வேங்கை மனது உயர்வுகளைத் தேடுது..!
தோழா... நீ வீணே தேடினால் கிட் டாது வெற்றி..
காணாது நீயும் துடிப்பாய், முயலாமல் நாளை..!
காணும் வெற்றி நாளை காலடியில் தட்டுமோ..!
உயர்வுகளைத் தேடினால் தோழா உனக்கு..
இரவல் தான் கிடைக்குமோ...அங்கங்கே..
இறைந்து தான் கிடக்குமோ...? காணாதே கனவு..!
உயர்வான மாற்றங்களைத் தேடி நீ தவிக்கின்றாய்..
உழைப்பின்றி கிட்டிடுமோ எதுவும் தான் இவ்விடம்..
விரும்பிடினும் மந்திரத்தால் மாங்காய் விழுவதில்ல
வான்வெளியில் கிட்டாதப்பா..உயர்வு மிகவும் உயரமப்பா..!
வெற்றி எனும் தொடுவானம் தூரத்தில்லில்லை..
மன ஆழம் உனக்கொரு எல்லை...! இலக்கோடு
வானத்தைப் பார்த்து வலையை வீசு..!
மேகத்தை சேர்த்து உன் ஏக்கத்தைப் போர்த்து..!
இலக்கு இல்லாத விழிகளில் விடிவு இல்லாது போகும்..
ஆசை இல்லாத மனதில் எழுச்சி இல்லாது போகும்..
வேட்டையாடு... உன்னுள் ஒதுங்கும் கறைகளை..!
கரையில் ஒதுங்கி எஞ்சிடாதே...மறைந்திடாதே..!
அறுந்த வலையை மீண்டும் பின்னி வாழும்
சிலந்தியிடம் கண்டுவிடு முயற்சி தனை..!
கூழாங்கல் இட்டு நிரப்பி தாகம் தணிந்த
காகத்திடம் கற்றுகொள் பொறுமை தனை..!
முயலிடம் ஆமை முதலிடம் கண்ட கதை
சொல்லுமே.. ஆமையின் மன இலக்கு..!
துகள் இனிப்பைத் தன் இருப்பிடம் கொண்டு
செல்லத் தயங்காது நடையிடும் எறும்புகளின் துணிவும்..!
முதல் உணவு தனக்கே என முடங்காமல்
சிறகு விரிக்கும் காலைப் பறவைகளின் தீர்க்கம்..!
காகிதம் தான் என்றாலும் .மெல்லிய நூலிழையில்
மேகம் தொடும் பட்டத்தில் காண் உன் இலக்கை...!
கண்ணி வைத்து கண்ணில் வைத்துக் காண்..!
உனக்கான வெற்றிப் பாதை மலர்விரியக் காண்..!
உனக்குள்ளே நிர்ணயமாய் நீ வகுத்தாய்..
வாராதது எதுவும் உண்டோ...? தேடிக் காண்..!
தோல்வி என்றும் தொடர்வதில்லை...துவள்வதில்லை..!
எட்டத் துடிக்கும் நெஞ்சுக்கு தோல்வி ஏற்றும் முதல் படி..
தொட்டிடும் தூரமே வாழ்க்கை வானத்தின்முதல் பிடி..!
முயன்றிடுவாய் தொடுவதற்கு...அடைந்திடுவாய் உன் இலக்கு..!
தொட்டதெல்லாம் பொன்னாக நீயொன்றும் மந்திரவாதியல்ல..!
உள்ளார்ந்த பயணம் தான் வெற்றிக்த் தாழ் திறந்து விடும்..!
மனதை அடக்கி முயற்சித்தால்...வாழும் போதே...
வானையும் தாண்டலாம்...வேண்டியதை நாடலாம்...!
நெஞ்சுக்குள் கனலும்...கண்ணுக்குள் அனலும் வேண்டும் தோழா..!
வேண்டியது கிட்டிவிட்டால் இறுதிவரை நிமிர்ந்திடலாம்...
சாதிக்கும் எண்ணத்திற்கே சோதனைகள் அலையலையாய்...!
எதிர்த்திடு..எழுந்திடு....சோர்ந்திடாமல் ..ஜெயித்திடு..!
எல்லை தாண்டி உன்னைத் தேடு...
உன்னுள் உந்தன் கண்ணைத் தேடு...
உச்சம் கரங்களுக்கு துச்சமாகும் வேளை..
உன்னால் உலகம் உருவாகும் நாளை..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக