திங்கள், 14 மே, 2012

வந்ததும்......சென்றதும்...!

துவண்ட பயிரை
துளிர்க்க வைக்க 
பொங்கி வந்தாள்
எங்கிருந்தோ...
வைகை...!
புதுப்புனலாய்..!
-------------------------------
வான்மேகம் தந்த 
மழைபோல் நீ
வந்த மோகத்தில்
நான் அறிஞன்...!
வானவில்லாய் நீ 
மறைந்த போது...
நானே மூடன்..!
------------------------------
அத்தனைக்கும்
சாட்சியாய்....
திருட்டு..கொலை..
கொள்ளை...கபடம்..!
கூட்டம்...ஆட்டம்...!
அத்தனைக்கும்
சாட்சியாய்...கல்லாக
பார்த்திருந்தது..
ஆற்றங்கரை நடுவே
கல்மண்டபம்..!
-----------------------------------
கவிஞனுக்கு
கவிதை..கடலைக்
கண்டதும் அலை
அலையாய்..!
கவி பாரதிக்கோ..!
கடலாகிறது
அலை அலையாய்..
கவிதைக் கடல்..!

தேன்பூக்கள்...!

கைப் பணம்....
கைமாறினால் தான்
ஆலயத்தில் கூட
ஆண்டவன் தரிசனம்...
இறைவா... நீ யார் பக்கம்..?
----------------------------------------
வயற்காட்டில் 
நாற்று நட்டு..
பூமித்தாயின்..
பசியாற்றிக் 
கொண்டிருந்தாள்..
பசியோடு.. அவள்..!
------------------------------------------
பிரம்மன் ...
மகிழ்ந்தார்..
அனைத்து உயிரையும் 
நிறைவாய்..
படைத்துவிட்டதாய்..!
--------------------------------------------
மரத்தில் 
இருக்கும் வரை 
தான்...
இலைகளுக்கும்..
பதவி..!
---------------------------------------------
கனிகள்...!
நிறைமாத 
கர்ப்பிணிகள்..
உண்ண 
விரும்பும்போது..
விதை.... எதிர்த்தது..!
-----------------------------------------------
விதைகள் 
விலகியதே..என... 
வருந்தின 
மரங்கள்....
மரக்கன்றைக்... 
காணும்வரை..!
------------------------------------------------
அகங்காரம்
அடக்கி..
எண்ணத்தை 
உயர்த்தி..
உள்ளத்தை...
விரித்தால்..
அங்கே...பெண்..!
---------------------------------------------
படைத்த உயிர்கள்
உறங்கவென்றே...
பூமியைப் பாயாய்..
விரித்தான்...
இறைவன்...!
பாயை..
இயந்திரமாக்கி....
உறக்கம் 
தொலைத்தான்..
மனிதன்..!
------------------------------------------
ஆதிகால 
மனிதனிடம்..
நிம்மதி....
அண்மைக் கால
மனிதனிடம்...
வெகுமதி...!
வருங்கால 
மனிதனிடம்..
????????
------------------------------------------
பூமித் தாய் 
உடம்பில்...
புற்றுநோய் 
செல்களாய்...
தீவினைகள்..!
--------------------------------------------
ஒற்றைக் காலில்..
கண்மூடி 
தவமிருந்து 
காத்திருந்தது..
கொக்கு...!
காலிடுக்கில் 
நழுவி...தப்பியது..
கெண்டை..!
--------------------------------------------
அவள் 
புயலானாள்...
நான்...
எதிர்க்கத் 
திராணியின்றி 
காகிதமாகினேன்..
-----------------------------------------
சிலந்தியும்..
இருந்த இடத்தில் 
வலை பின்னி...
காத்திருக்கிறது...
பூச்சிகளை...
சிறை எடுக்க..!
----------------------------------------------
எதிர்பார்போடு  நான்....
உன் மௌனம்...
சொன்னது 
சம்மதம்...!
ஏமாற்றத்தில்..  நான்..
உன் மௌனம்...
கொன்றது....
சலிப்பு...!
------------------------------------------------
மரம் எட்டித் தொட....
பறவை பறந்து..தொட..
பட்டம் எகிறித் தொட...
முயற்சிகள்...யாவும்  
தோல்வி....!
வானமே....உன்னை..
எந்தன் எண்ணத்தால் 
தொட்டு... 
வென்றிடுவேன்..!

----------------------------------------------

ஞாயிறு, 13 மே, 2012

உதிர்ந்த சருகுகள்..

 
கனிவு கொண்ட
இனிய சொற்கள்..
இதயம் தாண்டி 
உள்ளே போகும்..
ஏனோ..ஏக்கத்தோடு...!
மனம் வானம் பார்க்கும்
இவர்களிருப்பதால் 
தானா,,?  வானமே நீ 
மும்மாரிப் பொழிகிறாய்...!!

மையிட்டுப்... பொய்யிடாத 
பூங்கண்களில்... 
பரிவு தரும் நேசக்க்  
கரங்களும்..
வேலி போடாத 
அன்பிற்கும்..!
ஒவொரு நாளும் ...!!
ஞாயிறுக்காகக்..
ஏனோ ..ஏக்கத்தோடு...!!
காத்திருக்கிறோம்...
குழந்தைகளாய்....!

இல்லங்களில்..
முதியோர்கள்...
நாங்கள்....!
நன்றியோடு...
மனங்கள் 
நினைக்கும்  
இப்போதாவது
இறைவன் 
இதயங்களைக்
காட்டினாரே..!!

கம்பிமேல் நடக்கும் வாழ்வு..!

 
 மேகம் போல் மாறி 
மாறி மனதின் நிலை 
 விழாமல் தடுமாறி...!

புதைந்து போன உண்மைகள்
மெல்ல  உயிர்த்தெழும்...
உணர்வுகள் புதைந்திடும்..!

ஒவ்வொரு இதயத்துள்ளும்
இதே போராட்டம்..
பாசத்தில் இருந்து பதவி வரை..

அறியாமல் நடந்திடும்
மனம் நித்தம் கம்பி மேல்...
விழுவதும் அடைவதும் ..வாழ்வு..!

தெரிந்தும் கடக்கிறோம்..
அடைந்து விடும் ஆர்வத்தில்
விழமாட்டோம்... நம்பிக்கையில்...!

கூத்தாடி வாழ்வு தான்..!
மனிதர்கள் எங்கும்..
மனதுக்குள் என்றும்..!

என்னைத் தேடி... உன்னைக் கண்டேன்...!

கதவு திறந்தது...
ஜன்னன்லும்  கூடவே,,
விழிகளுள்.. ஒளி ஏற்றி 
காத்தது நெஞ்சம்......!
உந்தன்..வரவுக்காக...
சுவடின் நிசப்தம்...
ஏனோ....
மறந்தனையோ..?

வெறுமை உள்ளே...!
விரட்டியது வெளியே...
ஆரவாரமற்ற 
தெருக்களில்
கொலுசு சுமந்த 
பாதத்தோடு 
உன் நினைவு 
சுமந்த நெஞ்சோடும்..
இறங்கி நடக்கிறேன்...!
தேடும் கண்கள் 
வீதியை அளக்க..
விதி அழைக்கும்  
பாதை..தான்.. 
உந்தன்...
இருப்பிடமோ..?

காலங்கள் பாதச் 
சுவடுகளாய்  நீள் 
கோட்டில் அளக்க..
வாழ்நாள் போலவா..
நீளும் பயணம்....!!
தேடும் மனதுக்கு..
துணையாய்..!
கன..மேகம்..கூடவே..!
எங்கிருந்தோ...
குழலிசையாய்
உன் கீதம் பாதை சொல்ல..
தொடர்கிறேன்...
இசையின் திசையை.....!
கீதத்தை..அடையுமா....
கொலுசொலி...?!

மாலையும் மயங்கி 
புள்ளினம்..கூடு சேர
மேகங்கள் கலைய
மெல்ல இருள் சூழ
நம்பிக்கையாய்...
நட்சத்திரங்கள் 
சிநேகமாய் கைகுலுக்க..!
வழி சொல்லிப் பறந்தது
பச்சைக்கிளி...!

பூந்தென்றல் தூதுவிட
கடலலைகள் தேடு ...
தேடென அடுத்தடுத்து 
உற்சாகமூட்ட
நெஞ்சுள் கனல் மூள..
திசையறியாத பயணம்..
மெத்தை விரித்த நிலம்..
இன்று முடிந்து நாளை 
துவங்கும் வேளை....
மலைமுகட்டில் ..இருமரங்கள் 
கைகொட்டி உண்டானது
என் வழிக்கான விளக்கு..!


யாரைத் தேடுகிறாய்...?
எங்கே ஓடுகிறாய்...
என்னோடு வா என
அழைத்தது கொள்ளிடம்...!
கண்ணொளி கடந்து
நீர்விளக்கேற்றி..எனையே 
தேற்றித் தேடுகிறேன்..!
குழல் தந்த வழியோசை...
தொடர்ந்து செல்லும் 
மணியோசை.. தேடும்..!

உயிர் காத்த கீதம்....
மெல்ல மெல்ல காற்றில் 
பின்வாங்க...கால் தடுமாற
கொலுசின் ஒலியும் 
தனை இழக்க..
என் உயிரை 
அறுக்கும்..சக்தி 
உன் உயிருக்குத்தான்..!
மெல்ல மெல்ல 
என் உயிரும்..
கீதத்தோடு கலக்கும் 
வேகத்தோடு..
வைரத்தை வைரம் 
அறுத்தது போல்....
காற்றோடு கலந்து 
இணைந்தது..!
வைர உயிர்கள்....!

பொம்மலாட்ட அரங்கேற்றம்..!

 Pommalaattam.jpg
படித்துப் பட்டம்
பெறுவதற்குள்
பன்னாட்டு வேலைக்கு
அழைப்பு...
இருபத்தியொரு
வயதில்..மாதம்..
ஐம்பதாயிரத்துக்கு
உத்திரவாதம்..!

வாணியும்...ஸ்ரீ யும்
இணைய....!
அழகும்...வீரமும் 
கூடி நிற்க...
முப்பெருந் தேவியரின்....
யௌவன கர்வம்....!
அடுத்தவர் கண்களுக்கு
நித்தம் விருந்து..!

மன மகுடம்....உயர உயர...
குணம் குன்றலானதோ...
கண் பார்க்கும் எதுவும்..
துச்சமாகி..பழமை...
பஞ்சாங்கமாகி...!
வருமானம் தந்ததோ...
உயர்ந்த தன்மானம்.....!

காதோடு இணைந்த
ஒலிபேசி..
தோளோடு தவழும்
மடிகணினி..
கறுப்புக் கண்ணாடிக்
குள்ளிருந்து...
தூக்கி எறியும்
பார்வைகள்..!
வார இறுதியில்....
உல்லாசச்...சுற்றுலா....!

உலக உண்மை
புரியாது...
கவலை எதுவும்
அறியாது...
பெரியோர் அறிவுரை
கேளாது..
வெறும் தலையாட்டலும்...
தறுதலை பதிலுமாய்...
அனைத்தையும்....
நிராகரிக்கும்..!

பச்சை நோட்டுக்கள்...
கத்தை கத்தையாய்...
இயந்திரத்தில்
அள்ளி அள்ளி...
சென்டுக்கும்...
செருப்புக்கும்...
அழகு நிலைய
கூடத்திற்கும்
தெளிக்க....பணம் பறக்க...
வேண்டாம் என 
சொல்லப் போனால்....
சுதந்திரம் போச்சு....என
ஏக வசனத்தில் வெடிக்க...
பன்னாட்டை.....
உள்நாட்டில்..
உலவ.. விட்டு...உலாவ..!

வேடிக்கை பார்க்கும்
பெற்றோர்...
வளர்ந்த பெண்ணின்
வாய்க்கு
பயந்து.....பயந்தே....
எண்ணும்..
பணத்தை கண்டு
வாயடைந்து...
பெருமை பொங்கப்
பார்த்து...
கழன்று விழும்
அச்சாணி....!
மனசுக்குள்
மணி அடிக்க...!
பெற்றவரின்
மன உளைச்சல்..!

பெருமை எல்லாம் 
ஊருக்குத் தான்..
உள்ளுக்குள்ளே ...
பொறுமும்  மனசு..!
கால்கட்டுப் போட்டால்..
வருவாளோ..கைபிடிக்குள்....
வந்த வரன்.. யாவும்
புறக்கணித்து....
புதுத் துணையோடு
நுழைந்தாள்....
ஆசை மகள்...!
ஏமாளி பெற்றோர்கள்..
கோமாளியாகி..
ஊரார் முன்னிலையில்...
பெருமைக்காக
தலையசைத்தது..
பொம்மலாட்ட வாழ்க்கையில்...!
===============================

மௌனமாய் பேசும் மனம்...!

நதியைத் தேடி கடலலை
எட்டி எட்டிப் பார்க்குதோ..?
மயிலிறகை அள்ளிச் செல்ல
மேகம் மழையை அனுப்புதோ..?
மோக மொழிகள் தீர்க்கவே
மலரும் மணத்தைப்.. பரப்புதோ..?

ஊமை மனங்கள் மழையில்
நனைந்து உல்லாசம் தேடுதோ..?
உணர்வுக்கு வடிகாலாய்...!
நனைந்த குயிலின் இன்னிசையோ..?
இருட்டு வானில் வெண்ணிலவை...
நட்சத்திரங்கள் தேடுதோ..?

கதவுகள் திறந்து...ஜன்னல் திறந்து..
கூரையும் திறக்குமோ...!!
சுதந்திரம் தேடுமோ..
உயிர் கூட்டில் ...பதுங்கும் புறா..!

தந்திரமாய்....யந்திரமாய்...
பத்திரமாய்..பழக்கி வைத்தோம்...!
இறுக்கிப் பிடித்தால் இறந்து விடும்..!
அகன்று பிடித்தால் பறந்து விடும்..

நமக்குள்  நாமே  காவலென ஆனோம்...
கடலும்..நதியும்..மலரும்...மனமும்..
தேடி..தேடி..தேடி...தேடி....
ஓடிக் களைத்த.. வேளை...

நதியின் நளினம் காணாக் கடல்...
கடலின் ஆழம் அறியா நதி..
மணம் நுகரா... மலர் கூட்டம்...
காற்று  அறியாது மணம்  போகும்  தூரம்..?

மனம் அறியுமோ தான் பறக்கும்  வேகம்..?
களைந்த பிறவிகள் எண்ணாத சட்டையாய்..
ஏதோத் தேடலில் இயற்கை சுழல....
மௌனமாய் பேசும் மனம்...!



நீலவைரம்...!

 
 
தங்க ரதம் இவன்...
நான்மாடக் கூடலில்
தடாகையை மனதில் ஏந்தி
ஆயிரம் பாயிரம் ஏற்றி...
பௌர்ணமி தினம்
கண்ட ஈசன்..!

கருணையை விழிகளில்
தீபமாய் ஒளிரவிட்டுக்
காத்திருக்கும் கண்ணன்...
தங்க ரதமாய் சுமந்தாலும்
அன்னையோடு..ஆடும்
பொன்னம்பலத்தவன்...!

குடத்து விளக்கை காண..
கோபுரத்தில் எரிபவன்.. நீ..
உன் சுடரோ உலகெங்கும் 
ஒளிர...இரவும்... பகலாகும்..
பன்னாட்டு நீலவைரம்...!
சிதம்பரப் பெட்டிக்குள் 
பாதுகாப்பாய்...!

கனவாகிப் போன 
நிஜங்கள் மீண்டும்
கனவிலேயே உருப்பெற்று 
இசையாய்..கவியாய்...
அமுத கீதமாய்
நெஞ்சில் அலைகளாக...
என்ன தவம் செய்தேனோ...?

கலியுகக் கருணா...!

வங்கிக்கொரு 
கடன் அட்டையாம்... 
வீடு தேடி வந்த 
மகாலட்சுமி....
நீ தானோ..!
கைப்பையில் 
காசே  வேண்டாம்..
தோல் பைக்குள்
பத்திரமாய்...நீ.. 
இருந்தால்....!

அளவு தெரிந்தும்...
தெரியாமலும்
வேண்டியதும் 
வேண்டாததும்...
இன்னும்..இன்னும் 
லிமிட் இருக்குன்னு...
அளவைத் தாண்டி ..
நீ தேய...தேய...
அட்சய பாத்திரம் நீ...!
ரகசியமாய் என்னைப் 
பிச்சைப் 
பாத்திரமாக்கினாய்...!

கலியுகக் கர்ணா..
ஆபத் பாந்தவா...
நீ இருக்கையில் 
எத்தனை தீபாவளி...
எத்தனை பொங்கல்.. 
வந்தாலும்..தாங்கும் 
என நான்..!
அற்புத விளக்காய் 
உன்னை தேய்க்க..
புதியவை எல்லாம் 
வீட்டுக்குளே....
கடனை ஏறியது....
தலைக்குள்ளே...!

மூன்றாம் நாளே....
வட்டி குட்டி போட்டு..
பாய்போல்....
கணக்கு வர...!
எனக்கோ...
மயக்கம் வர...!
அளவைத்  
தாண்டியதால்..
அழுத்தம்.... 
கூடிப்போய்..
கர்ணன் இல்லை....
கலியுகத்தில்..
கடன்  அட்டை.....
வழுக்கு மரம்...!

சாண் ஏறி 
முழம் சறுக்கி...
கட்டக் கட்ட...
கடலில் கரைத்த 
பெருங்காயமாய்..!
வாசலில் வந்து 
நிற்காத 
ஈட்டிக் காரனாக...!
மூன்றங்குலம்....
கழுத்தை இறுக்க..
கனவிலும்... 
கடன் தொல்லை...!
மாற்று வழியறியாது....
பல்லாங்குழியாடி..
அட்டையை 
மொட்டையாக்கி...... 
மூச்சுவிட்டேன்...!

கைபேசியில் புது.... அழைப்பு...
"பொங்கல் சலுகையாய்"....
கடன் அட்டைத் திருவிழாவாம்....
பதிவும் இல்லை..
கட்டணமும் இல்லை..
ஒரு லட்சம் ஆரம்ப அளவில்....
இலவசமாய்..
உங்கள் வீடு தேடி வரும்........
எப்போ அனுப்பி வைப்பது..?
சிணுங்கியது மணிக் குரல்...!
...........................................................................
...........................................................................
எனக்குக்..  கைபேசியே... 
வேண்டாம்......!
இணைப்பை துண்டித்து 
தப்பிவிட்டேன் என 
பெருமூச்சு விட்டேன்..!
================================================

ஆயுசு பூரா.... ஆனந்த ராகமாய்...!

 
உறங்கும் உயிரை
அசைத்து விட்டாயே..
சிப்பியின் வாயைத்
திறந்து விட்டாயே..
இதய ஓட்டிற்குள்
ஒளிந்து கொண்டாயே
உன்னையே உலகமாய்
எனக்குள் தந்தாயே.....!

வாசற்கதவில் வெள்ளி
மணியாய்..
இருட்டுச் சுரங்கத்தில்
வைரமணியாய்..
உள்ளங்கைகளில்
ஆயுள் ரேகையாய்..
ஆயுசு பூரா....
ஆனந்த ராகமாய்...! 

பாறை மனதுள்
பசுங்கொடியாய்..
பள்ளிகொண்ட மனதின்
பான்ஜசன்யமாய்..
சிரித்து ரசிக்கும்
சிந்தாமணியே...
உனக்குள் வசிக்கும் 
கற்பகத் தருவே...

ஓங்கி உலகளந்த
பாத மணிசிலம்பே..
ஓயாமல் பேசும்
மௌன குருவே..
ஓடும் ஆறும் உன்
பெயர் பாடுமே..
ஓரங்க நாடகத்தின்
ஒய்யார அரசே..

பாடாத தேனீ
எனக்குள்ளும்
பாட்டுத் தரும்
கலையரசே....
சிற்பி கை நழுவி
என் இதயம்
விழுந்த மாய
உளியே...மந்திரமே

கடல் கண்டெடுத்த
வலம்புரி சங்கே..
கடல்சிப்பி கண்டெடுத்த
சிற்ப உளியே..
பவளப்பாறையின்
மரகத வீணையே..
மந்திர மலைக்குள்
மகத்தான சுவாதி...நீ..

ஓய்ந்து கிடந்த நெஞ்சத்தில்
பன்னீர் தெளித்து
பட்டாடை கட்டிப்
பார்த்த புனிதன் நீ...
எழுந்துவிட்ட இதயத்தில்
இன்ப ஊற்றைத் தேடி
நித்தம் நீராடும்....
கண்ணனும் நீ...!

ராஜ பார்வை

 
கண்ணாடிக் கனவுலகில்
கைமீறிப் பறந்த பட்டம்...
வெட்ட வெளி காற்றில்
எகிறிப் பிடித்தது மேகத்தை..!
 
கூடப் பறந்த உறவுகள்...
மெல்லக் கழன்று கலைய 
உன் மனம் பார்க்கும் திக்கில்
கனவுகள் சுமந்த பட்டம்...!
 
நூல் இழுக்கும் கையோடு....நீ..
நெஞ்சமோ வண்ணத்தோடு..
சுதந்திரக் காற்றில்....
கண்ணாடி பூமி தாண்டி...! 
 
வெட்ட வெளி காற்றோடு 
எகிறிப் பிடித்தது மேகத்தை.. 
கண்ணாடிக் கனவுலகின் 
ராஜ பார்வையே...நீதானோ..!!

"ஆலமரத்துக் கிளிகள்..

"மூடிய கண்களும்
பார்க்கிறதே...
கனவு..! "
----------------------------------
"நெருப்பு
கேட்கிறது உணவு
பசி..! "
------------------------------------
"இளமைக்கு
அணிகலன்
காதல்..! "
-------------------------------------
"நீ
நெருப்பு
முடிவில்
நான் சாம்பல்..! "
-------------------------------------
"திரு தேடும்...
தேவை
திரு மதி..! "
---------------------------------------
"நேற்று தொட்டிலில்
இன்று கட்டிலில்
நாளை கல்லறையில்..!"
---------------------------------------
"மின்சாரம்
இல்லாமலே இயங்கும்
இதயம்..!"
----------------------------------------
குடையின் கீழ் நான்
மழை வருமென
ஏமாற்றியது வானம்..!
-----------------------------------------
"பூமியில்
கையூன்றி எழுந்தது..
மரம்..!"
-----------------------------------------
"சுடர்
அழுதழுது அடங்குது
மெழுகுவர்த்தி..!"
-----------------------------------------

காத்திருக்கும்....காலங்கள்...!


நிலம்...அள்ளி தருகிறது 
நீர்..பாய்ந்து  தருகிறது 
காற்று...வாரித்  தருகிறது 
ஆகாயம்....பொழிந்து தருகிறது 
நெருப்பு.. கொதித்துத் தருகிறது...
எதையுமே..எதிர்பாராமல்...!
அங்ஙனமே.......காத்திருக்கிறது....!
கொடுத்ததை...வாரிக்கொள்ள..!
 

சிலை பேசியது.....

ஞான விளிம்பில் ...
உயிர் நிலைக்க
மோன தவத்தில் 
மனம் லயிக்க..!

மனக்கண் முன்னே 
மாபெரும் சிலை..
மரச்சிலை....கற்சிலை 
பளிங்குசிலை....!

பொற்சிலை 
பிரம்மாண்ட
மூர்த்தம்...
ஏகபத மூர்த்தம்...!

குவிந்த அழகு 
நிறைந்த அழகு..
மனம் உட்புக 
உயிர் கரைய...!

மணி இசைய...
மண் அசைய..
மரம் மகிழ..
காற்றும் ஓத..

அண்டமும் ஆட
அகிலமும் அசங்க.
பேசியது அனைத்தும்...
ஆடியது அனைத்தும்..!

பாடியது பலதும்..
சிலையும் கலையும்...
சிரித்து களிக்க..
கல்லென நான்....!

சிலைக்கு முன்னே...
அடித்த சிலையாகி..
அடங்கிப் போனேன்....
அகிலம்  பேசக் கேட்டு...!
===============================

சுவாதி நட்சத்திரம்

 
உள்ளத்தைத் தொட்டு
உட்புகுந்த கவிதை..
இது நிழல் அல்ல...
நிஜம்...!
உணர்வல்ல....
வாழ்க்கை..!
காலங்கள் ஓடுது
எவருக்கோ...
கோலங்கள் காயுது
யாருக்கோ..
உள்ளம் உருகுது
கண்ணனுக்கு...!

கேட்டதை கொடுப்பவன்
கண்ணன்...
கேட்டதும் கொடுப்பவன்
கண்ணன்...
கேட்காததைக் கொடுப்பவன்
கண்ணன்
கேட்காமலும் கொடுப்பவன்
கண்ணன்...

உன்னதம் கொடுப்பான்
அவன்..
தன்னையும்  கொடுப்பான்
அவன்..
உள்ளத்தைக் கெடுப்பான்
அவன்....!
ஒளிந்து நின்று சிரிப்பான்
அவன்...!..

செல்லரித்த இதயத்தில்
சுவாதி  நட்சத்திரம்
அவனாலே...அவனாலே...!.
நித்தம் பூத்து வாசம்
அவனைத்  தேடி தேடி..
கால்கள் எங்கே நடந்தாலும்...
எந்தன் ..கால்கள்...அவனது
கோபுரவாசலில் தான்..!
காத்திடுவான்....
கண்ணன் என..!

சனி, 12 மே, 2012

மனதுக்கு இனி அவள்....!


வெள்ளம் அடித்துச் செல்ல
ஆற்றில்
தள்ளி விடப்பட்டு
எரியும்
குத்து விளக்கு  !
தனித்து விடப் பட்ட
மணிப் புறா !
சுதந்திரப் புறா அல்ல !
வதங்கிய கூண்டில் 
சிக்கிக் கொண்ட  
சிறகொடிந்து போன 
சித்திரச் சிலை !
முத்திரை இழந்து 
சித்திர வதைக் குள்ளான  
பக்திக் குயில் !
 
தன்னிணையைத் தேடி அலைந்து 
நாடு விட்டு நாடு சென்று
கூடு விட்டுக் கூடு பாய்ந்து
முடிவில்
என் தோளில் வந்தமர்ந்த 
பொன்குயில் !
"என்னவன்" என்றென்னை 
உரிமையாய் 
ஒட்டிக் கொண்டு 
இதயத்தில் 
கூடு கட்டிக் குடியிருக்கும் 
ஜோடிப் புறா ! 
இணையைத்  
தன்னவன் ஆக்கி என்னைச்
சிறையிட்ட
சிற்பச் சிலை !
மனத்துக்கு இனிய வளாய் 
உளத்தில் நிறைபவள் 
ஒளிந்திருந்து விழித்திருந்து
எனக்கு
ஒளி யூட்டும்  
பாவை விளக்கு !
கோயில் விளக்கு !
குத்து விளக்கு !
 
 

வைகை சீதை....

 
மிதிலை நகரத்து நாயகி
மேனகை அல்ல
இந்த ஜானகி ! 
வைகை நதி வற்றி
காவிரிக் கண்ணகியாய்
கோவலன்
கைவிட்ட காரிகை ! 
இராமன்
துரத்தித் பிடித்து 
காட்டுக்கு ரகசியமாய்  
விரட்டி விட்டக் 
கவரி மான் !
சிசுவோடு பால் கொடுக்கும்
பசு மடந்தை ஒரு 
காம தேனு !
 
அன்னியன் காப்பாற்ற  
பின்னிவள்
கற்புக் கணவன்
ஏக மத்தினி விரதன்
அற்பப் பொருளாய் 
மிதிபட்டு 
சிற்பச் சிலை ஆனவள் ! 
கர்ணன் தம்பி இலக்குவன்
காரிகை அறியாமல்
காட்டுக்கு இழுத்துச் செல்வான் 
தங்கத் தேரில் !
அபலைச் சீதாவைக்
காப்பாற்றிக் 
கைதூக்கித் துணையாய் 
கரை ஏற்றி விட்டவன், 
ராமன் 
காலணி சுமந்த
பரதன் !

வீணை மகள்

 Veena.jpg
எத்தனை பேர் கொன்ற பார்வை ?
எத்தனை பேர் ஏங்கும்
எழில் மேனி !
எத்தனை நாள் தவம் கிடந்தார்
இவளை நாடி ?
எத்தனை கலைஞர் ஏமாந்து 
பித்த ரானார் ? 
எத்தனை கடற்படை ஏவிய
விழிகள் இவை ?
எத்தனை வேல்களை அம்பில்
எய்து விட்ட மேனி அழகு  இது ?
எத்தனை காளைகளை ஈர்த்தவை 
இந்த கண்கள் ? 
எத்தனை பேர் நெஞ்சைத்
துடிக்க வைத்த முழுமதி இது ? 
எத்தனை கவிஞர் இதயத்தைப்
புண்படுத்தும் சோகப்
புன்னகை இது ?
மோனா லிசா முகம் !
சுயவர அணங்கு இந்தக் கன்னி !
எத்தனை எத்தனை தேரில் வந்து
மன்னவர் உன்முன் மண்டியிட்டு  
கண்ணீர் விட்டுப் போனார் ?
இறுதியில் தேர்ந்து
மாலை இட்டது என்னவன்
என்று உரிமை கொண்ட
கண்ணனுக்கு !
தன்னவனள் ஆக்க வந்த
முடி சூடா
மன்னவனுக்கு !

வெள்ளி, 11 மே, 2012

அம்மாப் பொண்ணு நான்..!



அம்மா.....உனக்கான
திருநாளாம்...இன்று...
நினைத்துப் பார்க்கிறேன் 

நான்
 உன்னை இன்றும்...!

பத்துத் திங்கள் சுமந்த

பாரம் பத்தாதென்று...
அன்பெனும் பாடத்தை
அரிச்சுவடியாய் பாலோடு புகட்டி..!

பதனிட்டு வளர்த்து....
பண்பை....புகட்டி..
..
அன்றிலிருந்து இன்றுவரை 
பாசத்தோடு தாங்கி...!

உன் முகவரி தேய்ந்தாலும்...
தளராது..எங்களுக்கு..
முகவரிகள் பெற்றுத் தந்தாய்...!

தாயுள்ளம் தயாளம்

என்ற இலக்கணத்தில்
வலம் வருபவள் நீயம்மா..!
முப்பது வயதில்...
ஐவருக்குத் தாயுமானாய் ....

அத்தோடு முத்தாய்ப்பாய்

"கைம்பெண்" ஆனாய்...
அன்றிலிருந்து எங்களுக்கு
தந்தையுமானாய் ......நீ..!

உன் தலையெழுத்து
தவறென்று உன் சுற்றும்
தூற்றுகையில்...துணிந்து
"தடம்" மாறாமல்
எங்கள் தலைகளை
நிமிர்த்தியவள் நீ..!

சந்தித்த துயரங்கள்

மனதில் கரைய....
எங்கள் முகம் பார்த்து
வாழும் மங்கலத்  தாய் நீ...

நீ பெற்ற மக்கள் இன்று
ஆலம்விழுதுபோல்
ஆங்காங்கே ....வேர் ஊன்றி.....
உன்னை அணைத்துத் தாங்க...
நிமிர்ந்த உன் முகத்தில் தான்
எத்தனை வெற்றிவேர்கள்...!

நீ அடையா... கல்வி தகுதி

உவந்த தாய் நீ.....
உவந்தாய் நீ..!

அனைத்தையும்  எமக்காய் ஈந்து.........
ஈவதில் இன்பம் பெற்றவளே..
எழுபது வயது தாண்டியும்
எமகிணையாய்.....வளைய வரும்
நின் அழகு கண்டு நாமே வியந்ததுண்டு..

எங்களுக்கில்லையம்மா...
உன் போல் பொறுமை....
நீ இறைவன் எமக்களித்த  வரம்...
வானமே உன் மனமாய்....

உன் தியாகத்தின் எல்லைக்கு
விளிம்பு ஏது ?
நீ தேக்கி வைத்த
ஆசை ஏதேனும்  சொல்..
நிறைவேற்றுவோம்....நாம்..!

விட்ட குறை...தொட்ட குறை
உலகம் இது....இனியொரு பிறப்பில்
மறுபடி இணைய நேர்ந்தால்...
நீயே எந்தன் சேய் ஆக வேண்டும்....
நான் உனையே சீராட்ட வேண்டும்.....!

அம்மா....இது உனக்கு....
வெறும் கவிதை அல்ல....
நீ கொடுத்த உணர்வுகளுக்கு
நான்
 தரும் உணவு...!