதை யோசித்துப் பார்த்தியா..?
வாழ்க்கைல அந்தப் பெருமாள் எனக்குன்னு ஒரு வேலையைச் செய்ய சொல்லி ஒரு கலையை எனக்குள்ளே புகுத்தி அனுப்பியிருக்கார். என்னோட சின்ன வயசில் மகாகுரு துரைச்வாமியோட சிஷ்யை ஹேமாஜி கிட்ட வீணை கத்துக்க அனுப்பிச்சே…அந்த மாமி எங்களுக்கெல்லாம் எவ்வளவு ஆத்மார்த்தமா, தெய்வீகமா, பவ்யமாக் கத்துத் தருவா தெரியுமா..? அந்த பாலபாடம் தான் என்னை இன்னும் உள்ளேயும் வெளியேவும் பரிபூரணமா மாத்தியிருக்கு. இது சாதாரணமா எல்லாருக்கும் கைவல்யம் ஆகும் கலையில்லை. என் கூடவே கத்துண்ட நிறைய பேர் பெருமைக்காகக் கத்துண்டு ரெண்டு கீர்த்தனை கத்துண்டதும் காணாம போயிடுவா. என்னன்னு பார்த்தால் கல்யாணம் ஆயிடுத்து… ன்னு தான் பதில் வரும்.அதான்மா நானும் நிறைய யோசிக்கறேன்..என்னோட ஆத்மார்த்தமான இலட்சியத்துக்கு எந்த தடையும் வரக் கூடாதுன்னு ரொம்ப கண்டிப்பா இருக்கேன்.
என்னை உனக்கு உன் மூத்த மகள் பார்கவியா வீணை வாசிக்கும் பார்கவியா மட்டும் தான் தெரியும். ஆனால் எனக்கு அத்தனை அர்ப்பணிப்போட அந்தக் கலையை கத்துக்கும்போது என் குரு சொல்லும் ஒவ்வொரு விஷயமும்..பசுமரத்தாணி போல பதிந்து எனக்குள் நானே பார்த்தது, கேட்டது, கத்துண்டதை நல்ல பாதையாக்கி
இவ்வளவு தூரம் வந்திருக்கேனே…அதை வீணாக்கிடக் கூடாது.
நானே எனக்குள் ஒரு வீணைன்னு மனசுக்குள் நினைச்சுண்டு என்னையே சமர்ப்பணம் பண்ணிண்டு வாழறேன். நல்லதோர் வீணை ! தாம்பத்திய வாழ்வில் அந்த வீணை புழுதியில் விழுந்து விடக் கூடாது ! அந்த முன்னெச்சரிக்கையும் பயமும் என்னை மனசுக்குள் வாட்டி எடுக்கறது.
நீ தான் சொல்லுவே குடும்ப வலையில் சிக்கீண்டா கொண்ட குறிக்கோள் கூட குத்துயிராப் போகும்னு.
நாம எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் நம்மைக் எங்கே கொண்டு விடும்னு யோசித்துச் செய்யணும்னு..இல்லையா?
ஆமாம்…சொன்னேன்…அப்போல்லாம் உனக்குத் தகுந்த வரன் அமையலை. உன்னை சமாதானம் பண்ணவேண்டி சொன்னேன். ஆனால் இப்போ நேக்குப் பரம திருப்தி. அகிலா மாமி இருக்காளே..உன்னைப் பார்த்துக்க. இப்போ…சுதா ரகுநாதன், ஜெயந்தி குமரேஷ் , அனுராதா ஸ்ரீராம் இவர்களெல்லாம் குடும்பத்தில் இருந்துண்டே கொடி கட்டிப் பறக்கலையா? புரிஞ்சுக்கற குடும்பம் கிடைப்பதில் தான் இருக்கு. உனக்கு அது கிடைத்திருக்கு. உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் ஆம்படையான் வந்திருக்கார்…இன்னும் என்ன?
நீயாக் குழம்பி என்னையும் குழப்பாதே …நீ இன்னும் பிரபலமானாலும் இந்தக் கல்யாணம் உனக்குப் பலமாகத் தான் இருக்கும் பாரமா இருக்காது. என் உள்மனசு சொல்றது நீ இன்னும் அமோகமா இருப்பேன்னு…என்னை விட நீ ரொம்ப அழகாத் தெளிவா, அறிவா சிந்தித்துப் பேசறே. நோக்கு எல்லாம் நல்லது தான் நடக்கும்.டியூசன் ஆரம்பத்தில் இங்க வந்து ரெண்டு நாள் தங்கி எடுத்துக் கொடு..அந்த அனுமதி எல்லாம் கூட அவர் தரமாட்டாரா என்ன? கொஞ்ச நாள் போனதும் அங்கேயே இந்த ஸ்கூலை மாத்திக்கோ. வீணை கத்துக்க அங்கேயும் பெண்கள்
வருவா. இதெல்லாம் ஒரு பிரச்சனையா? என்று தைரியமும், சமாதானமும் சொன்னாள் பார்கவியின் அம்மா.
அம்மா…அந்த போன மாசம் புதுசா…சௌம்யான்னு ஒரு பொண்ணு சேர்ந்தாளே, அவள் நாலு வீணை கிளாஸ் மிஸ் பண்ணிட்டியே ஏன்மான்னு கேட்டேன்… அதுக்கு அவ என்ன சொன்னாத் தெரியுமா?
ஏனாம்…? நான் கேட்டுண்டு தான் இருக்கேன் நீ மேல சொல்லு…என்று வந்த கொட்டாவியை அடக்கியபடியே சொல்கிறாள்… பார்கவியின் அம்மா…
அவளோட அக்காவுக்கு கல்யாணம் பண்ணின இடத்தில் மாப்பிள்ளை வீட்டில் ஏதோ ஏமாதிட்டாளாம். இப்போ அது பெரிய விஷயமாகி பிரச்சனை வந்து வீடே அமர்களப் பட்டுதாம்.எவ்வளவு பெரிசா கல்யாணம் பண்ணினா தெரியுமா..? நான் கூட போயிட்டு வந்தேனே…?
ஓ…ஆம்மாமா…இவா நன்னா விசாரிச்சு கொடுத்திருக்க மாட்டா…ஆனா ஒண்ணு பார்கவி…எல்லாருக்குமா இப்படி நடக்கறது? தாலி பாக்கியம் மட்டும் ஒரு பெண் வாங்கீண்டு வந்த வரம்..! சிலரின் வாழ்வு கல்யாணத்துக்குப் பிறகு தான் ரொம்பவே ஷோபிக்கும்..சுபிட்சமா மாறும். இப்போ என்னையே எடுத்துக்கோ…என் அப்பா அம்மாவுக்கு எட்டுக்குழந்தைகள்..கஷ்ட ஜீவனம் தான்…உங்கப்பாவைக் கல்யாணம் பண்ணீண்டு வந்தப்பறம் தானே இப்போ..நான் இது போல இல்லைன்னு இருக்கேன். நீ பலதையும் மனசில் போட்டு கவலைப் படாதே…
அதற்குள் பிரணதி திரும்பி….அம்மா…பார்கவி…என்ன தொண தொணன்னு தூங்க விடாம…என் தூக்கம் டிஸ்டர்ப்
ஆறது. நிம்மதியாத் தூங்க முடியலை என்று உறக்கத்தில் முனக..இருவரும் மௌனமானார்கள். அந்த இரவு பார்கவியின் மனதுக்குள் விடிந்து கொண்டிருந்தது.
எத்தனை இன்வால்வ்மெண்டோட ஒரு சோலோ ஆல்பம் போட ஏற்பாடு பண்ணிருக்கேன்…வீணையில்
ஃபியூஷன் பண்ண புண்யா ஸ்ரீநிவாஸ் கூட ஹெல்ப் பண்றேன்னு சொன்னாளே..வெண்ணைத் திரண்டு வரும் வேளை…பெருமாளே…நீயே எல்லாத்தையும் பார்த்துக்கோ..என்று கண்களை மூடினாள். மனது தோடி ராகம் மீட்டிக் கொண்டே தூங்கிப் போனது.
ஆகாஷிடமிருந்து ஓய்வு நேரமெல்லாம் ஃபோன் வந்து “என்ன நான் அனுப்பிச்ச புடவைப் பிடித்ததா..? கட்டிப் பார்த்தியா? ஸ்கைப்ல பேசணும்…வாயேன்…இன்னும் என்ன வேணும்..? இன்னும் எது பிடிக்கும்?என்று திரும்பத் திரும்ப ஒரே ராகத்தில் கேட்டு..கேட்டு அன்பால் அபிஷேகம் செய்து கொண்டிருக்க.
ஆகாஷ்….நேக்கு ஒண்ணும் வேண்டாம்…நம்ம கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கு..உன்னைப் பத்தி நான் தெரிஞ்சுக்கணும்…என்னைப் பத்தி நீ.தெரிஞ்சுக்கணும். .! உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்…? பிடிக்காது,,ன்னு சொல்லேன் ப்ளீஸ்..என்று பார்கவி கெஞ்ச…
இப்போ போய் இதைக் கேட்கறியே..வேற பேசேன்..எனக்கு உன்னைத் தான் பிடிக்கும்….எத்தனை தடவை வேணாக் கேளு…பதில் மாறாது….”நேக்கு பார்கவியை மட்டும் ரொம்பப் பிடிக்கும்..போதுமா..? இன்னும் சொல்லட்டுமா ஒன்…டூ….த்ரீ.தௌசென்ட் டைம்ஸ்….என்று குழந்தைத் தனமாக அடுக்குவதைக் கேட்டதும்…பெண்மைக்குரிய மன மயக்கத்தில் மேற்கொண்டு எதையுமே கேட்காமல்….சிரித்துப் பேசிவிட்டு வைத்து விடுவாள்.
அவனோ….அவளுக்கு என்ன பரிசுப் பொருள்கள் பிடிக்கும் என்று மட்டுமே யோசித்து வேறு விருப்பு வெறுப்பு சிந்தனைகள் பற்றி யோசிக்காமல்…தனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும் பிடிக்கணும்…நமக்கு ஒருமித்த சிந்தனைகள் தான்….என்னும் போக்கில் மட்டும் சிந்திக்கலானான். அவனிடம் பேசப் பேசப் புரிந்து கொண்டவள்..நிச்சயதார்த்தம் முடிந்து கிளம்பும்போது தனது ஒரு சிடி யை நீட்டி “என்னோட போன மாசம் நடந்த மேடைக் கச்சேரி இதில் எப்படி இருக்குன்னு பார்த்துக் கேட்டுட்டு சொல்லுங்கோ ஆகாஷ் ” என்று தர…
ம்ம்…அம்மா சொன்னா…நீ ரொம்ப நன்னா வீணை இன்ஸ்ட்ருமென்ட் வாசிப்பேன்னு..எனக்கு அதைப் பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது, உன் வீட்டில் நிறைய படங்கள், விருதுகள் பார்த்ததும் தான் புரியுது..தா… நேரம் இருக்கும்போது பார்க்கறேன் என்று கிளம்பும்போது சாதாரணமாக வாங்கி சூட்கேசில் வைத்துக் கொண்ட ஆகாஷ் அதன் பின்பு அதைப் பற்றி மறந்தே போனான், என்பதை அவனிடமிருந்து அதைப் பற்றி பாராட்டோ,பேச்சோ வராததைப் பார்த்தே புரிந்து கொண்டாள் பார்கவி.
கர்ணன் கவசக் குண்டலங்களோடு பிறந்தான். பார்வதி வீணையோடு பிறந்தாள். இந்த பார்கவி வீணையாகவே வாழறா..அவளுக்கு வரும் கணவன் வீணையின் ரசிகனாக இருந்தால் மட்டுமே அவள் பிழைத்தாள். இல்லாவிட்டால் இவளின் வாழ்வு தந்தியில்லா வீணை தானோ.?
போகட்டும் .இன்னும் கொஞ்ச நாள் பொறுப்போம்..அவருக்கு நேரம் இருக்காது ,நாம் அதைக் கேட்டுத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அமைதி காத்தாள். ஆனாலும் மனதுக்குள் இவருக்கு என்னோட கலை பிடிக்கிறதா இல்லையாத் தெரியலையே? என்று எழுந்தது. உடனே மனசுக்குள் அகிலாமாமி கச்சேரி அரங்கத்தில் முன் வரிசையில் அமர்ந்து ரசித்தது மீண்டும் நினைவுக்குள் வந்து வந்து போனது….அகிலாமாமி ரொம்ப நல்லவர் தான்..அம்மா சொல்றது தான் சரி….நாம் அவசரப் படக் கூடாது….எதுவாயிருந்தாலும் அப்பறமாப் பார்த்துக்கலாம்…என்று தனக்குள் சமாதானமானாள். பார்கவிக்கும் ஆகாஷை மிகவும் பிடித்திருந்தது தான் அதற்குக் காரணம்.
கடைசியில் போன மாதம் கச்சேரி மேடை ஏறியவளை…இன்று கல்யாண மேடையில்.ஏற்றி விட்டது விதி.. எல்லாம் கனவு போலவே நடந்தது பார்கவிக்கு. மார்கழி உற்சவம் தை மாசம் அந்த ஆண்டாளே வரம் தந்தது போல மாப்பிள்ளை அமைந்து விட்டதை அப்பாவும் அம்மாவும் சொல்லிச் சொல்லி பூரித்துப் போனார்கள்.
கல்யாணம் முடிந்த கையோடு, மரகதப் பச்சை பட்டுப் புடவையில் அரக்கு கலரில் சங்கு ஜரிகை போட்ட பட்டுப் புடவையில் சந்தனத் தேராக அமர்ந்திருந்தாள். தனது மனைவியின் அழகை ஓரக் கண்ணால் ரசித்துப் பெருமை பொங்கப் பார்த்த ஆகாஷ்…எல்லார்டையும் சொல்லிண்டு கிளம்பலாம்….என்றவன்…..உனக்கு வேண்டிய சாமான்கள் மட்டும் எடுத்துக்கோ….அனாவசியமா ஒண்ணும் வேண்டாம்….பார்த்துக்கோ…என்றான்…அவளது சீர் பாத்திரங்கள்,பக்ஷணங்கள், என்று எல்லாம் புத்தம் புதிதாக ஏற்கனவே தன் மாமியார் மாமனார் சென்ற முந்தைய வண்டியில் அனுப்பிவிட்டபடியால் இவள் மெல்ல இதோ…இதை மட்டும் ஜாக்கிரதையாக….என்று வீணையை அணைத்தபடி…நிற்க…
இதுவா…இதென்னத்துக்கு பார்கவி…அங்கே..வீணை வீணா….இடத்தை அடைக்கும்… நமக்கு இப்போ வீணை மீட்டிக் கேட்க நேரம் எது…? வீணையும் வேண்டாம் பானையும் வேண்டாம்… அப்புறம் நீ வந்து எடுத்துக்கோ. நாம் ரெண்டு நாள்ல ஹனிமூன் போறோம் ஊட்டிக்கு தெரியும்ல்ல…பார்கவியின் கன்னத்தைச் செல்லமாக கிள்ளி விட்டு அழகு பார்த்துவிட்டு வெளியில் போய் …அவ்ளோ தான் ஆச்சு நீங்க வண்டியக் கிளப்பலாம் ….என்று இன்னோவாவைக் கிளப்பச் சொல்லிவிட்டு….”நீயும் சொல்லிட்டு கிளம்பு கவி ” முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் ஆகாஷ் யதார்த்தமாக நடக்க..
என்ன ? என் வீணையை விட்டுட்டு வரதா…நானா…?முடியுமா…நினைத்த மாத்திரத்தில் தலை சுற்றியது பார்கவிக்கு !
அவள்மனம்”டொட..டோயங்……டோடயிங்…டொ…டொ…டொ…டொ…டொ….டோடயங்…டோடைங்…டோடைங்…
என்று முகாரி மீட்டிக் கொண்டிருந்தது.
அம்மாவிடம் மெல்லத் திரும்பி…”அம்மா…வீணையை வேண்டாங்கறார்…என்று ரகசியமாக காதைக் கடிக்க…”
இப்ப அவர் சொன்னபடி சரின்னு கேளு..எல்லாம் அப்பறமாப் பார்த்துக்கலாம்….என்று அம்மா பல்லைக் கடிக்கிறாள்.
எங்கிருந்தோ ஓடி வந்த தங்கை பிரணதி….”அப்போ இந்த வீணை இனி என்னோடது…..என்று வீணையைக் கட்டிக் கொள்கிறாள்…
”சரி…நீயே வெச்சுக்கோ..என்று சொல்ல மனம் வராத பார்கவி, இங்கயே இருக்கட்டும், எனக்கு வேணும்…..என்று சொல்லிக் கொண்டாள்.
கார் சுமக்காத வீணையை மனசில் சுமந்தபடி பிரயாணமானாள் பார்கவி. உயிரை கழட்டி வைத்து விட்டு வந்த நிலையில் மடியில் கனவாக கனத்தது…வீணை…விரல் நுனிகள் காற்றை மீட்டி பார்த்து சூனியத்தில் தவித்தது.
ஏய்…பாரு..!..என்ன ஒரு மாதிரி டல்லா இருக்கே….? என்று கேட்க..
”பாரு…மோரு…எல்லாம் வேண்டாம்…பார்கவி…ன்னு முழுபெரைச் சொல்லி கூப்டுங்கோ..மகாலட்சிமியோட பேரு இது…என்று மென்மையாகச் சொன்னாள்.
ஒ..எனக்கு .அதெல்லாம் தெரியாது…உனக்கு நிறைய தெரிஞ்சுருக்கே….வெரி குட்..என்மேல் ஏதாவது கோபமா கவி….? இப்போ சரியா..? அவன் நெருங்கி வந்து அவளை அணைத்தான். அந்த அணைப்பு ஏனோ பார்கவிக்கு ஒரு முதலை தன்னைப் பிடித்துக் கொண்டது போல் உறுத்தியது.
வீணை அவள் உயிர். வீணை இல்லாத பார்கவி வெறும் கூடு ! அவள் உயிராக நினைத்திருந்த வீணையை வெறும் பானை என்று சொல்லி விட்டானே..மனதுக்குள் புழுங்கினாள் பார்கவி.இதை எப்படிப் புரிய வைப்பேன் இவருக்கு?
ம்ம்….உங்களை மாதிரி எனக்கு ஒண்ணும் அவ்வளவாத் தெரியாது..ஆனா….என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டபடியே…இப்போது வேண்டாம் என்ற எண்ணத்தில்….இல்லையே…எதுக்குக் கோவம்…? நன்னாத் தான் இருக்கேன்….வேண்டுமென்றே புன்னகையை முகத்தோடு ஓட்டவைக்க முயன்று தோற்றுப் போனாள்.
“அம்மா, அப்பா. தங்கை எல்லாரையும் விட்டுட்டு வரோம்னு தானே மனசு கவலைப் படறே…..நான் கண்டு பிடிச்சுட்டேன்….டோன்ட்…வொர்ரி…வாரா வாரம்…வந்துடலாம்… வீணை வாசி உன் வீட்டில். வீணை அங்கேயே இருக்கட்டும். இங்கே நான் தான் உன் வீணை. சரியா? தடுக்கி விழுந்தா சென்னைன்னு சொல்லிச் சிரித்தான்.
அட என் செல்லப் புருஷா.. .நீ செல்லாப் புருஷா..! என் மனசில் இப்போ நான் எதை இழந்து தவிக்கிறேன்னு கூட உன்னால உணர முடியலையே…என்று விரக்தியில் முணங்கிக் கொண்டே முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பார்கவி.
ஏய்…கவி..இப்போ என்ன நினைச்சு முணங்குரே ? சொல்லு… சொல்லு…. நீ சிரிக்கணும். எப்போதும் சிரிச்ச முகமா இருக்கணும், எங்கே முகத்தைத் திருப்பு அன்றவன் அவள் கன்னத்தைத் திருப்பி முகத்தைப் பார்க்கவும்.
நான் எப்படிச் சிரிப்பேன், நான் நானாக இல்லாத போது ? என் வீணை அங்கே தூசியில் வாடும் போது..! நினைத்தவள்…மெல்லச் சொன்னாள் வீணையை எடுத்துண்டாவது வந்திருக்கலாம்…வாசிக்கலைன்னாலும் துடைத்து வைத்து கண்ணாரப் பார்த்துண்டாவது இருந்திருப்பேன்.அவள் கண்கள் ரொம்பி வழியத் தயாராயிருந்தது. கட்டுப் படுத்திக் கொண்டவளின் கண்கள் ஆற்றாமையில் ஜன்னல் வழியாகக் நடனம் ஆடும் மரக் கிளைகளை வேடிக்கை பார்த்து அமைதியானது.
அவள் மனசு ஏனோ வீணையையே சுற்றிச் சுற்றி வந்தது.எதையோ பெரிதாக இழக்கப் போகிறாய் ஜாக்கிரதை என்று பார்கவியின் உள்மனம் சொல்லிக் கொண்டே வந்தது.
அவள் நகர்ந்து அமர்ந்தும் அதைப் பொருட்படுத்தாது அவள் மீது அவனது உரசல்கள் தொடர…அவளைத் தடுமாற வைக்க, கழுத்தோடு மின்னிய மாங்கல்யத்தைத் விரல்களால் நீவிவிட்டபடியே கண்களால் சொல்லிப் பார்த்தாள்…நான் உன்னவள் தானே….பொறுமை…பொறுமை…என்று கண்களோடு சேர்ந்து உடலும் நெளிந்தது நாணத்தால்.
அவளது சிந்தனை பூரா வேறு விஷயத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அவள் சொன்ன எந்த மௌன பாஷையும் அவனிடத்தில் காலாவதியானதால் இவளும் மெல்ல தன் கணவனின் கையை அன்போடு எடுத்து தன் கன்னத்தின் மேல் தடவிக் கொள்ள….இவளது விரல்கள் தன்னிச்சையாக அவனது கரங்களை வீணையாக்கி மீட்டியது. மனசு சஹானா ராகத்தைத் தேடியது. கண்களை மூடிக் கொண்டவள் .பெருமாளே ….எல்லாரும் பொறாமைப் படறா மாதிரி தான் எனக்கு வாழ்க்கையைத் தந்திருக்கே…ஆனாலும் அந்த சந்தோஷத்தைக் கூட மனசு அனுபவிக்காமல்…எதுவோத் தடுக்கிறதே…?இப்போ என்னோடு கூட வீணையையும் எடுத்து வந்திருந்தால்…சந்தோஷமாய் இருப்பேனா? அப்பவும் வேறு எதையாவது மனசு நினைத்துக் கொண்டு சஞ்சலப் படுமா…? என்ன பயம் இந்த நேரத்தில் எனக்கு?நானே தான் இந்த ரெண்டு மாதம் மட்டும் வீணையை விட்டு வைக்கலாம்னு நினைத்தேனே. ஆகாஷ் கண் நிறைந்த அன்பான கணவன். இதற்கும் மேல் என்ன வேண்டும்?
திடீரென…”அடி வாடி வாடி வாடி வாடி…க்யூட் பொண்டாட்டி….நான் தாங்கமாட்டேன்….” ஆகாஷோட மொபைல் அலறியது….அவன் அதை எடுத்து “டேய்..மச்சி…ன்னு பேச்சைத் தொடர….பார்கவிக்கு “பையா” படத்தில் வந்த
அந்தக் காட்சி நினைவுக்கு வந்து போனது. ஒருத்தரோட ரசனை…அவரோட காலர் டியூனை வைத்தே தெரிஞ்சுக்கலாம்..என்று அந்தப் படத்தில் நாயகி, நாயகனைப் பார்த்து சொன்ன வரிகள்..அது…!
அப்போ…ஆகாஷின் ரசனை….! வயிற்ருக்குள் மிக்ஸி ஓடியது.
மனசின் வேகத்தோடு போட்டி போட்டுக்கொண்டு நாலு சக்கரங்களும் வீடு வந்து சேர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டது.ஆகாஷின் அம்மா,அப்பா மற்றும் தெரிந்தவர்கள் அனைவரும் சந்தோஷமாக வரவேற்று கூடி நின்று ஆரத்தி எடுத்து வலது கால் எடுத்து வைத்து உள்ளே வாம்மா என்று அழைக்கையில்….ஆகாஷின் பற்றிய விரல்கள் தந்த அழுத்தம்…மனசுக்குள் ஜிவ்வென்று பாய…உள்ளே நுழைந்தவளுக்கு சொர்க்கவாசல் திறந்தது போன்ற உணர்வு.சந்தன மணம் கமழ ஊதுபத்தி வாசனையோடு பூஜை அறையில் தயாராக வைத்திருந்த ஏற்றப் படாத குத்துவிளக்கு நெய்யும் திரியும் தாங்கி பார்கவிக்காகக் காத்திருந்து அந்த வீட்டில் அவளின் இடத்தைச் சொல்லாமல் சொல்லியது.
கை கால்கள் அலம்பிக் கொண்டு, ஆகாஷின் அம்மா அப்பாவிற்கு நமஸ்காரம் செய்து விட்டு பூஜை அறையில்
குத்துவிளக்கை ஐந்து முகத்தையும் ஏற்றியதும்..அங்கு பரவிய ஒளியில் மனசெல்லாம் பிரகாசமாக….இந்த வீடு தான் இனி உனது என்ற உணர்வு ஆழமாகப் பதிய…மெல்ல சமையலறை பக்கம் சென்றவள்..அங்கே பால் கலந்து கொண்டிருந்த அகிலா மாமியைக் கட்டிக் கொண்டு அம்மா….என்று சொல்லி தோள் மீது சாய்ந்தவளை ஆனந்தத்தோடு சேர்த்து அணைத்தபடி நெகிழ்வோடு ரொம்ப சந்தோஷமா இருக்கு பார்கவி.
நீ தான் இந்த வீட்டுக்கு மருமகளாய் வரணும்னு…எத்தனை வேண்டிண்டேன் தெரியுமா…?.நாங்க எல்லாரும் ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கோம்னு சொல்லி தலையை வருடி விட்டபடியே…கிடைத்த சந்தர்ப்பத்தில் தன் அன்பை அழகாகச் சொன்ன தன் அம்மாவைப் பெருமை பொங்கப் பார்த்தான் ஆகாஷ்.ஆகாஷின் அப்பாவும் தட்டு நிறைய வித விதமாக இனிப்புகளை எடுத்துத் தந்து இனிமேல் இது உன் வீடு..இங்கே நீ சந்தோஷமா இருக்கணும்…
ஸ்வீட் எடுத்துக்கோ பார்கவி…அப்பா நீட்டிய தட்டிலிருந்து ஒரு ஜாங்கிரியை எடுத்துக் கொண்டு..”தாங்க்ஸ்” என்கிறாள்.
கல்யாணம் கழிந்து இருவரும் தேனிலவில் மூழ்கி ஊட்டிக்கும் சென்று திரும்பியாச்சு. நாட்கள் நகர்வதே தெரியாமல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. அடுத்த இரண்டு நாட்களில் ஆகாஷின் தங்கை சௌம்யாவின் பிரசவத்திற்கு அப்பாவும் அம்மாவும் ஆறுமாதம் அமெரிக்காவுக்கு விமானத்தில் பறந்தாச்சு. அவர்களை ஏற்றிவிட்டு விட்டு ஏர்போர்ட்டில் இருந்து நேராக காமத் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும்…வீடே வெறிச்சென்றிருந்தது. வீணையைப் பிரிந்த துயர் இப்போ பார்கவிக்கு மீண்டது. தேனிலவுக்குப் பிறகு மோன அமாவாசையா ?
ஆகாஷ்….இன்னும் ரெண்டு நாள்ல இந்த ஆர்ட் ஆஃப் லிவிங் ரவிசங்கர் ஜி இருக்காரோல்லியோ….அவரோட வீணா கான்செர்ட்ல நானும் முன்னாடியே என் பெயரை ரெஜிஸ்தர் பண்ணியிருக்கேன்.. இன்னைக்குப் போய் ஒரு வீணைக்கு இப்போ அரேஞ் பண்ணனும்…யூனிபார்ம் சாரி வாங்கிக்கணும்..பெங்களுர் பாலஸ் கிரௌண்ட் ல…நான் கண்டிப்பா கலந்துக்கணம். இன்னைக்கு கொஞ்சம் கூட அழைச்சுண்டு போறியா ஆகாஷ் ? ஆசையாகத் தான் கேட்டாள் பார்கவி.
என்னது? வீணை வாசிக்க கிரௌண்ட்க்கு போறியா….? என்ன பார்கவி..என்கிட்ட .விளையாடறியா? ரெஜிஸ்டர் பண்றதுக்கு முன்னே என்னை ஏன் நீ கேட்கலை ? நோ..நோ..நோ..நோ..நோ..நோ..என்று பிரகாஷ்ராஜ் ஸ்டைலில் பட படவென .மூச்சு முட்டச் சொன்னான்….ஆகாஷ்.
பார்கவியின் இதயம் பட்டென ஒரு கணம் நின்றது ! தலை சுற்றியது. உரலுக்குள் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா..? உள்மனம் சிலிர்த்தது.
இதுக்கு நம்ம நிச்சயதார்த்தத்துக்கும் முன்னாலயே ரெஜிஸ்டர் பண்ணியாச்சு.அப்போ நேக்கே தெரியாது நானே பெங்களூர்ல வந்து செருவேன்னு. இப்போப் போய் என்ன சொல்றே நீ ஆகாஷ்? நமக்குக் கல்யாணம் கழிந்து இரண்டு மாதங்கள் எதுவும் வேண்டாம் என்று முன்னையே இதுக்காக பயிற்சி எடுத்தேன்…ராவும் பகலுமா…இந்த ரெண்டு மாசமா நான் வீணையவே பாக்காமல் தள்ளித் தானே இருந்தேன்.ஆனால் இது ரொம்ப முக்கியமான ப்ரோக்ராம். கின்னஸ் புக்கில் இடம் பெறும் நிகழ்ச்சி…மொத்தம் ஆயிரத்தி நூறு வீணைகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில்…..எவ்ளோ த்ரில்லிங்கா இருக்கும். நீயே நினைச்சுப் பாரு. நினைக்கவே மனசுக்குள் பட பட ன்னு இருக்கு. என்றாள். இப்பவே விரல்கள் நாம நமன்னு துடிக்கிறது..என்று பட படைத்தாள் பார்கவி..
மழை நின்ற பிறகு குடை பாரம் தானே…! ஆகாஷ் குரல் உயர்ந்தது.,.! எதிர்த்தது.. இதுவரை வாலிபனாய்த் தெரிந்தவன் அப்போது விஸ்வரூபம் எடுத்தான்.
என்ன நடக்கறது கவி இங்க? என்னைக்குத் தெரியாம….எனக்கு டோட்டலா இதெல்லாம் எதுவும் தெரியாது. எனக்கும் பிடிக்காது. பெண்கள் வேலைக்குப்போறதை அறவே வெறுப்பன் நான் ! ..என் வைஃபை நான் வேலைக்கு அனுப்புவேனா? நெவர்.
பணம் நம்ம கிட்ட நிறைய இருக்கு…என் பணமும், என் மனைவி என்ற புகழும் உனக்குப் போதும்.,என்று சொல்லி நிறுத்தினான்.
இல்ல…நான் பணத்துக்காக நிச்சயமா இல்லை..என் ஆத்ம திருப்தி, இது ஒரு கலை….! என் குருதியில் கலந்த இசைக்கலை ! பணம் காசு எல்லா இடத்திலும் ஆத்ம திருப்தியைத் தராது, நீங்க இதைப் புரிஞ்சுக்கணம்.
ஆமா…நீ ஒருத்தி தான் இந்த உலகத்திலே இந்தக் கலையை வளர்க்கப் போறியா…? நீ போகலைன்னாலும் அங்க நடக்கும்..நீ வரலைன்னு ஒருத்தனும் அழமாட்டான்…!
கேடு காலத்துக்கே கெடுமதி…ஆகாஷின் கேடுகாலம் மதி கெட வைத்தது..!
ஆனால் போகலைனா நான் அழுவேன்…ஏன்னா…எனக்கு நான் தான் முக்கியம்… நானே ஒரு வீணை…! அதை நீ நசுக்க விடமாட்டேன் ! குயவனுக்கு உருவாக்க ஒரு வருஷம்…தடியனுக்கு உடைக்க ஒரு நிமிஷம்னு…ஒரு கலையை அழிக்க விட மாட்டேன்..
அடடா…..எவ்ளோ தைரியமா உனக்கு? என்ன பேசறோம்னு நாக்கை அளந்து பேசு….இதப் பார்….அம்மா..அப்பா இல்லாத நேரத்தில்…உன்னோட…..அதென்னது…அது…ம்ம்…என்று சரியான வார்த்தையைத் தேடித் திணற….
நீங்க தான் உங்க நிஜஸ்வரூபத்தை காட்டறேள் . அதிர்ச்சியா இருக்கு நேக்கு…!புலியின் முன்னே புராணம் ஓத முடியாது…!
வாட்..? என்னது…என்னை நீ என்னென்னவோ சொல்றே…முத்தல தடியன்….இப்போ புலி….! ஐ கான்ட் டாலரேட் திஸ்..எனிமோர் ..!
நாங்க உங்கம்மாட்ட இதப் பத்தி எல்லாம் ஏற்கனவே விபரமாச் சொல்லியாச்சு. நேக்கு உங்களோட இந்தக் கல்யாணம் ரெண்டு மாசம் முன்னாடித் தான் நடந்தது. ஆனால் என்னை இருபது வருசம் வளர்த்தது என் வீணை..
என் நினைவு தெரிஞ்ச நாளா என்னோட வளர்ந்தது வீணை.. இதுவா…அதுவா..ன்னு நேக்கு ரெண்டு சான்ஸ் வேண்டாம்..உடன்படிக்கையால் ஆவது அடம் பிடித்தால் நடக்குமா?
வீணையும், நீங்களும் எனக்கு ரெண்டு கண்கள் போலத் தான். என்று ஆகாஷைப் பார்த்தாள்.
அப்போ….நீ ஒத்தைக் கண்ணா அலையத் தயாரா இருந்துக்கோ….! அவனது ஈகோ கண் முன்னே விஸ்வரூபமாய் நின்றது.
என்ன சொல்றேள் நீங்க? தயங்கியபடி கேட்க..
லேட் அஸ் பார்ட்…! எனக்கு நீ..வெறும் என்னோட வைஃப் பார்கவி. நம் குழந்தைக்கு நீ அம்மா…வேற எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் எல்லாம் தேவை இல்லை…இவ்ளோ ஏன்…எங்கம்மா இப்படிக் கச்சேரிக்கு போறது கூட எனக்கோ என் அப்பாவுக்கோ பிடிக்காது. அதான் நான் என் அம்மாட்ட அன்னிக்கே சொல்லிட்டேனே.
எனக்குப் பிரபலமான ஒருத்தி, மேடை ஏறிப் பலர்முன் பாடிய பாடகி, மனைவியாக வேண்டாம் என்று சொல்ல. அம்மா தான் சொன்னாள் கல்யாணம் ஆனதும் எத்தனையோ நடிகைகள் கூட நடிப்பதை விட்டுடலையா…அது போல இவளும் விட்டுடுவா…ன்னு…அதை நம்பித் தான்….என்னால உனக்குப் பின்னாடி வீணைப் பொட்டியத் தூக்கிண்டு நிக்க முடியாது..!
காதில் திராவகமாய் விழுந்த வார்த்தைக்குத் துடித்துப் போனாள் பார்கவி. அகிலா மாமியின் பேரில் வைத்திருந்த நம்பிக்கையும், மதிப்பும், அன்பும் பொடிப் பொடியாய் உதிர்ந்தது நெஞ்சுக்குள்.பதறினாள். ஆனால் மனம் கலங்க வில்லை.குரங்கு கையில் மாணிக்கம் கிடைத்த மாதிரி….என்னோட எந்த அருமையும் இவருக்குத் தெரியப் போவதில்லை. அதுக்கு ஒரே வழி…..
சரி ஆகாஷ்…நீங்க எடுத்த அந்த முடிவை நானும் இப்போ ஏத்துக்கறேன்.
என்னது அது..? ஆவலாக ஆகாஷ் கேட்க..
பாருங்கள், இந்தப் பார்கவிக்கு இன்று முதல் ஒத்தைக் கண் போதும் …! பளிச்சுன்னு சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் அறைக்குள் சென்று விட்டாள் பார்கவி.
ஃபான்டாஸ்டிக்…! கை தட்டியபடியே….இந்த விஷயத்தில் பெண்கள் எல்லாருமே ஒரே மாதிரி தான் இருக்கேள்…என்று பின்னாடியே வந்து சொன்னான்…பார்யா …ரூபவதி…சத்ரு…சரியாத்தான் சொல்லியிருக்கா..!
வாட் டூ யு மீன்….? எதைச் சொல்றேள், நீங்க..
சுயநலமா யோசிப்பதில்….நடந்து கொள்வதில் ..என்றவன்…
இதில் என் தவறு ஒன்றும் இல்லை. நேக்கு சுயநலமில்லை. என்னோட வாழ்க்கையே வீணை தான்னு
இருந்தவள்..அதை என்னிடமிருந்து பிரிச்சுடாதேங்கோ…ப்ளீஸ்.
நோ..நோ…உன் மேல் அவ்வளவு அன்பை வைத்து..நீ தான் எல்லாம்னு நினைச்சுண்டு இருந்தேனே…நான் முட்டாள்.. ஆனாக் கேவலம்..நீ ஒரு மரக்கட்டைக்கு கொடுக்கிற மதிப்பைக் கூட எனக்குத் தரலைன்னு நினைக்கும் போது…நான் தப்புப் பண்ணிடேனோன்னு…வருத்தமாருக்கு.
சாரி ஆகாஷ்….நான் அப்படிச் சொல்ல வரலை…எனக்கும் நீங்கள் ரொம்ப முக்கியம் தான். அனால் அதே அளவுக்கு…
போதும் பார்கவி…போதும்…நீ என்னைப் பொறுத்த வரையில் என் மனைவி அவ்ளோதான்..ஆனால் உன் மனசில் உன் முதல் கணவனே உனது வீணை தான்….அப்படித் தானே…? நீயே முடிவு செய் ! வீணையா ? அல்லது நானா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடு ! மீராபாய் போல் வீணையோடு நீ ஊர் ஊராய்ச் சுற்ற நினைத்தால் உனக்கு ராணா தேவை யில்லை என்று அர்த்தம் ! வீணையா ? ராணாவா ? சிந்தித்துச் சொல் எனக்கும் கொஞ்சம் புராணம் எல்லாம் தெரியும்….ரொம்ப அலட்டிக்காதே…. என்று கூறி விட்டு வேகமாய் அறைக்குள் சென்று கதவை மூடிப் படுத்துக் கொண்டான்…உன் பேச்சு தான் உனக்கு முதல் எதிரி…அம்மா எப்பவும் சொல்வது போலவே அவன் காதில் ஒலித்தது.
சூனிய மௌனம் ஒவ்வொரு மூலையிலும் குடி புகுந்தது. வாயடைத்துக் கற்சிலை போல் நின்றாள் பார்கவி ! வீணையும் ராணாவும் ஒன்றாக வாழமாட்டா !
பச்சைக் கிளிக்குப் பறக்கும் சுதந்திரம் வேண்டும்..தங்கக் கூண்டு வேண்டாம்.மரக்கிளைக் கூடு போதும்…ஆனா அதுக்குப் பசிக்கும்போது பறந்து போயி தனக்கு வேண்டியதைத் தேடிச் சாப்பிடும் சுதந்திரம் வேண்டும்…தங்கக் கூண்டில் அடைத்து வேளா வேளைக்கு வாழைப் பழமும் நெல்மணியும் தரேன்னு சொன்னா இருக்குமா? பறக்குமா? பார்கவிக்கு அந்த வீடு தன்னை அடைத்த தங்கக் கூடு போல எண்ணிக் கொண்டாள்.
இப்படியே இவர் சொல்வதைக் கேட்டு பணிந்து விட்டால்…நான் நினைத்து பயந்தது தான் எனது வாழ்க்கையாகிப் போகும்….விடக் கூடாது..போராடணும். புரிய வைக்கணம்.
சூனிய மௌனம் ஒவ்வொரு மூலையிலும் குடி புகுந்தது.
பாலைவனத்தின் நிலைமை ஒட்டகத்துக்குத் தான் தெரியும்.நீங்கள் என் வாழ்வில் இடையில் வந்தவர். என்
ஐம்புலன்களும் சீராக நடக்க வைத்துக் கொண்டிருப்பது என் கலை தான். வெறும் அழகைப் பார்த்து ஏற்றுக்கொள்ளும் எந்த வாழ்க்கையும் சீராக இருக்காது. உள் அன்பைப் பார்த்து, புரிந்து கொண்டு வாழ அழகு தேவையும் கிடையாது. நீங்கள் பார்த்ததை நான் பார்க்கத் தவறி விட்டேன்.போர்வையை உதறியபடியே சொல்லிவிட்டு அவளும் அடுத்த அறையில் படுத்துக் கொண்டாள்.
தாம்பத்திய உறவில் மனப்பிளவு ஏற்பட்டு விட்டது ! மீண்டும் இவை இரண்டும் எப்படி ஒட்டிக் கொள்ளும் ?
எல்லாம் முடிந்து விட்ட நிலையில் இன்னும் பேச்சு என்னத்துக்கு என்பது போல…மனசின் விரிசல் மஞ்சத்தில் பாளமாகத் விரிந்தது.
தூக்கம் வராமல் நெஞ்சம் அழுத்தியது…அம்மாவைப் பார்க்க வேண்டும் போல ஏங்கியது..அன்று ஒரு நாள் இரவில் அம்மாவிடம் மனசு விட்டுப் பேசியதெல்லாம்…தான் பயந்தது போலவே நடப்பதைப் பார் என்று சொல்ல வேண்டும் போலத் தோன்றியது…இன்னொரு மனம், வேண்டாம் பார்கவி..வீட்டில் எல்லாரும் வருத்தப் படுவா….இப்போ ஒண்ணும் சொல்ல வேண்டாம்..இதன் முடிவு தெரியும் போது அவாளாகவே தெரிந்து கொள்ளட்டும் என்றும் நினைத்துக் கொண்டாள். பாரதியாரின் பாடல் வரிகளில் இருந்த அத்தனை அர்த்தங்களையும் தான் அனுபவிப்பது போலிருந்தது இப்போது.
”நல்லதோர் வீணை செய்தே…அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ….?
நல்லதோர் வீணை செய்தே…அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ.. ?
சொல்லடி சிவசக்தி.. – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்…
சொல்லடி சிவசக்தி.. – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்…
வல்லமை தாராயோ ….- இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே,,
சொல்லடி சிவசக்தி….. – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ….?
அழுகை பீறிட்டு தன்னை மீறி வழிந்த கண்ணீர் தலையணையை நனைக்க…அழுதே அறியாத பார்கவிக்கு..நெஞ்சம் குமுறியது.
காலையில் கூட அதே மன நிலையில், அவள் பாட்டுக்குத் தன் வேலையை கவனிக்கத் தொடங்கி….ப்ரோக்ராமுக்கு வேண்டிய ஏற்பாடுகளில் மூழ்கிப் போனாள். வேகத்தோடு விவேகமும் இருந்ததால் யதார்த்தமாக எடுத்துக் கொண்டு இதுவும் கடந்து போகும் என்ற பக்குவத்தில் இருந்த பார்கவியை…
இது தான் உன் லட்சணமா? ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நீ பாட்டுக்கு வர..நீ பாட்டுக்கு போற…இதெல்லாம் இங்க வேண்டாம்…உன் அம்மா வீட்டில் போயி நீ எப்படி வேணாக் கூத்தடிச்சுக்கோ…இந்த வீட்டில் என் முன்னால் இந்த நாடகம் வேண்டாம்…நீ பணத்துக்கும் , புகழுக்கும் ஏங்கற பெண், குடும்பப் பெண் என்று நான் ஏமாந்து போனேன். கணவன் என்ற அதிகாரச் சாட்டையைச் சொடுக்கினான்…ஆகாஷ்.
இந்த நேரம் பார்த்து உன் அம்மா..அப்பா இல்லையேன்னு எனக்கு வருத்தமா இருக்கு…நான் இந்த கான்செர்ட் முடித்த கையோட கிளம்பிடுவேன்….நீங்கள் கவலைப் படாதேங்கோ..வலைக்குள்ளேயே ஓட்டை இருந்தால் நான் என்ன பண்ணுவேன்.?
தோ..பாரு பார்கவி…நீ அங்கே போனாலும் இப்ப நாம் எடுத்திருக்கும் முடிவைப் பத்தி என் அப்பா அம்மாவுக்கு எதுவும் சொல்ல வேண்டாம். வீணா வருத்தப் படுவா. சொன்னாலும் ஒண்ணும் நம்ம பிரச்சனைக்கு வழி கிடைக்காது. அங்க தங்கை டெலிவரி முடியணம்.அவா வந்த பிறகு நானே சொல்லிக்கறேன். இட் இஸ் மை ரிக்குவெஸ்ட்.!
ஒ…இது உங்க சுயநலம் என்று மனதில் நினைத்தாலும்….”சரி” நாங்களாக எதையும் உன் சொல்ல மாட்டோம் என்று ஒப்புக் கொண்டாள்.
நாட்கள் நகர்ந்து, ப்ரோக்ராம் நல்ல படியாக முடிந்தது.
நிம்மதியோடு உள்ளே நுழைந்தவளைப் பார்த்து…அப்போ உன் முடிவு..? என்று எகத்தாளமாகக் கேட்ட ஆகாஷைப் பார்த்ததும்…
பீறிட்டுக் கொண்டு வந்த கண்ணீரை…உள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டு….
இனிமேல் தான் ஆரம்பம்…! என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவள் தயாராக வைத்திருந்த ஒரு சூட்கேஸை
எடுத்துக் கொண்டு நகர…
காரில் ஏறு…நானே முறையாக் கொண்டுபோய் விட்டுட்டு வரேன்..சொன்னவன்…வீட்டைப் பூட்டிக் கொண்டு
காரை வெளியே எடுத்தான். தார்ரோட்டை வழுக்கிக் கொண்டு விரைந்தது. இருவரின் மனசும் தனித்தனியே
உணர்வுகளின் கொந்தளிப்பில் பின்னோக்கியும் , முன்னோக்கியும் நகர்ந்தது. வரும் வளைவுகளில் கிரீஈஈஈஈஈஈஈஈஈஈச்….ப்ரேக்கைப் போட்டு..இவளுக்கு பிடிக்காதுன்னு தெரிந்தும், வெறுப்பாக ஓரிடத்தில் நிறுத்தி இறங்கி சிகரெட்டைப் பற்ற வைத்து புகைவிட்டு காண்பித்து, அப்பப்போ அவனது ஆத்திரத்தை வேகமாக ஸ்டியரிங்கை ஒடித்துத் திருப்ப…..விவேகமில்லாத வேகத்தோடு….அவன் உள்ள்மனம் அத்தனையும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
.
“நனுப்ரோவமனிச் செப்பவே…சீதம்மா தல்லி…நனுப்ரோவமனிச் செப்பவே…” மனதோடு தந்தி மீட்டிக் கொண்டு பார்கவி…உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர, ஒருவழியாக அவள் வீட்டு வாசலில் கார் வந்து நின்றதும் தான் காருக்கே மூச்சு வந்தது.
அவளோடு நுழைந்த மாப்பிள்ளையைப் பார்த்த பார்கவியின் அப்பா.. ஆச்சரியத்தோடு வாங்கோ வாங்கோ….என்று வரவேற்க, ஆகாஷின் சலனமற்ற முகத்தையும்,தான் வீட்டுக்குள் உரிமையாக உள்ளே போய் தன் வீணையைக் கட்டிக் கொண்ட மகளைப் பார்த்ததும் அவர்களுக்கு ஓரளவுக்கு விஷயத்தை கிரஹிக்க முடிந்தது.
என்னாச்சு மாப்ளே…?
பார்கவியே சொல்லியிருப்பாளே…ஃபோன்ல. ஒண்ணுமே.. சொல்லலியா …அந்த ஒண்ணுமே யில் ஏகப்பட்ட அழுத்தம் கொடுத்ததைப் பார்த்து அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது.
ம்ஹும்….வீணை கான்செர்ட் போற விஷயம் மட்டும் தெரியும்….வேற ஒண்ணும் எங்களுக்குத் தெரியாது என்று அவர் இழுக்க..
சொல்லலை…அப்படித் தானே…? இல்ல மாமா, அவளுக்கு வீணை தான் முதல் புருஷன். அதற்குப் பிறகு தான் மற்ற எல்லாமே… என்னால் அவளோடு இனி வாழ முடியாது என்னும் நிலைக்கு வந்திருச்சி ! எங்கள் பிளவுக்குக் காரணம் அந்த பாழாய்ப் போன வீணைதான் மாமா ! அதான் உன் வீணை இருக்கும் இடத்திலயே இருந்துக்கோன்னு கொண்டு வந்து விட்டேன்.
அச்சச்சோ….வேண்டாம் மாப்ள…பார்கவி சின்னக் குழந்தை….வேகத்தில் எடுக்கும் எந்த முடிவும் சோகத்தில் தான் போய் முடியும்..கொஞ்சம் நிதானமா…அப்பா, அம்மா வந்தபின்னே…பேசி…அவர் திணற…
அதையே தான் நானும் சொல்றேன்..வாழ்க்கையா? வீணையா? ன்னு யோசிக்க நேரம் கொடுத்திருக்கேன்…சாவகாசமா…இங்கேருந்து யோசிச்சுட்டு வரட்டும்.
இந்தாங்கோ…தூத்தம்…..பார்கவியின் அம்மா, கையில் டம்பளரோட நிற்க, அதைச் சட்டை செய்யாமல்…திரும்பும் ஆகாஷைப் பார்த்து…
என்ன மாப்ளை…நீங்க…உங்காத்தில் உங்கம்மாவுக்குத் தெரியுமா..? என்று சந்தேகமாகக் கேட்க.
மாமி….என் அம்மா அப்பா இப்போ இங்கே இல்லை. வந்ததும் நன் சொல்லிக்குவேன். இப்போ நான் கிளம்பறேன்..பொதுவாகச் சொல்லிக் கொண்டு விறு விறுவென்று நடந்து காரைக் கிளப்பி அதே வேகத்தில் பறந்தான்.
கார் மறையும் வரை பிரமை பிடித்தாற்போல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பார்கவியும்,பிரணதியும் பெற்றோர்களும்.
ஒரு காப்பி குடிக்கற நேரம் தான் மாப்பிள்ளை தரிசனம். காப்பி கூட குடிக்கலை..எப்படி என்னாச்சு பார்கவி…? இவ்ளோ கோபம் இவருக்கு? நீ என்ன தான் சொன்னே….? காத்திருந்த கேள்விகள் இவளை நோக்கி..தங்கமான பிள்ளை இப்படிக் கோச்சுண்டு போறாரே….?
என்னால நம்பவே முடியலை…பார்த்த பிறகும் கூட…பிரணதி அதிர்ச்சியில் சொல்கிறாள்.
ஒண்ணும் ஆகலை…இன்னும் என்ன ஆகணும்…சொல்லிட்டு போனார் தானே? கேட்டேள் இல்லையா? அதான். நம்மள நன்னா ஏமாத்திட்டா அந்த அகிலா மாமி.
இத்தனை காலம் நீங்க சொன்னதை நான் கேட்டேன்,. கொஞ்ச காலம் எனக்காக நான் செய்வதைச் செய்ய விடுங்கோ., எனக்குத் தான் எனது தேவை என்னன்னு தெரியும். என்றவள் ரூமுக்குள் சென்று கதவைச் சார்த்திக் கொண்டாள் பார்கவி.
அழறாளோ…சாபிட்டாளோ…. இல்லையோ ? .என்று பதைபதைப்புடன் துடித்திட இவர்களின் காதுகளில் நீண்ட நாட்கள் மீட்டாத வீணையின் இசைநாதம்….சஹானா ராகத்தில்..
”என்ன கவி பாடினாலும்….
உந்தன் மனம் இறங்கவில்லை…
இன்னும் என்ன சோதனையா…?
முருகா…முருகா….எந்தக் கவி பாடினாலும்….”
ஸ்ருதி சுத்தமாக வந்து ஒலித்தது.அவள் மனக் குமுறலை அவளது வீணை இசைத்துக்கொண்டிருந்தது. நாதத்தால் மனக் காயத்தை ஆற்றிக் கொண்டிருந்தது.
பிரணதி ஓடிச் சென்று கதவைத் தட்டுகிறாள்….பார்கவி…கதவைத் திற….நானும் இருக்கேன் உன்னோட அங்க வரேன்…ப்ளீஸ்…என்று…குரல் தளு தளுக்க அவள் கண்களிலும் கண்ணீர் வழிகிறது.
அடுத்தடுத்து அவளது டயரியில் நாட்கள் வேக வேகமாக நிரம்பி கச்சேரி அழைப்புகள் பெருக ஆரம்பித்தன. மூன்று கச்சேரி வரை பெங்களூரில் கூட சென்று முடித்து விட்டு வந்தவள். ஆகாஷைச் சென்று பார்க்கவும் இல்லை.அவனுடன் போனில் பேசவும் இல்லை.பார்கவியின் வீராப்பு அவள் குடும்பம் அறிந்தது தான். அதனால் அவர்களும் ஒன்றும் பேசவில்லை.அனைவரும் அகிலா மாமியின் வரவுக்காகக் காத்திருந்தனர்.
வம்பு புகைந்து கொண்டு தான் இருந்தது வெளியில்.
ஆறு மாதம் ஆகாஷுக்கு ஆறு ஜென்மங்களாக ஊர்ந்து கொண்டிருந்தது. அதுவே..பார்கவிக்கு ஆறு நிமிடம் போலக் கழிந்தது.
ஆகாஷின் அம்மாவும் அப்பாவும் வந்திறங்கும் நாளும் வந்தது.
வந்திறங்கிய நொடிமுதல் அகிலாவின் கண்கள் ஏர்போர்டைத் துழாவிக் கொண்டிருந்தது. ஆகாஷின் தனித்த வரவேற்பைக் கண்டதும் அம்மாவுக்கு திக்கென்றது. கண்கள் அலைபாய பார்கவியைத் தேடிக் களைத்தது, கனத்தது மனம்.
ஆகாஷைக் கட்டிக் கொண்டு பார்கவி எங்கேடா ஆகாஷ்? என்ற கேள்விக்கு…
போகும்போது பேசலாம்…வாங்கோ…என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு லக்கேஜைத் தள்ளிக் கொண்டு நடந்தான் ஆகாஷ்.
அப்படியே…அம்மா…சௌமியாவோட குழந்தை எப்படி இருக்கா? எல்லாரும் சௌக்கியமா? என்று பேச்சை மாத்தி குசலம் கேட்க…
அகிலா தன் கணவரைப் பார்த்து ஒன்றும் புரியாமல் உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள். பின்பு…டேய்…குழந்தை கொழுக்கு மொழுக்குன்னு அமெரிக்கா குழந்தை மாதிரியே இருக்கா…நீ மாமாவாயிட்டே…குழந்தைக்கு நல்ல நீள நீளமான விரல்கள்…நம்ம சௌமிக்கு..தன் பொண்ணுக்கு பார்கவிட்ட சொல்லி வீணை கத்துக் கொடுக்கணும்னு ரொம்ப ஆசை…வாய் ஓயாமச் சொல்லீண்டா. நீ தான் சிபாரிசு பண்ணனும்..மகிழ்வோடு பேசிய அம்மாவை இடைமறித்த ஆகாஷ் சொன்னான்….
” அவ பொண்ணுக்கு வீணை கத்துத் தரவா பார்கவி. ?. இந்த வேலை எல்லாம் அவளுக்கு வேண்டாம் போதும்…போதும்…என்றான்..”
இல்லடா ஆகாஷ் அது ஒரு தெய்வீகக் கலை…அமெரிக்காவில் கலைக்கு எவ்ளோ மதிப்பு தெரியுமா? என் மாட்டுப்பொண்ணு தான் பார்கவின்னு சொன்னதும் சம்மந்தி மாமி எவ்ளோ சந்தோஷப் பட்டா தெரியுமா?
மல்லிகைப் பூவினால் வாழைநார் மனத்தது போல் நேக்கு ரொம்பப் பெருமையா இருந்தது.
காரில் ஏறி அமர்ந்ததும்…கனந்த மௌனம். முன்னிருக்கையில் ஆகாஷின் அருகில் அமர்ந்திருந்த அப்பா தான் மௌனத்தைக் கலைத்தார். என்னாச்சுடா….உடம்பு சரியில்லையா என்ன? என்றார்.
மண்ணாங்கட்டி…அழுத்தமாகச் சொன்னவன்…தாங்காமல் நடந்த விஷயங்கள் முழுதையும் கொட்டித் தீர்த்த
வண்ணம் தனது மனக் குமுறலுக்கு ஏற்றபடி காரை ஓட்டினான்.
அப்பா…நான் செய்தது சரிதானே? என்று அப்பாவின் முகத்தைப் பார்த்ததும்..
கொஞ்சம் நிதானமா வண்டிய ஓட்டு…ம்ம்…நீ செய்தது தப்புடா ஆகாஷ்….எங்களை ஏன் கன்சல்ட் பண்ணலை…ஒரு வார்த்தை கேட்காமல் இப்படியா? பாவம் பார்கவி..இப்போ அவாத்தில் நம்மளைப் பற்றி என்ன நினைப்பா?
உனக்கு என்ன வால்யூஸ் தெரிஞ்சிருக்கு? அம்மா எல்லாம் தெரிஞ்சுதானே அவாத்தில் சம்பந்தம் கேட்டாள்.
எனக்குப் பிடிக்காதுன்னு உனக்கு யார் சொன்னா? என் பிசினஸ் அப்படி . இப்போ கூட நான் ஆஃபீஸ் போனா ஆறு மாச வேலைகள் காத்திருக்கும். எல்லாத்துக்குமே ஒரு டெடிகேஷன் வேணும்.
நாங்க ரெண்டு பேரும் ஊரில் இல்லாத போது உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் நன்னாப் புரிஞ்சுக்க தனிமை இருக்கும்னு நாங்க நினைச்சால்…இங்க வேற மாதிரியான்னா நடந்திருக்கு. நாங்க உன்கிட்ட எடுத்துச் சொல்லிட்டு போகலை. அதான்….அமெரிக்கால நம்ம மாப்பிள்ளை நம்ம சௌமியை எப்படித் தாங்கறார் தெரியுமா?
அவருக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கார். இண்டர்நெட்ல அவள் நிறைய விஷயங்கள் இந்தியாவைப் பற்றி எழுதி இருக்கா…. எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருந்தது..இல்லையான்னா…என்று கேட்டதும்..
ஆமாம்….ஆமாம்…ஆனால் நீ ஏண்டா ஆகாஷ் எங்க கிட்ட ஒண்ணும் சொல்லலை…அவாளும் எப்படி இத்தனை மாசம் பேசாமல் இருந்தா? நீங்க ரெண்டு பேரும் எல்லாரையும் மறந்துட்டு ஜாலியா இருக்கேள்னு, அங்க நாங்க நினைச்சுண்டு இருந்தோம்.
சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு…இப்போ நம்ம வீடே தந்தி இல்லாத வெறும் வீணை…தெரியுமா? அம்மா சொல்கிறாள்..இப்படிப் பண்ணிட்டியே…உன் பேச்சுத் தான் உனக்கு எதிரி….துர்வாசர் மாதிரி..அப்படி என்ன கோவம் வேண்டிக் கிடக்கு…இந்த வயசில்..கல்யாணம் ஆனா புதுசில்….இப்படி யாராவது கொண்டு போய் விடுவாளா? அபிஷ்டு..அபிஷ்டு…
டேய்…ஆகாஷ் வீட்டுக்குப் போயிட்டு லக்கேஜைப் போட்டுட்டு கொஞ்சம் ரெஃப் ஃரெஷ் பண்ணனீண்டு மூணு ஃப்ளைட் டிக்கட் புக் பண்ணு சென்னைக்கு.
ஏன்பா..?
ஏன்பா…வா ? நம்மாத்துப் பொண்ண அழைச்சுண்டு வரத்தான்…நீ இப்படி ஒரு காரியம் பண்ணி வைப்பேன்னு நாங்க யோசிக்கவே இல்லை…அவளோட வாதம் நியாயமானது. ஒரு இசைத் துறையில் பிரபலமானவளின் கணவனாக இருக்க நீ கொடுத்து வெச்சிருக்கணம்.நீ இதை இப்போ உணரமாட்டே..தலை இடிபடாத வரை புத்தி வராது. முதல்ல உன்னோட தாத்தா காலத்து ஈகோவைத் தூக்கி குப்பையில் கெடாசு . இப்போல்லாம் மனுஷாளோட மனசு வானம் மாதிரி பறந்து விரிந்திருக்கு.புரிஞ்சுக்கோ..என்றவர் பின்னால் அமர்ந்திருக்கும் அகிலாவை பார்க்கிறார்.
அகிலாவுக்கு ஆச்சரியம் தாங்காமல் தன் கணவன் பேசுவதை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டு வந்தாள்.
அப்பாவிடம் ஆகாஷால் ஏனோ வாதாட முடியவில்லை. அவன் மனம் முழுதும் சங்கடம் வந்தாச்சு…இப்போ வெங்கடரமணான்னு….கூப்பாடு போட்டுண்டு தான் இருக்கான்…மனசுக்குள்ளே. ஆஃபீஸ்ல வேலையும் பண்ண முடியலை….பார்கவி நிழல் மாதிரி அவனை நினைவில் துரத்திக் கொண்டு தான் இருக்கா….அனால் அவனோட ஈகோ…அவனை ஸ்டெடியா நிக்க வெச்சுப் பாக்கறது.
அப்பாவின் பேச்சைக் கேட்ட ஆகாசுக்கு தான் செய்தது எவ்வளவு பெரிய இமாலயத் தவறு என்று பூரணமாக உணர ஆரம்பிக்கவும் அவனது ஈகோ நெஞ்சுக்குள் இரக்கமாக இறங்கி உட்கார்ந்தது.
அப்பா…நான் செய்தது தான் தப்பு…அம்மா என்கிட்டே ஒண்ணும் சொல்லலை…நான் இந்த பொண்ணு வேண்டாம்னு சொன்னதும்..அம்மா கல்யாணம் ஆனதும் வீணை வாசிக்கப் போக மாட்டான்னு சொன்னாள் ஆனால்..இந்த நாலு மாசத்தில் நானும் ரொம்பப் பட்டுடேன்ப்பா. ஒரு போன் பண்ணக் கூட என்னோட ஈகோ தடுத்துது…அது தான் நிஜம்..ஆனால் அவளாவது பண்ணியிருக்கலாம்…அவள் மட்டும் என்ன குறைச்சலா? அவளுக்கும் பயங்கர ஈகோப்பா….
அது ஈகோ இல்லடா…உரிமை…அன்பு…அதை சரியாப் புரிஞ்சுக்கற பக்குவம் வேணும்..நான் உங்கம்மாவை கச்சேரிக்கெல்லாம் போகாதேன்னு கத்துவேன்..அவ என்னிக்காவது கேட்டாளோ…? நீயே சொல்லு..அங்க போயிட்டு ராத்திரி ஃபோன் பண்ணுவா வந்து பிக்கப் பண்ணிக்கோங்கோ…நான் இந்த சபா வாசல்ல நிக்கறேன்னு…”நீ சொல்றதச் சொல்லு நான் என் ஆத்ம திருப்திக்கு பண்றதப் பண்றேன்னு அர்த்தம்..” இப்படி போயி போயி தான் உருப்படியா ஒரு நல்ல காரியம் பண்ணினா அகிலா..அதான் உன் கல்யாணம்…
பார்கவி தங்கமான பொண்ணுடா…..அவளிடம் கலை வாணியே குடி இருக்கா……நானே அவளோட வீணை இசைக்கு பரம ரசிகை தெரியுமா? கல்யாணத்துக்கு பிறகு உன்னை சரிகட்டலாம்னு நான் நினைச்சேன்..அதுக்குளே நீ காரியத்தை இப்படி சொதப்பி வெச்சிருக்கே.
அகிலா சொன்னதுமே மூன்று பேரும் சிரித்தார்கள்.
எப்படா வீடு வரும்…சாமானை எல்லாம் இறக்கி வெச்சுட்டு பறந்து போய் பார்கவியைப் பார்க்கலாம்னு துடிக்க ஆரம்பித்தது ஆகாஷின் குழந்தை மனது. மனசு மானசீகமாக பார்கவி என்னை மன்னிச்சுடு..ன்னு குழைந்தது.
உவ்வாக்…..உவ்வாக்…உவ்வாக்…என்று நாலாவது முறையாக வாஷ்பேசினை நோக்கி ஓடினாள் பார்கவி.
அவளருகில் பிரணதி…எவ்ளோ நல்ல விஷயம், அத்திம்பேர்ட்ட ஒரு ஃபோன் பண்ணி சொல்றது தானே. ஓடோடி வர மாட்டாரா? .இதே நானாயிருந்தால், ரெண்டு கண்ணுமே நீங்க தான்னு சொல்லிட்டு பேசாமல் அங்கியே இருந்திருப்பேன். ” இப்போ இங்க வந்து என்னத்தை பெரிசா சாதிச்சே..உன் வீணை ஸ்கூலில் பயிற்சி எடுத்துண்டவா எக்ஸாம்ஸ் கொடுத்தாச்சு. இனிமேல் நீயும் எந்தக் கச்சேரியும் பண்ண முடியாது…ஏன் தெரியுமா? என்று கேலியாகக் கேட்க…
ஏன்…..?
நீயே இனி பானை வயிரோட வீணை மாதிரியே…..சொன்னவள் மகிழ்வோடு சிரிக்கிறாள்.
ம்மா…பாரும்மா இந்த பிரணதிய..எப்படி கிண்டல் பண்றா கேளேன்…எனக்கே சிரிக்கக் கூட முடியல…என்று பார்கவி சிணுங்க.
போதும்…போதும்…நானும் கேட்டுண்டு தான் இருந்தேன். அகிலா மாமி வந்ததும் உன் பிரச்சனைக்கு வழி பிறக்கும்.அம்மா வாக்கு போல சொல்கிறாள்.
பார்கவி மனசுக்குள், தான் படித்த “இரகசியம்” புத்தகத்தில் உறவு மேம்பாட்டிற்கான இரகசியம் புத்தகம் என்ன சொல்றது…ஒரு உறவைக் கவர்ந்திழுக்க நம் எண்ணங்கள்,வார்த்தைகள்,செயல்கள் மற்றும் சூழல்கள் எல்லாமே நம் விருப்பத்தோடு முரண்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளச் சொல்கிறது..படித்ததை நினைவுக்குக் கொண்டு வருகிறாள்.
நானும் இனிமேல் அதைப் போலவே நினைக்க ஆரம்பித்தால்..ஆகாஷ் நிச்சயமாக என் மனதைப் புரிந்து கொள்வார்.நிச்சயமாக அன்புக்கு அந்த சக்தி உண்டு. இதில் தியாகம் இல்லை. அன்பைப் பரிபூரணமா உணர்வது. கொடுப்பதில் இருக்கும் இன்பம் விட்டுக் கொடுத்தலிலும் இருக்கும். எப்படி ஒரு வீணை மீட்டுபவரின் விரல் அசைவுக்குத் தக்க அதிர்ந்து இனிய இசையை உள்ளிருந்து அள்ளித் தருமோ…அது போல்…வீணையடி…நான்… எனக்கு.! ஒரு இல்லறத்துக்கு வேண்டிய இனியவை எல்லாம் இனி என்னுள்ளே…தீர்மானத்தோடு மனப் போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தவளாக…எண்ணிக் கொண்டிருக்கையில்..
மறுபடியும் நெஞ்சு வரை எதிர்த்து வர…வாஷ்பேசினை நோக்கி ஓடியவளை, தாங்கிப் பிடித்தவள் மசக்கை…என்னை மாதிரியே உனக்கும் இருக்கு….நேக்கு இப்படித் தானிருந்தது..உன்னை…பிள்ளயாண்டு இருக்கும்போது என்று சொன்னவள் பார்கவியைத் தாங்கிப் பிடித்தபடி “மெல்ல..மெல்ல…” என்று அருகில் துடித்துக் கொண்டிருந்தாள் அம்மா…கூடவே மனசெல்லாம் தான் பாட்டியாகப் போகும் சந்தோஷம் வேறு.
நேரம்….இரண்டு குடும்பங்களுக்கும் ஒரே விஷயத்தை ஒருவருக்கொருவர் சாதகமாக எண்ண வைத்து கடந்து கொண்டிருந்தது.
சென்னைக்கு வந்து சேர்ந்தவர்கள் மீனம்பாக்கத்திலிருந்து அண்ணா நகர் வரும் வரைக்கும் கூட காரில் உட்காரப் பொறுமை இல்லாமல் இருந்ததனர்..ஆகாஷை அகிலா திட்டிக் கொண்டே வந்தாள்…நான் எப்படி அவா முகத்தில் முழிக்கப் போறேனோ…? என்னை எவ்வளவு தப்பா நினைச்சிருப்பா….இப்படிப் பண்ணிட்டியே…ஒரு வார்த்தை எங்களைக் கேட்டிருக்கக் கூடாதா? “அடையார் ஆனந்த பவனில் ஸ்வீட்ஸ் ” வாங்கிக்கோங்கோ…என்றவள் வீடு வரும்வரை புலம்பிக் கொண்டே வந்தாள்.
அழைப்பு மணியை அழுத்திவிட்டு..கதவு அருகில் பொறுமையின்றி கையில் கனத்துடன் தவித்துக் காத்திருந்தார்கள் மூவரும்.
உள்ளே ராஜேஷ் வைத்தியாவின் “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தது…அழைப்பு மணி..இசை..முடியும் முன்னே..பார்கவியின் அப்பா வந்து கதவைத் திறக்க…இவர்களைப் பார்த்த அவரின் முகத்தில் மின்னல் கீற்று வந்து போனது…” வாங்கோ வாங்கோ…ஆச்சரியம்…உங்களை இப்போ தான் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்…எப்போ வந்தேள்
யு எஸ் லேர்ந்து…குழந்தை சௌக்கியமா? .என்று கை கால்கள் பர பரக்க …பார்கவி, பிரணதி…அம்மாவை கூப்பிடு யாரெல்லாம் வந்திருக்கா பாருங்கோ…அந்தக் குரலில் அன்பும், மதிப்பும்,பரவசமும் அப்பட்டமாகத் தெரிந்தது.
எதோ ஒரு குற்ற உணர்வு ஆகாஷி ஒரு நொடியில் இடித்து விட்டுப் போனது. அவர் கேட்காமலே..”எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு இங்க வந்தே” என்று அவன் மனசே கேட்டு விட்டுப் போனது.
தளர்ந்த நடையில் பார்கவி வருவதைப் பார்த்ததும்…ஆகாஷுக்குத் ..தூக்கி வாரிப் போட, என்னாச்சு…என்னாச்சு பார்கவி…? இப்படி ஒடிஞ்சு போறா மாதிரி……தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பது போல பதற, அருகில் வந்து அவளை அணைத்து கொண்டு….அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ” மன்னிச்சுக்கோ” என்கிறான்.
மாப்ளே…எல்லாம் சந்தோஷமான சமாச்சாரம் தான்….நேற்று தான் கன்பார்ம் ஆச்சு…நீங்க..என்று முடிப்பதற்குள்
அகிலா…பார்கவியை அன்பாக அணைத்தபடியே….”நீயாவது என்கிட்டே ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா…இன்னைக்கு தான் வந்தோம்..கேள்விப் பட்டதும் ஓடோடி வந்தோம்…போனாப்போட்டும் விடு….நாங்கள் ரொம்பப் பதறிப் போயிட்டோம் தெரியுமா…? யாரோட கண் பட்டதோ….? இப்படியாச்சு…நீ எதுக்கும் கவலைப் படாதே..நாங்க இருக்கோம்..அவன்ட்ட எடுத்து சொன்னோம்…சொல்லேண்டா…என்று ஆகாஷைப் பார்த்து உரிமையோடு அதட்ட…
ஆமாம்..பார்கவி….நீ சொன்னது எல்லாம் நியாயம் தான்..நான் தான் உன்னைப் புரிஞ்சுக்காம…உன்னை ஒதுக்கினேன். ..என்று திணறினான்.
பார்கவி வெட்கத்தோடு தலை குனிந்து தலையசைக்க…சினிமாவில் வரும் க்ளிமாக்ஸ் காட்சி போல ..இரண்டு குடும்பமும் குதூகலமாக சிரிக்க…நடந்த விஷயங்கள் யாவும் நீர்க்குமிழி போல மறைந்து போனது..
பார்கவி….உன்னோட முதல் குழந்தையை எடுத்துண்டு கிளம்பு…இன்னைக்கே நாம நம்மாத்துக்குப் போறோம்…சரியா என்று புதிராகச் சொன்னாள் அகிலாமாமி.
பார்கவி, ஆகாஷ் இருவரும் புரியாமல் விழித்தார்கள்….
ஒரு பெண்ணுக்கு அவள் பெறும் குழந்தை தான் பொக்கிஷம்..சில சமயம் தன் குழந்தைக்காக வாழ்க்கையைக் கூட தியாகம் செய்வாள் பெண். இல்லையா பார்கவி…..? அதான் சொன்னேன்…உன் வீணை தான் உன் முதல் குழந்தைன்னு….கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரை துடைத்தபடியே புன்னகைத்தாள்.
தன் மாமியாரின் மென்மையான உயர்ந்த குணத்தை ஒரு நிமிஷம் புரிந்து கொள்ளாமல் போனேனே…என்று மனம் பதைக்க அவர்கள் கைகளைப் பற்றிக் கொள்கிறாள் பார்கவி….அங்கு இனிமேல் எந்தப் பேச்சுக்கும் அர்த்தமில்லாமல் மௌனம் விளக்கியது.
டேய்…ஆகாஷ்….இங்கேர்ந்து பெங்களூருக்கு ஒரு கார் அரேஞ் பண்ணனும்… ஃ பிளைட் பார்கவிக்கு ஒத்துக்காது…என்ற அகிலாவைப் பார்த்து பார்கவியின் அப்பா…”மாமி…வேண்டாம்…வேண்டாம்…அட்லீஸ்ட் ஒரு நாள் இருந்துட்டு நம்ம கார்லயே போகலாம்…சரியா பார்கவி…என்றது…ஆமாம்பா….ஒரு நாள் இருந்துட்டு போலாம்மா என்று அகிலாவின் கைகளை இன்னும் இருக்கப் பிடித்துக் கொஞ்சினாள் பார்கவி,
பிரணதி எல்லோருக்கும் இனிப்பைத் தந்து கொண்டிருந்தாள்….கூடவே காஃபியும்….இன்னைக்கே போக வேண்டாம்..சம்மந்தி .ரெண்டு நாள் தங்கிட்டுப் போகலாம்…என்று சொல்லிக் கொண்டே வந்தாள்…சமையல் ரெடி பண்றேன்….எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை…என்று பட படத்தாள் அம்மா…
அதற்குள் ஆகாஷ் வாசலுக்கு வந்து “வாணி ஹயக்ரீவா தி ஸ்கூல் ஆஃப் வீணா” அந்த பெயர்ப்பலகையை ஆசையோடு தடவியபடி, “அப்பா இதையும் எடுத்துண்டு போலாம்…அங்க உதவும்..” என்று சொல்லி பார்கவியைப் பார்த்து , இங்க வா என்று கண்ணால் சைகை காட்ட.
அகிலாவின் பிடியில் இருந்து நழுவி ஆகாஷ் அருகில் வந்து உரிமையோடு தோளில் சாய்ந்து கொள்கிறாள் பார்கவி.அவளுக்குப் பெருமை பொங்கியது முகத்தில். தனது தூய பிரார்த்தனை வீண் போகவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். சற்று முன்பு வரை இருந்த மசக்கை உபாதைகள் கூட அவளைத் தனிமையில் விட்டுச் சற்று விலகி நின்றது….
சட்டைப் பையில் இருந்த ஆகாஷின் கைபேசி…..”வீணைக்கு வீணை குஞ்சு..நாதத்தின் நாதப் பிஞ்சு விளையாட இங்கு வரப் போகுது.”.என்று அவனை அழைத்தது….உடனே….ஆச்சரியமாக வெட்கம் கலந்த புன்னகையில் கணவனை ஏறெடுத்துப் பார்த்த பார்கவியை கண்ணடித்தபடியே கைபேசியை எடுத்து…”ஹலோ…நான் சென்னையில் இருக்கேன்…அங்கு வந்ததும் பேசறேன்” என்று இணைப்பை துண்டித்தான்.
அவளது அத்தனை மகிழ்வும் ஒருசேர முகத்தில் வெளிச்சம் போட, அந்த அழகை ரசித்த வண்ணம்…ஆகாஷ்
அவளை சேர்த்து அணைத்து “என் லட்சுமி கிட்டேர்ந்து சரஸ்வதியை இனி பிரிக்க மாட்டேன்” என்று மென்மையாகச் சொன்னதைக் கேட்டதும்….ஆனந்த ராகம் அம்ருத வர்ஷிணியாய் நெஞ்சம் முழுதும் பாய, கணவனின் கரங்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் பார்கவி.அதில் அவள் வாழ்க்கையைத் திணித்தது போல் உணர்ந்தான் ஆகாஷ்.
நிம்மதியான மனோபாவத்தில் பார்கவியையும் அவளது வீணையையும் தாங்கிக் கொண்டு அந்தப் பெரிய சொகுசுக் கார் பெங்களூரை நோக்கி விரைந்தது……பார்கவியை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வண்ணம் ஆகாஷ் முன்பு அவள் ஆசையாகக் கொடுத்த சிடி யை சுழல விட…காரில் பார்கவியின் வீணை நாதமழை பொழிய பிரயாணம் உல்லாசமாகக் கடந்து கொண்டிருந்தது.
பார்கவியின் இதயவீணையை இப்போது ஆகாஷ் மீட்ட அங்கிருந்து ஆனந்த ராகம் இசைக்க ஆரம்பித்தது .
———————————————————————சுபம் —————————————————————————————-
ஜெயஸ்ரீ
எழுத்தாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக