வியாழன், 26 ஏப்ரல், 2012

வீட்டிற்க்கொரு ஆலயமணி...!



 
நிதி திரட்டி மகிழும் நாட்டில் 
நீதி எங்கே.. யாரிடம் தேடுவது..?

சோழமன்னன் ராஜ்ஜியத்தில் 
ஆலயமணி தொட்டடித்து 
அழுததாம் காதல்பசு..!

வாயில்லா ஜீவனும்.. 
அங்கே...நீதி கொண்டதாம்  
காமதேனு..!

நாடாளும் ஆட்சியே 
நலிந்து போக
வீட்டிற்குள் விலங்கின் 
சூழ்ச்சி ஆட்சி..!

ஊரடக்கம் போலவே 
பெண்களுக்கு வீடடக்கம்...
பெற்றவளுக்கும் ..
பெற்ற அவளுக்கும்..!

அராஜகத்தை செங்கோலாக்கி 
அதிகாரம் ஆளும்போது..
அரக்கன் நுழைந்த இதயம்...!

இரக்கம் வெளியேறி 
கை விலங்கிட்டு..
வாய்ப்பூட்டிடும்...
வாழும் வாய்ப்பையும் 
பூட்டிடும் அவலம்.. பெண்களுக்கு..!

ஆணாதிக்கம் எளிமையாய் 
விலங்கிடும்...இளகியவளை..
பதவிக்கு முன்னே மண்டியிட்டு  
மறைந்திடும் மனிதநேயம்..

ஆயிரம் பேசும் 
உரிமை போராட்டம்...
உள்ளே நுழைந்ததும்
திண்டாடிடும்... பெண் மனம் 
வலுவற்று ஓய்ந்திடும்...!

ஆதிக்கம்... இழைக்கும் 
அடிமை வரிசைகளில்...
கூழாங்கல் இதயத்தோடு...
இணங்கவில்லை என்றால்...
அணகில்லையவள்...பேயாவாள்..!

வரிசைக்கொரு கோயில் 
இருந்தென்ன இந்தியாவில்....
தெய்வமில்லை அங்கே.....
ஆலயமணி அடித்தும் 
ஒலி எழும்பவில்லை..!

வீதி தோறும் விளக்கிருந்தும் 
பெண்ணவள் உள்ளத்தில் 
என்றும் இருட்டோடு...!

காருண்யம் மறைந்த 
கயவன் கணவனாய்..
வந்துவிட்டால்..
காதலும் மறைந்து 
கண்ணீர் போடும் 
வாழ்க்கைப் பாதை..!

மன்றம் நிறைந்திருந்தும் 
நீதி இல்லை எங்கும்...!
நெஞ்சில் கனல் கனன்று 
தூங்கும் எரிமலையாய்..!

நிலையில்லாத மனங்களின்  
தரமில்லாத குணங்கள்..!
வேலியே பயிரை 
மேய்க்கும் அபாயம்..ஒருபுறம்..!

பூனையே மீனுக்கும் 
காவலாகும் அவலம்..
குருடனுக்கு ஊமைத் 
தோழனாகிக் 
குமுறும் பொன்மனம்..!

மௌனக் கோடுகள்...
கால காலமாய் இதயத்துள்..
நாளெல்லாம் மாறும்
வலியின் முகவரிகள்...!

உலகத்தில் பாதி மட்டும்  
பெண்களொரு சுதந்திரப் பறவையாய்..
இன்னும்...இங்கு மட்டும் 
பாதையோர பவழமல்லியாய்..!

மண்ணுக்குள் துவண்டு போகும் 
சருகுகளாய் மாறாமல்...
கட்டிடுங்கள்.... வீட்டிற்க்கொரு 
ஆலயமணி...!

நீதி கேட்க அல்ல...
இந்த நீதிமணி..!
நீதியற்றவனை....
நிரந்தரமாய் அகற்ற..!

----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக