வியாழன், 7 ஜூன், 2012

பெண்மனம்...!




ஆறு மனங்கள் இருந்தும்

வீடு அமைதி காத்தது..
ஒருவர் பார்வை ஒருவரின்
மௌனத்தை மொழியாக்கி
ஊமையாய் விழுங்கியது..

காரணமான காதல்
வந்து போன மனசு..
மோட்டுவளையை 
வெறித்தது..விரக்தியில்..!

கண்ணீர் கோடுகள்..
முகத்தில் முகவரியாய்
புன்னகை இழந்த 
உதடுகள் இருக்கமாய்..

இதயத்தை முகம்
எழுதிக் கொண்டிருந்தது..
எங்கிருந்தோ தனிக் குயில்
துணை நான் இருப்பதாய்
ஆறுதல் தூது விடுத்தது..!

இத்தனை சோகம் 
இங்கெதற்கு...இந்தத் 
தவிப்பும் இங்கெதற்கு..?
நினைவுகள் இறுகிப் 
போனவர்கள் பேச்சுக்குத்
தாழ் போட்டுக் கொண்டு..!

சாவி தொலைத்து விட்ட 
குழப்பத்தில்...உறைந்து.
கனத்த... அமைதி...
அறையுள்...தியானம்..
செய்வதைக் கலைத்து 
உடைத்தது..வெண்கலம்..!

"காதல்... கீதல்"  இங்கு 
செல்லாது...ஜாக்ரதை..!
மீறினால்..தொலைச்சுடுவேன்..
ஆக்ரோஷ வார்த்தையாய்..
மகளை தூக்கி வீசினார்..

தாயும் தனயனும்..
நியாயம் பேச...
அவரவர் சுயநலம்..
சாட்டையாய் சுழல 
தள்ளாடி அணைந்தது 
காதல் தீபம்..!

வார்த்தை வீச்சில்
துண்டாகிப் போனது
ஆசை மனம்..!
தியாகத்தின் விளிம்பில்
போராடித் தோற்ற காதல் 
ஏற்றவனை பறக்கவிட்டு 
சூழ்நிலைக் கைதியாகி..
ஊமையானது..!

ஏதேதோ தியாகங்களும்
ஏதேதோ சோகங்களைத் 
தாங்கும் பெண்மனம் 
தான் பிள்ளைகளின் ..
வாழ்விற்கு  துணை நிற்குது.!

=================================
ஜெயஸ்ரீ ஷங்கர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக