இன்னிக்காச்சும் மருந்து வாங்கீட்டு வந்தியாடா? ஈனமான குரலில் ஆத்தா....ஆதிலட்சுமி.. அவள் மகன் .சின்ராசு வீட்டுக்குள்ளே நுழைந்ததும் அதற்காகவே காத்திருந்தவளாகக் கேட்கிறாள்.
அடச்சே....என்ன மோசமான தலெளுத்து என்னுது...ஒரு சீக்காளி ஆத்தாளுக்கு மருந்து மாத்திரை வாங்கியாரக் கூட துட்டு இல்லாத சென்மம்...மானங்கெட்ட பொளப்பு பாக்கறேன்...கொஞ்சம் கூட நன்றி கெட்ட சனங்க, ஏமாத்தற சனங்க, இதுங்களுக்குச் செஞ்சு இனியும் கூலி கெடைக்கும்னு நிச்சயமில்லை...இந்த புரோக்கர் பொளப்ப தூரக் கெடாசிட்டு இனிமேட்டு......
என்ன செய்யுறது? பெரிய கேள்வி தலையில் குட்டியது..அதிர்ந்தான்,சின்ராசு...ஆமா..பெறகு...என்ன செய்யுறது?
காலில் சொம்புத் தண்ணீரை மொண்டு விட்டுக் கொண்டு அலம்பிக் கொண்டிருந்த சின்ராசுவிடம்....
என்னடா...பேச்சு மூச்சைக் காணோம்.....அப்பிடியே போய் சேருன்னு சொல்லுதியா? போறேண்டா...போறேன்...நான் போனா அப்பத் தெரியும்...உன்ன மாதிரி ஜென்மங்களுக்கு..!
ஏன்தா....நானே...நொந்து போயி வந்துருக்கேன்...நீ வேற வெந்த புண்ணுல தீக்குச்சியை எரியவுட்டுக் காமிச்சா எப்புடி? துட்டிருந்துச்சுன்னா....மருந்த வாங்கியாற மாட்டேனாக்கும்...நீயெல்லாம் தேளாப் பொறந்திருக்க வேண்டியவ.....கொட்டியே கொன்னுப்புடுவியே...!
எலேய்... .செத்த பாம்ப அடிக்கற பார்த்தியா...இப்போ என்ன கேட்டுப் புட்டேன்....மருந்து எங்கடான்னு கேட்டா....மொகரையக் காமிக்கிறே....நீயெல்லாம் என் பாவத்துக்குப் பொறந்த பய.
அழுக்குப் பாயில் படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்து விட்டாள்....மகனைத் திட்டி திட்டியே உயிரை வளர்த்துக் கொள்ளப் பழக்கிக் கொண்டவளாச்சே.
சின்ன வயசுலேர்ந்து தலையா அடிச்சுக்கிட்டேன்....கூலி வேலை செய்யுற பொம்பள வவுத்துல வந்து பொறந்துபுட்டே....நல்லாப் படி...நீ படிச்சாத்தேன் நாளிக்கு கஞ்சிக்கு யாரு கையையும் பார்க்க வேணாம்னு...கேட்டியா... ? படிக்கிறதத் தவுத்து தெருவுல மேயுற கூத்தாடிக்கெல்லாம் கொடி பறக்க விட்டே....இப்பென்னாச்சு.....அவிங்க ஓங்...கோவணத்தையே பறக்க வுட்டுப் போயிட்டைங்க.
...........
காலங்கடக்க .பெத்தவளுக்கு கஞ்சி ஊத்தக் கூட நாதியில்லாம நிக்கிறே...வவுறு பத்திக்கிட்டு எரியுதுடா..!
............
எலேய்...என்னக் காப்பாத்திக் கொடுலே...நீயும் நல்லாருப்பே..நான் நடமாடி நாலு ஊட்டுப் பாத்திர பண்டம் களுவி உன் வவுத்தை நிறைச்சுப்புடுவேன்...!
ஆத்தா...நானா...நீ வேணாம்னு நினைக்குதேன்..அதான் அந்தாளு....ஓம் புருஷேன்...ஓங் கூட வாளப் பிடிக்காமதேன்
கரித்துண்டுல கிரிக்கிப்புட்டு வேறொரு சிரிக்கிய இளுத்துக்கினு ஓடிப் போச்சே...அப்பவே நானும் களண்டிருக்கணும் செஞ்சனா....நீயே சொல்லு செஞ்சனா...பெத்த கடைமையின்னு, ஆத்தாளாச்சேன்னு..
இன்ன வரிக்கும் உம் மவனா நிக்கல..! எகிறிக் கொண்டு வந்தான் சின்ராசு.
அது என் களுத்துச் சத்துரு......அத்துகிட்டு ஓடிடுச்சு ...நீ என் வவுத்துச் சத்துரு.....இருந்து இன்னும் என் களுத்த அறுக்குற...எனக்கு ஒண்ணும் பெரிய வித்தியாசம் காணலை....இப்ப என்னாத்துக்கு பளைய கதே பேசுறே...நீ...!
ஹக்....ஹக்....ஹக்....ஹக்....சொல்லிவிட்டு தொடர்ந்து இருமுகிறாள்.
செருமலோட..."உன் உதாருக்கெல்லாம் வேற ஆளப் பாரு..நீ ..என்கிட்டே எகிறாதல..."
தோபாரு..ஆத்தா .இன்னொரு வாட்டி இப்பிடில்லாம் சொன்னீன்னா, பொறவு இந்த வீட்டுப் பக்கமே தலையைக் காட்ட மாட்டேன் ஆமா....சொல்லிட்டேன்..
அடப் போடா....சீமான்...கை நிறையக் கொண்டுட்டு வந்து கொட்டுர...நீ வரலையின்னு நான் மூக்கைச் சீந்தவா?
எக்கேடோ கெட்டு தொலை..மருந்த வாங்கியாந்தியாடான்னு கேட்டா...அதுக்கு இம்புட்டு வியாக்கியானமா? வெளங்காத பய....நீ வரதும் ஒண்ணுதேன்...தொலையிறதும் ஒண்ணுதேன்..!
சொல்லிபுட்டு பாயில் படுத்துக் கொள்கிறாள்..படுத்தும் சும்மா இருக்காமல்...."நான் புள்ளேன்னு....நெனச்சு..ஒரு
இரும்பொலக்கையைப்..பெத்துப் போட்டு.....என்று ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க....
த்தா...இப்ப இன்னாத்துக்கு இந்தக் கூவு...? முதல்ல .நிறுத்து உன் பிலாக்கணத்த....இப்ப என்ன இங்க எளவா விழுந்து கெடக்கு...நானும் நாயா அலைஞ்சு தான வீடு பார்த்து, பிடிச்சுக் கொடுத்து பிரோக்கர் கமிஷன் வாங்கியாறேன்.இப்போ ஆடி மாசம் என் பிசினெஸ் கொஞ்சம் டல்லு...அதும் போன மாசம் வீடு பிடிச்சிக் கொடுத்த எடத்துல முள்ளங்கிப் பத்தையா பத்தாயிரம் கமிஷன் தரோணும்...இதோ தரேன்..இப்பப் தாரேன் ன்னு சொல்லி சொல்லியே என் செருப்பைத் தேச்சுப்புட்டான்.அந்த ஐயர் ஊட்டு காரங்க..நானும் நெதம் நாயா அலைஞ்சு தான் கேக்குறேன்....
அம்புட்டுப் பெரிய ஊடு...சொல்லும்போது வாயெல்லாம் பல்லா வந்து நின்னாங்க...அந்த ஐயிரும்,மாமியும்...பேசி முடிச்சி குடி வந்து ரெண்டு மாசம் ஆவப் போவுது....பிறவு தாரேன் கொஞ்சம் பொறுன்னு சொல்லிப்புட்டு, இப்போ கேட்டா...நீ ஏன்னா....எனக்குக் கடனாக் கொடுத்தியா ? ன்னு வாய் கூசாமே அந்த மாமி கேட்குறா...கேவலம்...ஒரு நூறு ரூபாத் தாள் கூட கையில கொடுக்காமே ஏமாத்திருச்சுங்க.இத்தனைக்கும் பெரிய பணக்காரங்கன்னு பேரு,
நா என்ன அதுங்க கிட்ட என் மானத்தை உட்டு பிச்சையாக் கேக்க முடியும்..உழைச்ச காசை ஏமாத்தி என்னத்த சேத்து வைக்கப் போவுதோ..?
உதார் உட்டா...ஆனதைப் பாருங்குது, பெருசு.
எதுக்கும் சாயந்தரம் கடீசியா..இன்னொரு தரம் போயி கேக்குறேன். தரத வாங்கி மருந்து வாங்கியாறேன். அப்படி இல்லேன்னு வையி...இந்தூட்டுப் பக்கமே வராமே எங்கனா போறேன்...சரி தான.
.......................
என்னாங்கரே, இப்போ நீ?
இம்புட்டுப் பெரிய உலகத்துல ஒனக்குன்னு ஒரு சின்ன வேலை கூடவா கெடைக்க மாட்டேங்குது...? புரோக்கராம்...புரோக்கர்....! உழைச்சு பாருடா....காசு கனக்கும்..கையிலும் .தங்கும்..! சொல்லிக் கொண்டே குவளைத் தண்ணீரை எடுத்து மடக் மடக் கென்று குடித்தவள் மறுபடியும் பாயில் சுருண்டு கொண்டாள்.
இதைக் கேட்டதும்....ஏனோ சின்ராசுக்கு நம்ம அம்மாவின் இந்த நிலைக்கு நான் தான் காரணம்..முதலில் ஒரு வேலையைத் தேடு என்று மனசாட்சி நெஞ்சில் அறைந்து சொன்னது.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் சின்ராசு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினான்.
முதல் முறையாக,அந்த ஊரின் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு சென்று அங்கே "காலணிகளை இங்கே வைக்கவும்..."அந்தப் பலகை இருக்கும் இடத்தைப் பார்த்து..."அண்ணே...நானும் இங்கே செருப்ப பாத்துக்கற கவுன்டர் போடலாம்னு இருக்கேன்...கொஞ்சம் உதவி செய் நண்பா....என்றதும்...நீயாடா...?.நல்லதாப் போச்சு...நீ இன்னாத்துக்கு புதுசா கவுன்டர் போடணும்...இதோ...இத்த எடுத்துக்கோ...நான் பக்கத்துல அர்ச்சனைத் தட்டு கடை குத்தகைக்கு எடுத்திருக்கேன்...நீ இத்த எடுத்து பண்ணு தல...நானும் பத்து நாளா இத்த மாத்தி உட ஆள் தேடிக்கிட்டே இருக்கேன்....என்று பெரிய மனசு பண்ணி பேச...
ஏதோ லாட்டரி அடித்தது போல் உணர்ந்தான் சின்ராசு...முதல் முறையாக அந்தக் கோவிலின் கோபுரத்தைத் கையெடுத்து கும்பிட்டு...தொளிலக் கத்துக் குடுண்ணே....பிறகு பாரு.. பாட்டா ஷோரூம் ஒண்ணு வெச்சிபுடலாம் ...என்று சந்தோஷமாக சொல்லிவிட்டு..மொதல்ல .இத்த என் ஆத்தா கையில சொல்லிப்புட்டு வந்திர்றேன்..
வேற யாருக்கும் இந்த வேலையத் தந்திடாதீங்க...என்று உத்திரவாதத்தோடு...அங்கிருந்து கிளம்பியவன்
ஆண்டவன் கண்ணத் தொறந்துப்புட்டான்..இப்போவே ஐயர் வூட்டுல கமிஷன் கேட்டா மருந்துக்கும் ஆச்சு....கைசெலவுக்கும் ஆச்சு...கணக்குப் போட்டபடியே...ஐயாயிரம் தந்தாலும் போதும்...மனசுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டே நடராஜன் ஐயர் வீட்டை நோக்கி விறு விறுவென்று நடந்தான்.
"ஓம் பூர் புவஸ்ஸுவஹ..தத் ஸ விதுர்வரேண்யம்....பர்கோ..." காலிங் பெல்லின் இசை வீடெங்கும் இசைக்க....
ஏன்னா யாருன்னு சித்தப் பாருங்கோ....கோகிலா பூஜை அறையிலிருந்து குரல் கொடுக்க..
கதவைத் திறந்த நடராஜன்..."வாப்பா...சின்ராசு...நீயா....மாமி சொன்னா...அடிகடிக்கு வந்துட்டுப் போறான்னுட்டு..
ம்ம்...ஆமாங்கய்யா.....வீடு நல்லா இருக்கா....எந்தப் பிரச்சனையும் இல்லல...அதோட எனக்குத் தர வேண்டிய கமிஷன் பணம் இன்னும் வரலை....அத்தக் கொடுத்தீங்கன்னா.....சீக்காளி ஆத்தாளுக்கு மருந்து வாங்கோணம்..
ஒ...அந்தக் கமிஷனா? இரு வரேன் என்பதற்குள்...
ஏன்னா....உங்களுக்கு போன் வந்தருக்கு...ஆஃபீஸ் காரா உங்ககிட்டப் பேசணுமாம்...முக்கியமா....என்று கோகிலா கைபேசியைத் தூக்கி காண்பித்து, அழைக்க...
தோ..இருப்பா...என்னன்னு பார்த்துட்டு வந்துர்றேன்..என்று வேஷ்டியை..காலால் உதைத்து மடித்துக் கட்டிக் கொண்டே உள்ளே போகிறார் நடராஜன்.
ஐந்து நிமிஷத்தில் திரும்ப வந்து...ம்ம்..இந்தா மருந்து வாங்கணும்னு சொன்னே....வெச்சுக்கோ என்று சொல்லி ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை கையில் திணித்து விட்டு....பார்க்கலாம்...என்று தலை அசைக்க...."போயிட்டு வாடா.." என்பது போலிருந்தது....!
என்னங்க இது, ஐயா...ரொம்ப அநியாயம்....இதெல்லாம் பேசித் தானே...என்று இழுக்க.
இதுவே ரொம்ப ஜாஸ்தி. ஏதோ நானும் கேட்டேன். நீயும் சொன்னே. மேற்கொண்டு என்ன அட்வான்ஸ் குறைச்சலா? இல்லை வாடகை தான் கம்மியா? நீ வீட்டுக் காரன்ட்ட போயி என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோ...இனிமேல் என்னைத் தொல்லை பண்ணாதே. மாமி கோவிலுக்குப் போகணுங்கறா...நேரமாறது எங்களுக்கு..சொல்லிக் கொண்டே திரும்பி நடக்கிறார்.
தூரத்தில் மாமி..தன் பட்டுப் புடவையால் மூக்குத்தியின் வைரத்தை துடைத்துக் கொண்டு...அப்படியே காதில் டாலடிக்கும் வைரக்கம்மலையும் துடைக்கும் பணியில் இறங்க...அவளின் கண்கள் சின்ராசு போயிட்டானா....என்பது போல் எட்டிப் பார்க்க..
நிலைப் படியில் நின்றிருந்த சின்ராசு, அய்யா கொடுத்திருப்பாங்க...அந்தம்மா தான்...ஈறு வந்திருக்கு...பேனு வந்திருக்குன்னு போனைக் காட்டி சும்மானாச்சுக்கும் கூப்பிட்டு...ஏமாத்தறதுக்கு இப்படி எல்லாம் கூட வளி கண்டு பிடிச்சு வெச்சுருக்கு...பாரு..! மாமி சாமர்த்தியமான மாமி..எத்தனை ஏழைங்க வவுத்துல அடிச்சுதோ....இப்போ என் வவுறு எரியுது..இந்த எரிச்சலுக்கு பதில் சொல்லித் தான ஆவோணம்...இனி நின்று பிரயோஜனம் இல்லை என்று வாசற்படி இறங்கி...மருந்துக் கடையை நோக்கி போகிறான்.
போகும்போது...சட்டைப் பையில் வியர்வை பட்டு நைந்து போன டாக்டர் சீட்டு இருக்கா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டு, ஐயர் கொடுத்த ஐநூறு ரூபாய் நோட்டை உள்ளே செருகிக் கொண்டு..பரவால்ல..மருந்து பிரச்சன தீந்துச்சு...
நடக்கிறான்......வழியில்....
"அண்ணே......சினராசண்ணே...நம்ப மாப்ள தனுசுக்கு புதுசா ஒரு ரசிகர் மன்றம் தொறக்குரோம்....பேனர் கட்டணும்
ஆள் குறையுது...கை குடுக்கிறதில்லையா.....வாண்ணே..
இதே...சாதாரணமாக இருந்திருந்தால் கை வேலையைப் போட்டபடி.....அப்படியே.....அட...நம்ம தலைவரோட மாப்ள தனுசுக்கா....என்று ஓடியிருப்பான்.
ஆனால்...இப்போ..."போடா...டேய்....பொளப்பத்த பொறம்போக்கு..போயி ஒஞ்...சொந்த பொளப்பப் பாப்பியா...? பேனர் கட்டணும்...கோவணம் கட்டணும்னு கூப்பிட்டுட்டு....எகத்தாளமாக சொல்லிப்புட்டு நகர..
காதருகில் ஆத்தாவின் குரல் "இப்பத் தாண்டா நீ ஏன் மவன்...நீ பொளச்சுப்பே.." அசரீரியாகக் கேட்டது.
திடுக்கிட்டு ஓட்டமும் நடையுமாக மருந்துக் கடையில் மருந்தை வாங்கிக் கொண்டு அப்படியே கிருஷ்ண பவனில் இட்டிலி பொட்டலமும் வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி விரைகிறான்.
ஆத்தா....இந்தா, எந்திரி...உனக்கு மருந்து வாங்கியாந்துட்டேன்....இந்தா இந்த இட்டிலிய தின்னுப்புட்டு மாத்திரைய சாப்பிடு..
அட...சின்ராசு.....என்று எழுந்தவள்....நான் பேசினத எத்தியும் மனசுல வெச்சுக்காதே என் கண்ணு....என்று கண் கலங்கிப் போகிறாள்....தாய் மனம்...அங்கே தள்ளாடி தடுமாறி...பேச்சு சிக்குது..கண்களில் நீர் முட்டுது.
ஏன் ஆத்தா....நீ ஒண்ணு...நீ கடுமையா சொன்னதாலத் தான்...எனக்கு..புத்தி வந்துச்சு,,, அத்த விடுத்தா...இன்னிலேர்ந்து கோயில் வாசல்ல செருப்பப் பார்த்துக்கற உத்தியோகம்.....போகட்டா....?
மவராசனா போயிட்டு வா சின்ராசு...அதுங்கூடப் புண்ணியந்தேன்..
சின்ராசு அவனது ஆத்தாளின் போக்கு மாறியிருப்பதைப் பார்த்து வியந்தபடி....அடப் பாரடா...சினிமாவுல தான் இப்படி காமிப்பாய்ங்க, நம்மூட்லயும் நடக்குதே..எப்டியோ ஆத்தா சந்தோசமா இருந்தா சரிதேன்.
அவனும் சந்தோஷமா....குளிச்சு சாப்பிட்டு விட்டுக் கிளம்பி கோவில் வாசலில் போய் கவுண்டர் பக்கத்தில் டோக்கனை எண்ணிக் கொண்டு நிற்கிறான்.
யார் யாரோ வருகிறார்கள்.....குனித்து நிமிர்ந்து செருப்பை எடுத்து வைத்து டோக்கன் கொடுத்து முமுரமாக இருந்தவனை....என்னப்பா...சின்ராசு...இந்தத் தொழிலுக்கு வந்துட்டே என்ற குரல்....அவனை நிமிர்ந்து பார்க்க வைத்தது.
நடராசன் ஐயரும்...மாமியும்....மனதில் நிறைந்த அருவெறுப்பு முகத்தில் மின்னலென ஓட....!
ஆமாஞ்சாமி...இதுல ..யாரும் என்னை ஏமாத்த முடியாதுல்ல...என்று வார்த்தை சட்டையை ஓங்கி வீசினான்...
பதிலே சொல்லாமல் சென்று விட்டவர்களின் செருப்பை எடுத்து ஸ்டாண்டில் வைத்தவனின் மனசு...நினைத்தது.
"இறைவன் ஒரு வாசலை மூடினால் ஒரு ஜன்னலைத் திறக்கிறான்" இவர் பத்தாயிரத்தை ஏமாற்றினால் என்ன...கடவுள் நிரந்தரமா ஒரு வருமானத்தை என் உழைப்புக்கு அள்ளிக் கொடுத்திருக்கானே....எண்ணியபடியே..
தன் வேலையில் கவனமாக இருந்தான் சின்ராசு.
நேரம் செல்லச் செல்ல...செருப்புகள் குறைந்து கொண்டே வந்தது...கடைசியாக நடராஜன், மாமி இருவரின் செருப்பும் கூட இறங்கியது...குனிந்து சரி செய்து கொண்ட மாமி....அவனுக்கு பத்து ரூபா கொடுங்கோ என்று பெரிய மனது பண்ணி சொன்னதும்...
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.....வெறும் ரெண்டு ரூபா கொடுங்க போதும்.,..என்றதும்...
இந்தத் திமிருக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை...
ஆம்மாமாம்...
என்று முனகிக் கொண்டே விறுவிறென்று நடந்து சென்று வண்டியில் ஏறி மறைந்தனர் இருவரும். ஜாடிகேத்த மூடியாய்.
எதேச்சையாகப் கீழே பார்த்த சின்ராசுக்கு பகீரென்றது...பள பள வென்று வைரங்கள் மின்னி டாலடித்துக் கொண்டிருந்தது...ஒத்தைக் கம்மல்....!
அதைக் கையில் எடுத்ததும் புரிந்து போனது....."அடடா...இது அந்த மாமியோட வைரக் கம்மல் போல் இருக்குதே.."
கீழே கழண்டு விழுந்துடுச்சா? அவங்கதா..இல்லை வேற யாருதாச்சுமா...? ஒரு சிறிய துண்டுக் காகிதத்தில் மடித்து சட்டை பையில் போட்டு பத்திரப் படுத்திக் கொண்டான்.
கோவிலுக்குச் சென்று நேரே வீட்டுக்கு வந்த கோகிலா...ரூமுக்குள் சென்று புடவை மாத்தும் நேரம்..எதோ மெல்லியதாய்...தோள்பட்டையிலிருந்து நழுவிய உணர்வு தோன்ற...சுதாரித்துக் கொண்டு தேடவும்....அய்யய்யோ..இதென்ன கம்மலோடத் திருகாணின்னா ."அப்போ வைரத் தோடு..." நெஞ்சம் பகீரென்றது.....கண்ணாடி முன்னால் பார்த்ததும் தெரிந்தது...ஒத்தைக் காது மூளியாக இருந்தது...."இது எப்படி , எப்போ கழண்டிருக்கும்...?.."
கைக்கு கிடைத்த புடவையை எடுத்து சுத்திக் கொண்டு..." என்னன்னா....ஏன்னா....என்னோட ஒரு தோட்டைக் காணோம்...." எங்கே விழுந்ததுன்னே தெரியலை..இப்போத்தான் திருகு கிடைச்சுது...என்று அழுது கொண்டே புலம்ப
என்னடி கோகிலா சொல்றே.....? வைரத் தோடு தொலைஞ்சு போச்சா....! அடிப் பாவி....தோட்டைத் தொலைச்சாச்சா...?
அது வேற ஒண்ணுமில்லடீ...ஒரு ஏழையின் உழைப்பில் கமிஷன் தராமல் ரொம்ப புத்திசாலி மாதிரி ஐடியா சொல்லி வயித்தில் அடிச்சோமில்லையா...? அதான் இப்போ கைமேல் பலன்.....!
போதும்...போதும்...நேரங்காலம் தெரியாமல் எதுக்கும்.... எதுக்கும் முடிச்சுப் போடறேள்...?
இந்த ரோட்டில் எங்கே போயி தேடுவேன்...எங்க விழுந்துதோ....அம்பதாயிரம் இருக்கும் இன்னத்த விலைக்கு.....நெஞ்சு பட படங்கறதே நேக்கு....! பகவானே...உன்னைப் பார்க்க வந்த எங்களுக்கு இந்த சோதனையா.....? என்று அலைபாய...
"ஓம் பூர் புவஸ்ஸுவஹ..தத் ஸ விதுர்வரேண்யம்....பர்கோ..." காலிங் பெல்லின் இசை வீடெங்கும் இசைக்க....இருவரும் ஓடிவந்து கதவைத் திறக்கிறார்கள்....!
வாசலில் சின்ராசு சிரித்தபடி நின்றிருந்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக