திங்கள், 7 மே, 2012

இது தான் உலகமா?

அறுபதுக்குமேல் 
வாழ்ந்தால்
அப்பா..... அம்மா......
தொல்லையா?
இருபதெல்லாம்
அறுபதைக் கண்டால்
ஏனோ....முகம்
சுளிக்குது.....!

தலைமுறை 
இடைவெளியாம்..
அன்பிற்கா...
இடைவெளி...?
மனசுக்குள்
நெருக்கடி...

சேர்த்து  வைத்த 
சொத்திற்கு..?
வந்திடுமோ...
இடைவெளி....?


இடுப்பில் இருந்த 
குழந்தை தான்..
தோளில் தூக்கிய 
செல்வம் தான்..
இறக்கை முளைத்த 
பறவைகள்..!
கூடு தாண்டி 
நாடு தாண்டி ,,
செல்லும்  போது....
பாசம் தாண்டியும்..
பறந்திடுமோ...?

பேசும்.... எங்கும்
பணம்.....
மட்டுமே பேசும்..!
பாசம் அங்கே 
ஒப்புக்கு தலையாட்டும்
உலகம் நிமிர நிமிர..
உள்ளத்துள் ஊனம்..!

வாழ்க்கை ஓட்டம் 
அன்றும் இருந்தது
கூட்டுக் குடும்பத்தில் 
உணர்வோடு...!

தேடுகிறேன் 
உறவுகளின்
நெருக்கத்தை
எங்கும் 
இறுக்கமான முகங்களே...!

அதிகத் தேவை 
ஆடம்பரமாம்...!
கட்டிலுக்குள் 
முடங்கிக் கிடக்கணுமாம்..
ராமா கிருஷ்ணான்னு 
இருக்கணுமாம்..!

ஓடி ஓடி... ..
உழைத்த உடல் .!
பார்த்து பார்த்து 
செய்த மனம் இது..!
குரங்காய் தாவி 
பழக்கபட்ட குணம்..
ஓரிடத்தில் அடங்குமா...? 
தவிக்கிறது
பாச வார்த்தைக்காக 
நித்தம் ஏங்கி..!

பருவங்கள் கடந்தாலும் 
புத்தி சொல்ல 
தகுதியில்லையாம்..!
கணினி உலகத்தில்
பெருசுக்கெல்லாம்.. 
என்ன தெரியும்..?
மனக்கணக்கும் 
வாய்ப்பாடும் 
தேவையில்லையாம்....!

செல்லாக் காசுகளாய்...
வெறும் அனுபவம் 
சுமந்த தோல்பெட்டி...!
இருமல் சத்தமும் 
மருந்து வாசமும்
வீட்டுக்குள் வரவே 
பிடிக்கலையாம் பேரனுக்கு....
இளரத்தம் 
எப்படியும் பேசும்....!

ஆற்றாமையும் 
இயலாமையும்
சுய பச்சாதாபம் 
ஏந்த..என் செய்வது..?
என்றறியாத முதிர்ந்த 
நெஞ்சங்கள் தங்கள் 
பழுத்த அனுபவங்களை
குழி தோண்டிப் 
புதைத்து விட்டு..!

தான் கட்டிய 
வீட்டிலேயே 
தனி ஆளாய் ..
விட்டம் பார்த்து..!
தாய்த்தேளின் 
வயிற்றைக் கிழித்து
வெளியேறும் 
குஞ்சுகள் போல்..
நெஞ்சம் கிழித்து 
வெளியேற்றும் 
பிள்ளைகள்...! 

இவர்களுக்கெல்லாம்
அடைக்கலமாய்..
இருப்பது தான்
முதியோர் இல்லங்கள்...!

செய்யாதீர்கள் ..
இதோ போல் 
கொடுமை..
பெற்றவரைப் 
பேணிக்காப்பீர்...
பெற்ற  துணை
உம்மை விட்டால்...
வேறொருவர் 
என்ன செய்வர்..?
================================
ஜெயஸ்ரீ ஷங்கர்,,

என்றும் நினைவிற்கு...
தாயிற் சிறந்த
கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க
மந்திரம் இல்லை...
ஆயிரம் உறவில்
பெருமைகள் இல்லை..
அன்னை தந்தையே
அன்பின் எல்லை....!
=========================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக