வெள்ளி, 6 ஏப்ரல், 2012

அக்கரை...... இச்சை..!




அக்கரை...... இச்சை..!

சிறுகதை:ஜெயஸ்ரீ ஷங்கர்.

நன்றி:திண்ணை.




இனிமேல் இந்தத் திருநெல்வேலி ஊருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதோ.? எத்தனை ஆசையோடு வந்தாள் விமலா. உள்ளத்தில் அலைபாயும் ஒரேக் கேள்வியோடு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு மதுரை செல்லும் பஸ்ஸுக்காகக் காத்திருந்தாள் .அவளது நினைவுகள் மேற்கொண்டு நகர மறுத்து நேற்றிரவு நடந்த நிகழ்வையே சுற்றி…சுற்றி.. வந்து கொண்டிருந்தது.

தனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல்…சின்ன வயசிலேயே. அப்பாத் தவறிப்போனதால்….அம்மாவின் நிழலிலேயே….வளரும்போது…கூடப் பிறந்த அக்கா கல்பனாதான் ..விமலாவுக்கு எல்லாமே. எந்த ஒரு வெளிக்கவலையும் தெரியவிடாமல் பார்த்துக் கொள்வாள் .கல்பனாவுக்கு கல்யாணம் ஆகிச் சென்றதும்…அம்மாவும்…விமலாவும்… தனியாகிப் போனார்கள். என் காலத்துக்கு பிறகும் அக்கா…தங்கை..என்று .நீங்க ரெண்டு பேரும்…ஒருத்தருக்கு ஒருத்தர் ஒற்றுமையா… அன்பா….அனுசரணையா…. இருக்கணும்னு அடிக்கடி அம்மா சொல்லி வந்தாள்.

கல்பனாவுக்கும்…விமலாவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம்…படிப்பு..மட்டும் தான். விமலா… கல்யாணமே செய்து கொள்ளாமல் பெயருக்குப் பின்னால் வால்போல படித்து பட்டம் வாங்கித் தள்ளியிருந்தாள்….அவளது படிப்பே….அவளுக்கு வாழ்க்கைத்துணை கிடைக்கத் தடையாய்..இருந்தது..அதன்பிறகு படிப்பே அவளது வாழ்க்கைக்கு துணையாகவும்… தூணாகவும் நின்றது. கூடவே…காலமும்… முப்பத்தி மூன்று .வயதும்…அவளுக்கு முதிர்கன்னி என்ற சிறப்புப் பட்டதை கொடுத்து கௌரவித்தது.

அம்மாவும்…கடைசி வரைக்கும் வரன் தேடி..வரன் தேடி…அலுத்துப் போய் அதே கவலையில் ஆறுமாதங்கள் முன்பு திடீரென்று மாரடைப்பில் இறந்த போது…அதிர்ந்து நின்ற …விமலாவுக்கு கல்பனா தான் ஆறுதலோடு… தைரியம் சொன்னாள்.

பாவம்….கல்பனா..போன வாரம் தான் போன் பண்ணி ஒரு பத்து நாள் லீவு போட்டுட்டு தனக்கு துணையா வந்து இரேன் என்று அழைத்தாள்…அப்படியே மனசுக்கும் ஆறுதலாக இருக்குமேன்னு.. நினைத்ததால் தான் .அத்தனை வேலையையும் விட்டுட்டு.மதுரையிலிருந்து…திருநெல்வேலிக்கு ஆபீசில் லீவு சொல்லிவிட்டுக் கிளம்பி வந்தாள் விமலா. ஆனால்….அங்கு நடந்த நிகழ்ச்சி விமலாவை அங்கு இருக்க விடாமல் துரத்தியது…கல்பனாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால்…வீட்டை ரெண்டு பண்ணியிருப்பாள். இந்த நேரத்தில் இந்த விஷயத்தைப் பெரிது படுத்த வேண்டாம் என்று தான் விமலா கிளம்பி விட்டாள்…..பாவம் கல்பனா…..பிரசவத்துக்கு காத்திருப்பவளை அப்படியே விட்டுட்டு கிளம்பி வந்திருக்க கூடாது . அம்மா இருந்திருந்தால் அனுமதித்திதிருக்க மாட்டாள். இதுவா….? உங்க உடன்பிறந்த லட்சணம்னு திட்டித் தீர்த்திருப்பாள்.

இன்னும் மூன்று மாசத்தில் இரண்டாவது பிரசவம் கல்பனாவுக்கு. அனு…தான் மூத்த பெண் குழந்தை.. இப்போது அனுவுக்கு மூணு வயதாகிறது……”இந்தக் குழந்தையாவது ஆண்குழந்தையாப் பிறக்கணும்னு வேண்டிக்கோ..விமலா ” ன்னு ..தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் மாணவி போல் அடிக்கடி .கேட்டுண்டே இருந்தாள் கல்பனா. இந்தக் காலத்தில்…போய்..பெண் குழந்தை…ஆண் குழந்தைன்னெல்லாம் வித்தியாசம் பார்க்காதே..கல்பனா .இரண்டும் ஒன்று தான்; குழந்தை நல்ல விதமாப் பிறக்கணும்னு…. மட்டும் வேண்டிக்கறேன்..அது தான் முக்கியம்…படிச்ச பொண்ணட்டமா.. யோசி….நாமிருவருமே…..பொண்ணாப் பிறந்தவா தானே…நமக்கென்ன குறைச்சல் ?என்றாள் விமலா.

நீ சொல்றே….விமலா ! நேக்கும் புரியறது…ஆனா என்ன பண்ண ? என் மாமியாருக்கும். உன் அத்திம்பேருக்கும் இதெல்லாம் புரிய மாட்டேங்கறதே மூத்தது பெண் குழந்தைன்னதும்..நம்ம அம்மாவை என்ன பாடு படுத்தி எடுத்தான்னு உனக்குத் தான் தெரியுமே…….உங்கள் வம்சத்தில் ஆண் வாரிசே… பிறக்காதோ.? இப்படி ஒரு சாபக்கேடான குடும்பமா ?.இது தெரியாத பெண் எடுத்தோமேன்னு…கூட என் மாமியார் கேட்டதாக நம்ப அம்மா சொல்லி சொல்லி அவளும் மாய்ந்து போனாள்….பாவம்.

அம்மா தான் கல்பனாவுக்கு வரன் பார்த்து எப்படியாவது அவர்கள் கேட்ட வரதட்சணை, சீர், செனத்திக்காக தன் நகை நட்டை.எல்லாம விற்று. பணம் புரட்டி கல்யாணம் பண்ணி வைத்தாள்..ஆச்சு….கல்பனாக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகிப் போச்சு….முதல் பிரசவத்தை அம்மா தான் பார்த்து அனுப்பினாள்…கல்பனாவுக்கு மூத்தது பெண் குழந்தை அனு பிறந்ததும்…..சம்பந்தி மாமி முகத்தை தூக்கி வெச்சுண்டா…தங்கம் விக்கற விலையிலே…”என் புள்ள என்ன செய்யப் போறானோ…?” ன்னு வாய்க்கு வாய் புலம்பினாள். இத்தனை வருடம் கழித்துப் பெத்துப் பிழைத்த சந்தோஷம் துளி கூட இல்லை பாரேன்..சம்பந்தி மாமிக்கு என்று அம்மா தான் அங்கலாய்த்தாள். இவ்வளவு சீக்கிரம் அம்மாவும் தவறிப் போவாள்னு யாரும் கனவிலும் நினைக்கலை. அம்மாவின் இறப்பு பெரிய இழப்பு தான்.என்ன செய்ய..?.விதி யாருக்காகவும் இரக்கப்படுவதில்லையே.

மனசு அழுதது…காலத்தே பயிர் செய்..னு …அம்மா சொல்லி சொல்லி ஓய்ந்து போனாள் கலாகாலத்தில் நடக்கறது நடக்கணும்னு அம்மா சொல்லும்போதெல்லாம்…செவிடன் காதுல ஊதின சங்குமாதிரி கேட்காது விட்டேன்…..இன்று உண்மை சுட்டதும்….மனசு…. வயசை…..இழந்ததற்காக வேதனைப் படத்தான் செய்தது. தப்பு பண்ணிட்டேனோ..? ஒரு நிமிடம் உள்ளம் தடுமாறினாலும்…சுதாரித்துக் கொண்டு…இல்லையில்லை….நான் செய்தது சரி தான்..இன்னும் காலம் இருக்கு..எல்லாம் சரியாகிவிடும்….இதுவும்…. கடந்து… போகும்…என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டாள்

இப்படியே எத்தனை நேரம் விமலா நின்று கொண்டிருந்தாளோ… வெய்யில் சுள்ளென்று கண்ணைக் கூசியது. மதுர…மதுர…மதுர…என்ற அதிரும் குரல் அவளைத் தட்டி சுய நினைவுக்கு கொண்டு வந்தது. அட…பஸ்… வந்தாச்சு..அதிகம் கூட்டம் இல்லாதது நல்லதாயிற்று….மதுரை தான் தனக்கு…புகலிடம் என்று….பஸ்சில் ஏறினாள். இடம் பார்த்து அமர்ந்து கொண்டதும்….பஸ் கிளம்பத் தயாரானது….எப்பவும் போல்…
”பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது 
கருடா..சௌக்யமா?…
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே..
கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது.”….

கண்ணதாசன் பாடலோடு பஸ் கிளம்பியது.

திருநெல்வேலியைத் தாண்டியதும்…..செம்மண் பரப்பும்…பனைமரங்களின் அணிவகுப்பும்…கண்ணுக்கு விருந்தாகவும்… மனதுக்கு.. இதமாகவும் …ஜன்னல் காற்று…மெல்ல கன்னத்தை தொட்டு தடவி…மனதின் புழுக்கத்தை தன்னோடு இழுத்துச் சென்றது. சீட்டின் பின்னால் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். விமலா….கண்ணுக்குள்.அசுர அவதாரமாக அத்திம்பேர்…கிருஷ்ணமூர்த்தி…அசட்டுச்சிரிப்பு…சிரித்துக் கொண்டு…நின்றார்..! இதென்ன..நினைவு..மனதை…இப்படித் துரத்துகிறதே….முதலில் இதிலிருந்து வெளிவர வழி தேடணும். கண்களைத் திறந்து ஜன்னல் வழியே பார்வை ஓட…உள்ளம் மட்டும் உள்நோக்கி ஓடியது.

இந்த விஷயம் மட்டும் கல்பனாவுக்குத் தெரிந்தால் மனதுக்குள் புழுங்கிப் போவாள்…பத்திரகாளியாட்டம் போடுவாள்….அவளுக்கு முன் கோபம் ஜாஸ்தி…யோசிப்பதற்குள் முடித்துவிடுவாள்….பிறகு அழுதழுது ..மன்னிப்பு கேட்டுக் கொண்டிருப்பாள். அவள் குணம் தெரிந்தது தானே.

நினைத்த மாத்திரத்தில்…நேற்று இரவு நடந்த நிகழ்ச்சி கண்ணுக்குள் கடைவிரித்து பயமுறுத்தியது. ராத்திரி பசும்பாலைக் காய்ச்சி கல்பனாவுக்கு கொடுத்துட்டு…இன்னைக்காவது நீ..கொஞ்சம் தாராளமா படுத்துக்கோ…கல்பனா…….நான் அனுவை என்கிட்டே படுக்கப் எடுத்துண்டு போறேன்…..என்று தூங்கிக் கொண்டிருந்த அனுவைத் தோளில் தூக்கி போட்டுக்கொண்டு வேறு தனி அறைக்குச் சென்று குழந்தையை…படுக்கையில் கிடத்திவிட்டு தானும் அலுப்புடன் படுத்துக் கொண்டாள். அசதியால் .படுத்ததும்..கண்களை ..உள்ளே இழுத்தது உறக்கம்..உலகத்தை மறந்து உறங்கிப் போனாள் விமலா.

நட்ட நடுநிசி இருக்கும்….ஏதோ…ஒரு புழு ஊர்ந்து செல்வது போன்ற உணர்வோடு திடுக்கிட்டு விழித்தாள் விமலா…எப்பேர்பட்ட உறக்கத்திலும்…சுதாரிப்புடன் காத்திருக்கும் உணர்வு அது..! பெண்களுக்கென்றே இறைவன் கொடுத்த சிறப்பு அது..கண் விழித்துப் பார்த்ததும்….மின்னலென….அறிவுக்கு புலப் பட்டது…யாரோ…அருகில்…..ஓர்.. வினோத ஸ்பரிசம்…தவறான தொடுதலால் ஏற்பட்ட அதிர்வு…தான் என புரிந்து கொண்டாள்…! அருகில் கையருகில் இருந்த சுவிட்சை தட்டினாள் …வெட்ட வெளிச்சமானது..அறையும்….அத்திம்பேரின் மனதும்….முன்னேற்பாடாக கதவு சார்த்தப் பட்டிருந்தது….!

எதிர்பார்க்காததால்..அவரது முகம் இறுகி இருண்டு போனது…..எதிர்பாராத இந்த நிகழ்வில்.. இல்ல..இங்கேர்ந்து ஒரே…. இருமல் சத்தம் கேட்டதா…குழந்தை தான் இருமறாளோன்னு… பார்க்க வந்தேன்….அதற்குள் நீ….நீ..முழிச்சுண்டு….பயந்து போயிட்ட போலிருக்கு விமலா…பயப்படாதே…நான் தான்…நான் தான்…மென்று முழுங்க…

சீ…சீ….நீயெல்லாம்…ஒரு பெரிய மனுஷனா…..! மனசுக்குள்..அத்திம்பேர் உறவு தகர்ந்து பொடிப் பொடியாய்ப் போனது…..சராசரியை விட தாழ்ந்து நின்ற அந்த உருவத்தைக் கண்டு….உள்ளே மண்டிக் கிடந்த அத்தனை உணர்வையும் எழுப்பி…முதல்ல வெளிய போங்கோ..நான் தனியாப் படுத்திருப்பது தெரிந்து தானே உள்ளே வந்தேள்..? எனக்கு எல்லாம் புரியும்..வேலியேப் ..பயிரை மேய வருதா…? என்று ஆக்ரோஷமானாள்.

ஏதோ தைரியம் வந்தவனாக…புரிஞ்சுடுத்து தானே…பிறகென்ன..என்று மெல்ல கேட்க..

என்ன ஒரு தைரியம்…உங்களுக்கு..?.எப்படி வருது மனசு இப்படிப் பேச….பெண்டாட்டி பிரசவத்துக்கு இருக்கும்போது…….உங்களுக்கே….அசிங்கமா இல்லை….யாரு தந்தா இவ்வளவு தைரியம்…? முதல்ல…வெளில போங்கோ….சொல்றேன்…இல்லன்னா நான் கத்தி ஊரக் கூட்டி ரெண்டு பண்ணிடுவேன்..ஜாக்கிரதை…..தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன்….போ..இங்கேர்ந்து….அவள் சொன்ன தொனியில் ஆத்திரம் இருந்தது.

ம்ம்ம்..போய்டறேன்…கத்தாதே…கத்தாதே..னு சொல்லி அடுத்த சில நொடிகளில்.அறை வெறுமையாகி .கதவு சார்த்தப் பட்டது…

எத்தனை நாட்கள் இந்த ஒரு சந்தர்பத்துக்காக காத்திருந்தேன்……இவள் இப்படி புரிஞ்சுக்காம கத்தி அமர்க்களப் படுத்தறாளே…னு ஏமாற்றத்தோடு தலை தொங்கிப் போய்க் கொண்டிருந்தது அந்த மனித ஓநாய்.

விமலா விளக்கை போட்டபடியே….மீண்டும் .படுத்தாள்….உறக்கம் அவளை விட்டு ஓடிப் போயிருந்தது. இந்த இடம் தனக்கில்லை என்று உணர்ந்த விமலா .இனி இங்கிருந்து கிளம்புவது தான் சரி…என்ற எண்ணத்தில்…கல்பனாவிடம் .என்ன சொல்லி சமாளிப்பேன்…என்ற ..குழப்பத்தில் விழித்துக் கொண்டே படுத்திருந்தாள் நடந்த விஷயம் சாதாரணம் இல்லை என்பதால்..மனசுக்குள் அதிர்ந்தாள்.

அவளுக்குத் தெரிந்ததெல்லாம்…அக்காவும்…அத்திம்பேரும்…அன்னியோன்யமாக இருப்பார்கள் என்று தான்.,..சிறு சிறு பூசல்களும் மனஸ்தாபமும் வந்து சென்றாலும்…..பெரிதாக குறை சொல்லும்படியாக ஒன்றும் இருக்காது. இப்போது அக்கரைப் பச்சையாய் தெரிந்தது அக்காவின் வாழ்க்கை. இவனுக்கு புத்தி புகட்ட வேண்டும்…முருகா….இவனுக்கு ரெண்டாவதும் பெண் குழந்தையே..பிறக்கணும் அப்போதான்….புத்தி வரும்..! மனம் கருவியது. பொழுது எப்போது விடியும்…?என விழித்தபடியே ஒரு முடிவுடன் காத்திருந்தாள் விமலா.

0000      0000      0000 - - - - - 000      0000   00000 0000


விமலா கிளம்பியதில் இருந்தே …வீடு வெறிச்சோடிப் போனது போல் இருந்தது கல்பனாவுக்கு. .பத்துநாட்கள் இருக்கப் போவதாக ஆசை ஆசையா சொல்லிண்டு வந்து ரெண்டு நாள் கூட ஆகலை ….அதற்குள் ஏதோ முக்கியமான வேலை..மறந்துட்டேன்னு சொல்லி….உடனே கிளம்பி விட்டாளே.விமலா….என்று நிஜமான கவலை ஒரு புறம் இருந்தாலும்…நல்லவேளை….நான் சொல்லவதற்கு முன்னால் அவளே ஏதோ அவசரம்னு சொல்லிண்டு கிளம்பிவிட்டாள் ..இல்லையென்றால் நான்…..நீ ஊருக்குப் கிளம்பு என்று எப்படி சொல்வேன்.?..அதற்கப்பறம்… அவள் முகத்தில் மறுபடியும் விழிக்க முடியுமா?
என்ன தான்…..இருந்தாலும்…பெண் ஜென்மம்னாலே புருஷாளுக்கு இளப்பம் தான்..வெறும் படிப்பு மட்டும் பத்தாது…சம்பாதிக்கணும்…தன் காலில் தான் நிற்கணும். அப்போ தான் மரியாதை…வேலைக்குப் போய் சம்பாதிக்கலைன்னு தானே..எனக்குன்னு ஒரு சுயமோ…சுதந்திரமோ கிடையாது. என்னை மதித்திருந்தால் …இன்று காலை விடிந்தும் விடியாமலும் அவர் அப்படி சொல்லியிருப்பாரா…விமலாவை ஊருக்குப் போகச்சொல்லுன்னு..?

கல்பனா….இன்னும… எத்தனை நாள் உன் தங்கை நம்மாத்தில் இருக்கப் போறா…? அவளை முதலில் ஊருக்குப் போகச் சொல்லு…இப்படி… கல்யாணம் ஆகாத பொண்ண கூட்டிண்டு வந்து நம்மாத்தில் வெச்சுண்டா…நாலு பேர் நாலு விதமா பேசுவா..னு எங்கம்மா சொல்லச் சொன்னா…இன்னைக்கு நீ சொல்லிடு….அவள் உடனே….கிளம்பிக்கட்டும்.!

என்னன்னா..இது….காலங்கார்த்தால… பேசறதுக்கு வேற விஷயமா… இல்லை..? விமலாவை எனக்கு உதவி செய்ய…வரச்சொல்லி நான் தான் கூப்பிட்டேன். அவளுக்கும் வீடு…வாசல்..வேலை…பொறுப்பு எல்லாம் இருக்கு..னு உங்கம்மாட்ட சொல்லுங்கோ. இங்க வந்து உட்கார்ந்து சாப்பிட ஒரு தலையெழுத்தும் இல்லை அம்மா சொல்லிட்டாளாம்……அப்படியே தாய் சொல்லை தட்டாத பிள்ளை….நீங்க….! கோட்டத்தாண்டாம…..என்கிட்டே சொல்ல வந்துட்டேளாக்கும்…..னு என்று படபடத்தாள் கல்பனா.

சரி..சரி…விடு…நீ அனாவசியமா….டென்ஷன் ஆகாதே…அம்மா…ஏதோத்..தெரியாமல் சொல்லியிருப்பா….நீ இப்போ இதை அம்மாட்ட கேட்டு பெரிசு பண்ணாதே….விட்டுடு…என்ன…என்று தான் போட்ட திட்டம் திசை மாறிப் போகிறதே..என்று….சரி… அப்படியே உன் தங்கை இருந்தா இருந்துட்டுப் போகட்டும்…வேணா நான் ஒரு பத்து நாள் டூட்டி போட்டுண்டு வெளியூர் போய்டறேன்..இப்போ….சரி தானே உனக்கு? ன்னு கேட்க

இதென்னன்னா …இப்படிப் பேசறேள்….நான் ஒண்ணும் உங்களைத் துரத்திட்டு..அவளை இருக்க சொல்ல மாட்டேன். நான் இப்போவே போய் அவளை இன்னைக்கே நீ மதுரைக்கு கிளம்பிக்கோன்னு சொல்லிடறேன்…என் தங்கை என்னை தப்பா எடுத்துக்க மாட்டாள்.உங்கள மாதிரி குதர்க்கம் எங்களுக்குக் கிடையாது….ஆமாம்.! பொழுது புலரட்டும் சொல்லிடறேன்….சொல்லிவிட்டு வேகத்தோடு திரும்பிப் படுத்துக் கொண்டாள்..



காலை வேலைகள் எதுவும்…மனசுக்குள் எழாமல்..அங்கங்கே….மூவரின் மனதிலும்..ஒரே எண்ணம்…ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.குழந்தை அனு இன்னும் எழுந்திருக்கவில்லை.கல்பனாவின் மாமியாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை. கல்பனா தனது மாமியாரிடம் தனக்கு எதுவும் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளக் கூடாது என்று முடிவு செய்திருந்தாள். கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் தன் கணவன் சொன்னது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இவாளுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?. கல்பனாவுக்கு …கண்களில் நீர் முட்டியது….கல்யாணம் என்றால் அடிமை சாசன ஒப்பந்தமா?

காலையில் கமலா…சமயலறையில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தாள். விமலா அருகில் வந்து கல்பனா …ன்னு கூப்பிட்டதும்….திக்… கென்றது அவளுக்கு. எப்படி சொல்வேன்.?….எப்படி சொல்வேன்..?…நினைத்துக் கொண்டே..காப்பியைக் கலந்து.. இந்தா…காப்பி என்று டம்ப்ளரை நீட்டினாள்…காப்பியில் ஆவி மிதந்து வந்து விமலாவின் நாசியை அடைந்து. .இத..இத…இதத்தான்…எதிர்பார்த்தேன்….என்றது.. கல்பனா….ராத்திரி தான் ஞாபகத்துக்கு வந்தது….ஒரு முக்கியமான காசோலை ஒன்றை என் மேஜை டிராயர் ல்..வெச்சு பூட்டிட்டு மறந்துட்டேன்…அதை நாளைக்கு டெபாசிட் பண்ணியாகணும்.. நான் இந்த காசோலையை டெபாசிட் பண்ணலைன்னா… அதுவே பெரிய பிரச்சனையாகும். அதனால் அவசரமா .இன்னைக்கு நான் கிளம்பறேன் மதுரைக்கு என்றதும்….கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருந்தது….கல்பனாவுக்கு…அச்சச்சோ…என்னடி..விமலா .இது….இப்படி சொல்ற….என்ன மறதி…இந்த வயசுல…உனக்கு….பொய்யாக பேசினாலும்..இப்போதைக்கு பிரச்சனை சுமுகுமாக முடிந்ததுன்னு…மனசு ஆறுதல் அடைந்தது கல்பனாவுக்கு.

சரி… அப்போ கிளம்பு….இவரோட ஆபீஸ் போகும்போது பஸ் ஸ்டாண்டுக்கு கொண்டு விடச் சொல்றேன்….என்று சொன்னதும்..இல்ல…இல்ல..வேண்டாம்….அவருக்கு எதுக்கு சிரமம்….நானே…ஆட்டோ பிடித்து போவேன்…நீ ஒண்ணும் கவலைப் படாதே… கல்பனாவுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை என்ற நிம்மதி ஒரு பக்கம். அவன்… முகத்தை இன்று பார்க்காமல் கிளம்பவேண்டும் என்ற அவசரம் ஒரு பக்கம். நினைத்தபடி கிளம்பி விட்டாள்.



எதுவுமே நடக்காதது போல…இருந்தாலும்..காலையில் இருந்து விமலாவை வீட்டில் எங்கும் காணாதது கண்டு மனதுக்குள் கேள்விகள் எழுந்தாலும் வெளிப்படையாகக் கல்பனாவிடம் எதையும் கேட்கும் தைரியம் இல்லை கிருஷ்ணமூர்த்திக்கு.

விமலா… ஆபீஸ்ல ஏதோ முக்கிய வேலை இருக்குன்னு அவளே…சீக்கிரமா ஊருக்குக் கிளம்பியாச்சு என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு எப்போதும் போல் கல்பனா இருந்தது இன்னும் நிம்மதியாக இருந்தது.



சுமுகமாக ஆபீசுக்கு கிளம்பி வந்தாச்சு. நல்லவேளை…விமலா…கல்பனாவிடம் ஒண்ணும் சொல்லலை…என்ற எண்ணம் .அப்பாடா என்று இருந்தது..
தனது மனதின் வக்கிரமான எண்ணத்தின் பயங்கரம் புரிந்தது. நான் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாதோ..? எனது இந்தச் சபலத்தில் எத்தனை இழந்திருப்பேன்..? விமலாவின் நல்ல குணத்தால் தான் இன்று நான் தப்பித்தேன்.

அவள் என்னைக் காட்டிக் கொடுக்கவில்லை. இல்லாவிட்டால் நான் நடந்து கொண்ட விதத்துக்கு இந்நேரம் என் மானம்…அம்மா…கல்பனா முன்னாடி கப்பலேறியிருக்கும். விமலா….. படித்த…. இங்கிதம் தெரிந்த பெண்…அதனால் தான் என்னையும் காட்டிக் கொடுக்காமல் தானும் என் முகத்தில் முழிக்க விரும்பாது கிளம்பிப் போய்விட்டாள். ஆனால் தவறை நான் செய்து விட்டு..அனாவசியமாக அம்மா மேல் பழி போட்டு…விமலாவை வீட்டை விட்டு அனுப்பு என்று கல்பனாவிடமும் சொன்னேனே…..என்ன ஒரு சின்ன புத்தி எனக்கு…என்று கிருஷ்ணமூர்த்தியின் மனசாட்சி இடித்துக் கொண்டிருந்தது. ஆபீசில் அமர்ந்திருந்தாலும் நினைவு துரத்திக் கொண்டே இருந்தது அவரை. விமலாவுக்கு ஒரு போன் பண்ணி மன்னிப்புக் கேட்டுப் பேசினால் என்ன..? என்று கூடத் தோன்றியது கிருஷ்ணமூர்த்திக்கு.


இப்ப என்ன பெரிசா நடந்து போச்சு? இதற்காக இப்படி குழம்புவதை விட்டுட்டு மேற்கொண்டு அவருக்குப் புரியும் படி எடுத்துச் சொல்லி கல்பனாவின் குடும்பத்தை சரி செய்ய வேண்டும். இது தான் இப்போ நான் செய்ய வேண்டிய கடமை. எதையுமே… பேசித் தீர்க்க முடியாதது என்று ஒன்றுமில்லை. அதுவும் இந்தக் காலத்தில் நேரில் சொல்ல முடியாததைக் கூட ஈமெயில் மூலமாக சொல்லிவிடலாமே எனும்போது…எனக்கென்ன வருத்தம்…ஒரு தீர்வு கிடைத்த நிம்மதியில்…முதல்ல வீட்டுக்கு போனதும் சூட்டோடு சூடா ஒரு ஈமெயில் போடணும்..அதைப் படித்ததும் கண்டிப்பா அந்தாளு மனசு மாறி கல்பனாவையும் குழந்தைகளையும் நன்னாப் பார்த்துக்கணும்…னு யோசித்தபடி ..விமலா ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்கலானாள்.

பஸ் திருமங்கலத்தைத் தாண்டி விரைந்து கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் மதுரை வந்து விடும்…டி.வி.எஸ். நகர் பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டால்..சீக்கிரமாக வீட்டுக்கு போய்விடலாம்….அடேங்கப்பா….எத்தனை வீடுகள்….அடுக்குமாடிக் கட்டிடங்கள் வந்து விட்டது…ஒரு காலத்தில் இந்த இடம் எல்லாம் வெறும் காடாகக் கிடந்ததே…இப்போப்…பாரேன்…எவ்வளவு முன்னேறி இருக்கிறது….மதுரை மாதிரி எந்த ஊரும் வராது….ஒரு புதர் நிலம் கூடக் காலப்போக்கில் முன்னேறி மதிப்பாக கம்பீரமாக ஆகிவிடுகிறது. நான் மட்டும் ஏன் என்றென்றும் அப்படியே….. இருக்க வேண்டும்.? இனியும் காலத்தைத் தவற விடாமல் ..கல்யாணம் செய்து கொண்டு தன்னோட குடும்பம் என்று வாழணும்.என்ற ஆசை உதித்தது விமலாவுக்கு.

பெண்ணுக்கு ஒரு நல்ல குடும்பம் அமைவது என்பது படித்துப் பட்டம் வாங்குவதைக் காட்டிலும் உயர்ந்தது. என்றெல்லாம் அன்று அம்மா சொன்னபோது…படிப்பு தான் குடும்பத்தைக் காட்டிலும் முக்கியமானது என்று வாதிட்டவள்…இன்றோ…ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு வளையமாக ஒரு குடும்பம் இருப்பது தான் அவசியம் என்று உணர்ந்து கொண்டாள். மனதுக்கு எல்லாமே “அக்கரை பச்சை” தான் போல…பஸ் விமலாவை இறக்கி விட்டு கிளம்பி சென்றது.

வீட்டுக்கு சென்று களைப்புத் தீர குளித்துவிட்டு ….புத்துணர்வோடு கணினி முன்பு அமர்ந்தாள்…முதலில் ஈமெயில் அனுப்பி விடலாம்.
அப்படியே….கல்பனாவுக்கும் போன் பண்ணி வந்து சேர்ந்தாச்சுன்னு..சொல்லிடணும். மனதில் புயல் அடித்து ஓய்ந்த நிம்மதி இருந்தது..நாளை வேலைக்கு சென்றால் போதும்…. எண்ணியபடியே மடல் எழுதி அனுப்பி வைத்தாள்.

கிருஷ்ணமூர்த்தி தனக்கு எதாவது மடல் வந்திருக்கிறதா என்று பார்க்க……விமலாவிடமிருந்து புது மடல்…செய்தியைக் கண்டதும் மனதுக்குள்
அபாய சங்கொலி முழங்கியது..என்ன இருக்குமோ? தயக்கத்தோடு இன்-பாக்ஸ் இல் இருந்து கிளிக்கினார்.. மடல் விரிந்தது. கண் விரிய..படிக்கலானார்..

அப்பாவி மனைவியை ஏமாற்றும் ஜகதலப்பிரதாபனுக்கு………….!!!
(என்ன…. இப்படி அழைக்கும்போது கோபம் விர்ருன்னு தலைக்கு எகிறுதா….? கூல்….கூல்……இன்னும் இருக்கு..!)

ஆயிரம் காலத்துப் பயிர் கருகிவிடக் கூடாதே என்பதாலும் குடும்ப உறவு மேலும்
கிழிந்து போகாமலிருக்க வேண்டியும் நான் போடும் கெட்டித் தையல் இது. .
ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து காக்க வேண்டிய உங்கள் புத்தி தடம்
மாறிப் போவது புரிந்தது.

இருந்தும் இதை எழுதுகிறேன்…காரணம்..ஒரு குடும்பத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பு
உங்களுக்கும் இருப்பதால். அதோடு கல்பனாவின் வாழ்வும் அடங்கியதால்.
உங்களது மறுபக்கம் தெரிந்தால்….உங்கள் அம்மா உங்கள் முகத்தில் விழிக்கக் கூட
தயங்குவார்கள். நீங்கள் குடும்பத்தில் ஒரே பிள்ளையாகப் பிறந்து விட்டதால்..பெண்களின்
மன நிலை தெரியாது இருந்திருக்கலாம்.

எந்தப் பெண்ணுமே மனதாலும்..உடலாலும்….பலவீனமானவள் அல்ல…என்று புரிந்து கொள்ளவும்.
எத்தனை பேர்களுக்கு நல்ல குடும்பம் அமையாமல் ஏங்கித் தவிக்கிறார்கள் என்று தெரியுமா?
கிடைத்த வாழ்வின் அருமையைப் புரிந்து கொண்டு வாழப் பாருங்கள். எப்போதும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை தான். இதுவும்..அதுவும்..எல்லாம்…வேண்டும் மனதுக்கு…!
மனத்திற்கு…நிம்மதியான இடத்திற்கு அழைத்து செல்லும் வழியே தெரியாது.
உங்கள் அக்கரை…..இச்சையை…. இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மனதில் படிந்த தூசியை உடனே…….தட்டித் துடைத்து சுத்தம் செய்து விடுங்கள்….
அது உங்களுக்கு அமைந்துள்ள வரமான வாழ்வை வளமாக்கும். நாளைக்கே….
நிர்கதியாக நிற்கும் எனக்கு கன்னிகாதானம் செய்து தாரை வார்த்துக்
கொடுக்கும் இடத்தில் நீங்கள் நிற்க நேரலாம். அதற்கு உங்களுக்குத் தகுதி இருக்க வேண்டுமல்லவா.?

கல்பனா பயப்படும்படி…..இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்து விட்டால்…?.சற்றே யோசியுங்கள்!

மாறுவது மனம்……..
விமலா.

படித்து முடித்த கிருஷ்ணமூர்த்திக்கு தன்னையே சாட்டையால் அடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. மன்னித்துக் கொள் விமலா….உன் கால்தூசுக்கு நான் பெறமாட்டேன்…என்று மனம் ஓலமிட்டது…செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேட மனது மண்டியிட்டது.

அன்று மாலை ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்தவர் ..என்றும் இல்லாத சந்தோஷத்தில்..அனுவை தோளில் தூக்கிக் கொண்டு வாங்கி வந்த மல்லிகைப் பூவை கல்பனாவிடம் கொடுத்துவிட்டு…இந்தா…நம்ம அனுக்குட்டிக்கு இந்த யானை பொம்மை என்று நீட்டியபடியே…கல்பனா…விமலாக்கு நல்ல வரன் தேட…கலயாணமாலையில்..பதிந்து வைக்கலாமா….நாளைக்கே நமக்கு
ரெண்டும் பெண் குழந்தைகளா ஆச்சுன்னா எப்படி சமாளிக்கப் போறோமோன்னு இருக்கு…இப்பவே அதுக்கும் நம்ம அனுபவப்பட வேண்டாமோ? என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் குழைந்து பேசிக்  சிரித்தார்…கிருஷ்ணமூர்த்தி.

போறுமே…அசடு வழியறது….என்னாச்சு உங்களுக்கு..இப்படி திடீர்னு அந்தர் பல்டி அடிக்கறேள்…சாயந்தரத்துக்குள்ளே… ஞானோதயம்…ஏகத்துக்குப் .பொறந்துடுத்து…! சமத்துதான் நீங்க…என்ற கல்பனாவின் மனசுக்குள் ஏகாந்தம். மொதல்ல….ரெண்டு குழந்தைகளையும் நன்னாப் படிக்க வைக்கணம்….கல்யாணம் எல்லாம் அவாளே… பண்ணிப்பா….நீங்க….இப்போ தான்
பெண் குழந்தைகளுக்கு தோப்பனார் மாதிரி பொறுப்பா… பேசறேள் ன்னு .சொல்லும்போதே பூரிப்பில் முகமெல்லாம் குங்குமமாகச் சிவந்தது,,

அவரது அன்பான பார்வையில் தனது ஆனந்தக் கண்ணீரை மறைக்க இடம் தேடி….ஆதரவாகத் தன் கணவன் மார்போடு தலை சாய்த்தாள் கல்பனா.

இருவர் மனதிலும் இனம் புரியாத ஏகாந்தமான நிம்மதி இருந்தது.

———————————————————————————————————

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக