ஞாயிறு, 10 ஜூன், 2012

கோழி மிதித்து...!


பொண்ணாப் பொறந்து
ஏண்டீ என் கழுத்த
அறுக்க வந்தே...?

சோத்துக்கே லாட்டரி..
தங்கச் சங்கிலி போடாட்டா
பொண்டாட்டி எட்டேகால்
லட்ச்சணமாம்....அஷ்டகோணல்
புருஷனுக்கும்...! ஒண்ணும்
இல்லா வெறும் மவ உன்னை..
எவன் கட்டுவான்...?


வயித்துக்கரிசி இல்லாத
என்னை இப்போ 
வாய்கரிசி போட வெச்ச..
தவமோ..வரமோ..
அதெல்லாம் நமக்கில்லை..
நான் பொறந்த நேரத்தில 
எந்தாயும்...செய்யல....!

நானும் கேட்டுபுட்டேன் 
பாவி... என்னை ஏன் ?..
உசுரோட விட்ட....!
அவ பொறந்த கதையைச்
சொல்லி என் தோளில்
சாய்ந்தழுதா....!

போகும்வரை நாதியில்லை,.
வேண்டாத சாமியில்லை...
ஆனாலும் பொறந்துபுட்ட...
போனாப் போகுதுன்னு 
விட்டு வைக்க மனசும் இல்ல..
நான் படுற பாட்டுக்கு..
நானே நாண்டு சாகனும்....
நீயும் இங்கிருந்து இன்னும்
என்னத்த சேர்க்கணும்..?

பாவி உன்னை விட்டுப்புட்டா..
வீதிக்கு வீதி உன் விதி நாறும்..
உலகம் வெறும் சாக்கடை...
நாற வேண்டாம் பூக்கடை...!
உன் கணக்கை நான் தீர்க்க 
ஒரே மணி நெல்லு போதும்....
ஒரே சொட்டுக் கள்ளி போதும்....

வந்த இடம்..பாத்து மெல்ல 
நீ திரும்பு..!
உனக்கோ..சாவு.நொடியிலே ..
உன்னைக் கொன்னுபோட்டு...
நான் மட்டும் உசுரோடவாத்
திரியப் போறேன்....உனக்கில்லாத
பூமியிலே எனக்கு மட்டும்
என்ன வேலை...? நானும்...
தாய் தான்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக