ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

நீ தான் போதிமரம்..!சொட்டுச் சொட்டாய்..
இறங்கும் துளி..
உதிரத்தோடு
தோழமையாய்க்
கலந்து...தளர்ந்த
நரம்பை


உயிர்ப்பிக்க..
முகத்திற்கு நேராய்
படபடக்கும் மின்விசிறி
நான்கு வெள்ளை சுவரும்
பசுமை திரை மறைவில்


கட்டிலோடு கட்டிலாய்..
நானும்..அமைதியாய்..!
மோட்டுவளைப் பல்லி
ஒன்றைக் கண் தொடர..
இறுகிய முகத்தோடு


இளம் தாதி தன்
கடமையாய்
மருந்தை செலுத்திச்
செல்ல....அமைதியிலும்..
ஆர்ப்பாட்டமான மனசு..!


அனைத்தையும் துறந்து
ஓட வேண்டும் எனும் வெறி..
ஒத்துழைக்காத உடல்..
கண் மூடி ரசிக்கிறேன்...
வேறென்ன செய்வது?


கண் நிறையக் கனவுகள்
இந்த சிறை..நான் பழகியது..
மருத்துவமனையும்
மருந்தும் தான் எனது
வாழ வைக்கும் தெய்வங்கள்..!


இதுவே உலகமாய்ப் போனபோது..
மோதிக்கொண்டது மனது..
தனிமை தான் தோழமையானது..
காற்றிலடிக்கும் ஜன்னல் கதவு
என்னை நேசிப்பது புரிந்தது..!
உட்புகும் நேசக் காற்று ..


கண் தழுவி அழைக்க..
தென்றலோடு சேர்ந்து நழுவி
நானும் பயணிக்கிறேன்..
தென்னங்கீற்றின் உல்லாசம்..
ஊஞ்சல் கட்டியாடும் ஒய்யாரம்..


ஜன்னல் வழியே என் மருந்து..!
இதயத்திற்கு புது விருந்து.!
வலித்த இதயம் நிமிர்ந்தது போல்..
சோர்ந்த மனசுக்கு என்றுமே...
ஜன்னலே..நீ தான் போதிமரம்..!

=============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக