சனி, 28 ஏப்ரல், 2012

நியாயப் படுத்தாத தண்டனைகள்..!




காலை மணி எட்டரையைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது.இன்னும் வீட்டு வேலை செய்ய வரும் தௌலத் வரவில்லை.எத்தனை நேரம் தான் நேற்று ராத்திரி போட்ட பத்துப் பாத்திரங்கள் காய்ந்து கொண்டிருக்கணும்?
வேலைக்கு வந்து பத்து நாட்கள் கூட ஆகலை...அதற்குள் இப்படி...இந்த லட்சணத்துக்குத் தான் நான் வேலைக்கு ஆளே வெச்சுக்காமல் இருந்தேன்...என்னோட இந்த விரதத்துல போன வாரம் தௌலத் தான் கையை வைத்தாள்.. எப்படின்னு கேட்கறேளா...? இருங்கோ...இந்தப் பாத்திரதத் தேச்சுண்டே சொல்றேன்.....கதை கேட்க உங்களுக்கு இஷ்டமோ இல்லையோ...இந்த உண்மையைச்  சொல்ல எனக்கு ரொம்ப இஷ்டம்....! அதோட இல்லாமல் இதக் கேட்டு...எங்கோ ஒரு மூலையில் ஒரு மனம் மாறினாலும்....நல்லது தான்.

பத்து நாட்கள் முன்னாடி....தான் முன்னப் பின்ன தெரியாத அவளை பக்கத்து பிளாக் இல் இருக்கும் பேகம்....அறிமுகப் படுத்தி வைத்தாள்.. இவளுக்கு குடும்பத்தில் ரொம்ப கஷ்டம்....நீங்க வீட்டு  வேலைக்கு வைத்துக் கொண்டு ஒரு ஐநூறு அறுநூறு கொடுத்தால்....ஒரு குடும்பம் பிழைக்கும். அவள் நிறுத்த...

இல்லங்க....என்னக்கு வீட்டுக்கு வேலைக்கு ஆள் வெச்சுக்கற பழக்கம் இல்லையே....நான் அப்பப்போ ஊருக்கு போய்டுவேன்.....அதெல்லாம் சரிபட்டு வராது...வேண்டாம்...என்று நிறுத்த...

தௌலத் தொடர்ந்தாள்.

" இல்லம்மா...நான் ரொம்பக் கஷ்டப் படறேன்மா....இரண்டு பிள்ளைங்க.....படிக்க வைக்கணும்....புருஷன் சரியில்லை....பத்து நாளைக்கு ஒரு தபா தான் வீட்டுப் பக்கமே வருவாரு....இருக்கியா...செத்தி
யான்னு கூட கேட்காமல்...கையில் கிடைச்சதை எடுத்து அடிச்சிட்டு பணத்தை புடுங்கிட்டு ஓடிடுவாரு...இன்னொரு குடும்பம் வேற அதுக்கு........குடியும்...குடிச்சிட்டு அடியும் தான் எனக்கு கிடைக்கும்......என்னாப் பண்றதும்மா....புள்ளங்களுக்காகத் தான்.....இப்படி...என்று காலில் விழாத குறையாக கேட்க"...என் மனம் விரதத்தைக் கை விட்டது.,

இருந்தாலும்...நான் வேண்டாம்....அப்பப்போ நான் இருக்க மாட்டேனே...வேலை ஒன்னும் அப்படி ஆள் போட்டு பண்ணற அளவுக்கு இல்லையே என்று...சொல்லிப் பார்க்க....
"ஏன்மா....நான் பாய் வீடுன்னு பார்கறீங்களா..? நீங்க....ஏன்னா ஆளுங்க.....? என்று கேட்க...
ச்சே...ச்சே...அப்படி எல்லாம் பார்க்கலை....என்று வாயும்.....வேண்டாம்னா....இப்படி ஒரு அர்த்தம் இருக்கோ என்று மனமும்......பேசிக் கொண்டது......".படிப்பது ராமாயணம்....இடிப்பது....." அந்தக் கதையாக இருக்கக் கூடாதே...அதனால்..
சரி...நாளையில் இருந்து வா....கார்த்தால ஏழு மணிக்கெல்லாம் வந்துடு...என்ன சம்பளம் என்று கேட்டதும்....
பாத்திரம் தேய்ச்சு...மெஷின்ல தானே துணி துவைப்பீங்க....அதைக் மாடியில் காயப் போட்டு, பெருக்கி துடைத்து....
ஒரு அறுநூறு ரூபாயைக் கொடுத்துடுங்கம்மா......தயவு பண்ணி....என்றாள்.

சரி.....என்று சொன்னதும்....முகத்தில் ஒரு நிம்மதி.சரிம்மா நாளைக்கு வந்துடறேன்னு சொல்லிட்டு புர்காவை மாட்டிக் கொண்டு கிளம்பினாள்....தௌலத்.

இந்தப் பத்து நாட்களும்.....எந்தப்  பிரச்சனையும் வராமல் அவள் பாட்டுக்கு வந்து சுவடே தேராமல் சுத்தமாக வேலை செய்து விட்டு சென்றவள்....திடுமென வராமல் இருப்பதன் காரணம் என்னவாயிருக்கும்...?
இதோ...காலிங் பெல் அடிக்கிறது.....பாதி பாத்திரம் தேய்ச்சுட்டேன்...கை அலம்பிண்டு கதவைத் திறக்கப் போறேன்...

இருங்கோ...மீதியும் இருக்கே...!

வாசலில்....தௌலத்.....அவள் முகம்....கவலையில்...!
என்னாச்சு தௌலத் உனக்கு....ரெண்டு வேளை,,,டும்மா.....வர முடியலைன்னா சொல்லிட்டு போயிருக்கலாமே...போன் நம்பர் தான் கொடுத்தேனே...ஒரு போன் பண்ணி சொன்னாக் கூடப் போதுமே...என்றேன்.

இனிமேல்...கதையாக சொல்லவில்லை...நீங்களே நேரில் பாருங்கள்....!

தயக்கத்துடன்......அம்மா...அது வந்து....உங்க பக்கத்து வீட்டு செட்டியாரம்மா....என்னை வாசல்லயே மடக்கி...இனிமேல் இங்க நீ காலடி எடுத்து வைக்கக் கூடாதுன்னு மிரட்டினாங்கம்மா...அதான் வந்தவள் திருபப் போயிட்டேன்.......என்றாள்.
"இது நல்லாருக்கே...அவங்க எப்படி அப்படிச் சொல்லலாம்.....? என் வீட்டில் நீ வேலை செய்ய அவங்க பெர்மிசன் நமக்கு எதற்கு...என்று கேட்டேன்.

அதில்லைம்மா...நீங்களே வந்து பேசிப் பாருங்க...முடிஞ்சா ..அவங்க கிட்ட...என்று சொன்னதும்.....எனக்குள் ஏதோ
சுறு...சுறு....வென்று.....சுழல.....நீ வா....அவங்க கிட்டயே...கேட்கறேன்.....இதில் கூடவா ஒருத்தர் தலை இடுவாங்க....சொல்லிக் கொண்டே பக்கத்து பிளாட் வீட்டுக்கு போனேன்...கூடவே தௌலத்தும் வந்தாள்.

அவர்கள் வீட்டின் முன்னால் நான் ஆஜரானதும்...ஜன்னல் வழியாக என்னைப் பார்த்த அந்த ராஜேஸ்வரி அம்மா...
கதவைத் திறந்து...வாங்க என்றவர்....என் பின்னால் நின்ற தௌலத் தைப் பார்த்ததும்...முகம் மாற....நான் வந்த விஷயத்தைப் புரிந்து கொண்டவளாக...
"ஏங்க...சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க....உங்களுக்கு இவளை விட்டா வேற வேலைக்கு ஆள் கிடைக்கலியா..?
வேணும்னா சொல்லுங்க..என் வீட்டு வேலைக்கார அம்மாவை நான் கேட்கறேன்....."போயும் போயும் பாய் வீட்டம்மாவ வேலைக்கு வெச்சுருக்கீங்க."....என்று எகத்தாளமாக...கேட்டாள்.
"அதனால என்ன..." இது உங்களை எந்த விதத்தில் பாதிக்குது..?என்று நான் கேட்டதை அவர்கள் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.
நீங்க பிராமின்  தானே..? எந்த பிராமணரும் செய்யாத காரியத்தை நீங்க எப்படி செய்யலாம்....அப்போ நீங்க என்ன பிராமணர்....? நாங்கள் ...உங்கள் வீட்டுக்குள்ளாற இனிமேட்டு வர மாட்டோம்....என்று ஒரே கல்லாகத் தூக்கி ஓங்கி தலையில் போட்டாள்.

இதென்னடா வம்பாப் போச்சு...? நினைத்தாலும்...என்னால் விட்டுக் கொடுக்க முடியவில்லை....
இதோ பாருங்க....நீங்க எப்படி என் வீட்டுக்கு வேலைக்கு வரவளை.....வராதேன்னு சொல்லி திருப்பி அனுப்பலாம்...அப்படியே சொல்லி இருந்தாலும்...என்கிட்டே ஒரு வார்த்தை நீங்க சொல்லி இருக்கணும்.....இது என்ன நியாயம்...என்று கேட்க...

அது சரி..முதல்ல உங்க வீட்டுக்குத் தான் இந்தம்மா வேலைக்கு வருதுன்னு தெரியாமல் இருந்துச்சு...பெறகு தான்
வாட்ச்மேன் சொன்னாரு....அய்யர் ஊட்டுல வேலைக்கு போகுதுன்னு.....எனக்கு நம்ப முடியலை....அது உங்க வூட்டுத் துணிய கொடியிலக் காயப் போடுறேன்னு....ஏங்க வீட்டுத் துணியை எல்லாம் தொடுது....எனக்கு இது கையி.காலு...மேல...படறது எல்லாம் சகிக்காது,,,,இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை...சொல்லிப்புட்டேன்....
ராஜேஸ்வரி அம்மாளின் குரல் உயர.....உயர.......

தௌலத்.....கேவி,,,கேவி அழ ஆரம்பித்தாள்..
தௌலத்....நீ ஏன் இதுக்குப் போயி அழுதுகிட்டு......ஏங்க....ஒரு மனிதாபிமானமே இல்லாமல் இருக்கீங்க....இந்தக் காலத்தில் ....ஜாதி..மதம்...ன்னு பேசி..ஒரு பெண்ணோட மனசைக் காயப் படுத்தறீங்க.....ஒரு பெண்ணாக இருந்துகிட்டு....
நாம ஒவ்வொருவரும்..இந்த ஜாதில தான் நான் பிறக்கணும்னு எழுதி வாங்கிட்டா பிறந்து வந்தோம்....?,,,எனது கேள்வி அவர்களைத் தாக்கியதோ இல்லை...இதற்க்கெல்லாம் நான் அசந்தவள் இல்லை என்று..".உங்களோட எனக்கென்ன பேச்சு.....இந்த அபார்ட்மெண்டில்  எல்லாரும் இந்துக்கள் தான்....நாங்க இந்த பிளாட்டுக்கு ஓனர்ஸ்..
நீங்க வாடகைக்கு வந்தவங்க...இங்க இருக்கற ரூல நீங்க மாத்த முடியாது....இது..இங்க இனிமேல் வேலை பார்க்க வரக்  கூடாது அவ்ளோதான்...சொல்லிட்டேன்.....என்று தௌலதைப் பார்த்து கையை காட்டி விட்டு....கதவைப் பட்டென்று சார்த்திக் கொண்டு உள்ளே போய்விட்டாள்....ராஜேஸ்வரி அம்மாள்.

எனக்குள்...நான் அவமானப் படுத்தப் பட்டேன் என்ற உணர்வு மேலோங்கினாலும்....ஒரு ஆவேசமும்... அத்தோடு சேர்ந்து எழுந்தது. மறுபடி அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி.....
"உங்களுக்கு மனிதாபிமானம் தான் இல்லைன்னு நினைச்சேன்....குறைந்த பட்சம் பணிவு கூட இல்லையே...என்று சொல்லி....உங்க வீடு சொந்த வீடு தான்...ஒத்துக்கறேன்.....ஆனால்...அதை வெறும் உங்க ஜாதிக் காரங்க மட்டும் கட்டியதா? இல்லை...நீங்க பார்த்து வெச்ச ஆளுங்க கட்டி தந்தாங்களா?....
ஹாஸ்பிடல் போயி பாருங்க நீங்க...ஒரு தடவையாவது.....ஜாதி...ஜாதி...மதம்...அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்க....எல்லாம்...எந்த ஜாதி இருந்தால் என்ன...எந்த மதமா இருந்தால் என்ன....யாராச்சும் சமயத்துல உதவி செய்ய மாட்டங்களான்னு...காத்துக் கிட்டு இருப்பாங்க....
இதுவே உங்க புள்ளைங்களுக்கு பாடம் சொல்லித் தரவங்க வேற ஜாதியா இருந்தா ஏத்துக்குவீங்க....
அவங்களே ஒரு ஏழையா இருந்தால்....மனசுக்கு தோன்றியதெல்லாம்....பேசுவீங்க.....!
தௌலத் என் வீட்டில் தான் வேலை செய்வாள்....உங்களால் ஆனதை செய்து கொள்ளுங்கள்...சொல்லி விட்டு...
வரும்போது...."கொட்டினால் தான் தேள்...கொட்டவில்லை என்றாள் பிள்ளைப் பூச்சி."...என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.....!
தௌலத் மறுபடி வந்து வேலை செய்து கொண்டிருக்கிறாள்....
ராஜேஸ்வரி அம்மாள்....இப்போதெல்லாம் என் வீட்டைக் கடக்கும் பொது..இரண்டடி நகர்ந்து ஏதோ தீண்டத் தகாதவர் வீட்டைத் தாண்டிச் செல்வது போன்ற பாசாங்குடன்.....செல்வதைப் பார்க்கும் பொது...நெஞ்சம் நிறைய சிரிப்பு தான் வருகிறது. ":என்று தணியும் இந்த ஜாதி...மத...பேதம்....?"
இந்தப் பரந்த உலகில் அவரவர்களைச் சுற்றி இருப்பவர்களை சக மனிதர்களாக பார்க்கும் பக்குவம் நம் ஒவ்வொரு வருக்குள்ளும் வளர்த்துக் கொள்ளல் வேண்டும்...நம் குழந்தைகளிடத்தில் இந்த விதையை விதைத்தால்....
எதிர்காலமாவது...சாதி மதம் இனம் என்ற கரும்  போர்வை விலகி...வெளிச்சம்...வரும்...
------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக