வியாழன், 26 ஏப்ரல், 2012

ஆடலதிசயம்..

 

சார்த்திய வெள்ளிக் கதவுகளின் முன்னே 
காத்திருக்கும் விழிகளோடு எனது விழிகளும்.

மாயத்திரை விலகும் நேரம் பார்த்து..
மௌனமாய் தவமிருக்கும் மனதோடு கூட..

குஞ்சிதபாதம் தூக்கி நிற்கும் அழகு காண
சிவகாமி  சமேத ரகசியம் காண...நீரோடு..

சிற்சபையில் நடராஜரின்  ஆடலதிசயம்..
பொற்கூரையுள்ளே பச்சைக் கற்பூரம்..

வெட்டி வேரது.....பட்டுபூவாய் மாலையாகும்..
பட்டும் பச்சையும் குமிழ்சிரிப்பும் உமதாகும்...

ஆறுகால கட்டளையும் அன்னமும் சொர்ணமும்..
அள்ளித்தரும் கருணை உள்ளே. காத்து நிற்கும்..

மணியோசை ஒவ்வொரு மனத்திலும் வந்தடிக்க
படபட வென கதவும் திரையும் விரிந்து  நிற்க..

கோடிக் கண்கள் கோடி செவிகள் போதாதய்யா..
கரங்கள் கூடி சிரசைத் தாண்ட...நீர் விழிகள் தாண்ட..

ஆராதனை...ஆலாபனை..வேதகோஷம் ஒன்றுசேர..
கோபுரதீபம் வரிசை பிடிக்க ஆடலரசனின் கருணைகள்

ஓடிவந்து ஒவ்வொரு இதயத்தையும் தட்டிச் செல்ல..
பனிக்கும் கண்கள் வேண்டுதல் மறக்க..மனத்திரை விலக

இறையுணர்வே.....உயிருணர்வாய்..உயர்ந்து நிற்க..
ஒவ்வொருவருக்கும் சிதம்பரத்தில்  ஆத்மதரிசனம்..!
=========================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக